திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 12:00 AM GMT (Updated: 21 Aug 2017 9:58 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 12–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி– அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

10–ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி– தெய்வானை அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளினார்.

காலை 6.15 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்த தேர், காலை 6.35 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.

பின்னர் 6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘ போன்ற பக்தி கோ‌ஷங்களை விண்ணதிர எழுப்பியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரின் முன்பாக தெய்வானை யானை சென்றது. கீழ ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக 7.45 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.

பின்னர் 7.50 மணிக்கு வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்த தேர் 8.15 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.

விழாவில் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், உதவி ஆணையர் அருணாசலம், அலுவலக கண்காணிப்பாளர் நாராயணன், திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மனோரஞ்சிதம், கோவில் முன்னாள் அறங்காவலர் ராமச்சந்திரன், காயல்பட்டினம் பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

இரவில் மேல கோவிலில் இருந்து சுவாமி– அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

11–ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவ மண்டகபடிக்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு இரவில் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி– அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் வீதி உலா வந்து மேல கோவில் சேர்கிறார்கள்.

12–ம் திருநாளான நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து, வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் இரவில் சுவாமி– அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.


Next Story