கூட்டு வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்தும் ‘குர்பானி’


கூட்டு வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்தும் ‘குர்பானி’
x
தினத்தந்தி 25 Aug 2017 6:59 AM GMT (Updated: 25 Aug 2017 6:59 AM GMT)

ஹஜ் மாதமான துல்ஹஜ் மாதமும், ஹஜ்ஜுப் பெருநாளும், ஹஜ்ஜின் கேந்திரமாகத் திகழும் மக்கா நகரமும் உலக மக்களுக்கு மனிதநேயத்தின் மாண்பையும், மனித உரிமைகளின் புனிதத்தையும் பறைசாற்றுகிறது.

ஜ் மாதமான துல்ஹஜ் மாதமும், ஹஜ்ஜுப் பெருநாளும், ஹஜ்ஜின் கேந்திரமாகத் திகழும் மக்கா நகரமும் உலக மக்களுக்கு மனிதநேயத்தின் மாண்பையும், மனித உரிமைகளின் புனிதத்தையும் பறைசாற்றுகிறது.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுவதன் அடிப் படையே மனிதநேயம் தான். மனிதநேயத்தின் மீதுதான் மக்கா நகர்வலம் வருதலும், ஹஜ்ஜும், ஹஜ்ஜுப் பெருநாளும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

‘உலக நாட்களில் (துல்ஹஜ்ஜின் முதல்) பத்து நாட்கள் மிகச்சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்பது நபிமொழியாகும். (அறிவிப்பாளர்-ஜாபிர் (ரலி), நூல்:ஜாமிஉஸ்ஸஃகீர்)

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கு பேரறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தமது ‘பத்ஹல் பாரி’ எனும் நூலில் அழகான ஒரு விளக்கத்தை பதிவு செய்துள்ளார்கள்.

‘துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களும், அளப்பெரும் கடமைகளுமான 1) இறைநம்பிக்கை 2) தொழுகை 3) நோன்பு 4) ஸகாத் 5) ஹஜ் ஆகிய வணக்க வழிபாடுகள் சங்கமிக்கின்றன. வேறெந்த நாட்களிலும் இவ்வாறு ஐம்பெரும் கடமைகள் சங்கமம் ஆகாது. இந் நிலையைக் கருத்தில்கொண்டே அந்நாட்களுக்கு இப்படிப்பட்ட சிறப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன’.

இதுகுறித்த நபிமொழி வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். ‘நம்முடைய தொழுகையைத் தொழுது (அதன்பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் குர்பானி கொடுக்கிறவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். ஒருவர் தொழுகைக்கு முன்பே அறுப்பது மாமிசத்திற்காக அறுக்கப்பட்டதாகும்’ என குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே, இன்றையதினம் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். நானும், எனது குடும்பத்தாரும் அண்டை வீட்டாரும் சாப்பிட்டு விட்டோம்’ என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அது மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்’ என்று கூறினார்கள்.

பின்னர் அவர் ‘இறைத்தூதர் அவர்களே, என்னிடம் சதைப்பற்றுள்ள இரண்டு ஆடுகளை விடச் சிறந்த, ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?’ என்று கேட்டார்.

‘ஆம், இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது’ என்று நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பாளர் : பராவு பின் ஆஸிப் (ரலி), புகாரி : 983)

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முதன்முதலாக பெருநாளின் சிறப்புத் தொழுகையை தொழ வேண்டும். தொழுகைக்கு பின்பு அல்லாஹ்வுக்காக கால்நடைகளில் சாத்தியமான ஒன்றை குர்பானி கொடுக்க வேண்டும். பெருநாள் தொழுகைக்கு முன்னதாக அறுப்பது உணவுக்காக அறுக்கப்பட்டதாக அமையுமே தவிர குர்பானியாக அமையாது.

‘தியாகத் திருநாள் அன்று முஸ்லிம்கள் செய்யும் வணக்க வழிபாடுகளில் சிறந்தது குர்பானியே ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

உலக முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் குர்பானி கொடுப்பது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. அப்போது, இறைவனின் உத்தரவுக்கு இணங்க, நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது அருமை புதல்வரை ‘மினா’ எனும் இடத்தில் அறுத்துப் பலியிட முன் வந்தார்.

அவரின் இந்த மாசற்ற தியாகத்தை இறைவன் மெச்சும் வண்ணம் உருவானது தான் குர்பானி கொடுக்கும் வழக்கம். உலக முடிவு நாள் வரைக்கும் மக்கள் இந்த தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், முதன்முதலாக ஆட்டை அறுத்துப் பலியிட்ட அவரின் வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் விதமாகவும் இந்த தியாகத்திருநாள் அமைந்திருக்கிறது.

ஒருமுறை நபிகளாரிடம் அவரது தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே, இந்த தியாகப் பிராணிகளின் கலாசாரம் என்ன?’ என்று கேட்டார்கள். ‘இது உங்களின் தந்தை இப்ராகீம் (அலை) அவர்களின் கலாசார வழிமுறை’ என நபி (ஸல்) பதில் அளித்தார்கள்.

‘அவற்றிலிருந்து எங்களுக்கு என்ன பயன்?’ என மீண்டும் வினவ, ‘அவற்றின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு’ என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பாளர் : ஜைத் பின் அர்கம் (ரலி), நூல்: அஹ்மது)

குர்பானியின் மாமிசங்களை தமக்குப் போக மீதமுள்ளவற்றை சொந்தங்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், ஏழை எளியோருக்கும் வழங்கி அனைவரும் கூடி, மகிழ்ந்து கொண்டாடப்படும் வழிமுறை கூட்டு வாழ்க்கையின் அவசியத்தை திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது.

‘அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்’ (22:28) என்றும்,

‘அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்’ (22:36) என்றும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

குர்பானி கொடுப்பவர், கால்நடைகளின் தோல்களையும், அவற்றின் கடிவாளங்களையும், ஏழை எளியோருக்கு, வறுமையில் வாடுபவர்களுக்கு தானமாக வழங்கி அவர்களின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள், அவற்றில் அறுபத்தி மூன்று ஒட்டகங்களை தமது திருக்கரத்தால் அறுத்தார்கள்; பிறகு அவற்றின் தோல்களையும், கடிவாளங்களையும் ஏழைகளுக்கு பங்கீடு செய்யும்படி என்னை வேண்டினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் தியாகத் திருநாள் பண்டிகை முக்கியமான மூன்று அம்சங்களை வலியுறுத்து கிறது.

முதலாவது, மனித நேயத்தை வலியுறுத்துகிறது. பெருநாள் தினம் புனிதமானது போன்று ஒவ்வொருவரின் உயிரும், உடமையும், மானமும் புனிதம் நிறைந்தது. யாரும் யாரின் மீதும் அத்துமீறி நடந்து கொண்டு அவர்களின் புனிதங்களை பாழாக்கிவிடக்கூடாது.

இரண்டாவது, ‘குர்பானி’ என்பது கூட்டுவாழ்க்கையின் அவசியத்தை உணர்த்துகிறது. நாம் வாழும் தேசத்தில் சாதி, மதம் கடந்து கூட்டு சேர்ந்து வாழ்ந்து கோடி நன்மைகளைப் பெற வேண்டும்.

மூன்றாவது, பசியையும், வறுமையையும் போக்க உதவும் தியாக திருநாளாக அமைகிறது.

பசிக்கும், வறுமைக்கும் எதிராகப் போராடி வளமான உலகை கட்டமைப்பது நமது அனைவரின் கடமையாகும்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

Next Story