ஜென் கதை : புத்தம் என்பது எது?


ஜென் கதை : புத்தம் என்பது எது?
x
தினத்தந்தி 29 Aug 2017 12:30 AM GMT (Updated: 28 Aug 2017 1:14 PM GMT)

புத்த ஞானம் என்பதே ‘எல்லாம் இயல்பு’ என்ற தத்துவத்தைக் கொண்டதுதான். எல்லாமே ஒன்றுதான். அது வேறு, இதுவேறு அல்ல.

புத்த ஞானம் என்பதே ‘எல்லாம் இயல்பு’ என்ற தத்துவத்தைக் கொண்டதுதான். எல்லாமே ஒன்றுதான். அது வேறு, இதுவேறு அல்ல. வேறுபாடுகள் சலனங்களால் நிகழ்பவையே. சலனமற்று இருப்பதே பரிநிர்வாணம், அதுவே முக்தி நிலை. ஜென் குருக்களின் வாழ்விலும், உபதேசங்களிலும் இந்தத் தத்துவங்களே நிரம்பியிருக்கும்.

அந்த ஜென் குரு மிகவும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர், குருவிடம் ‘புத்தர் என்பது என்ன?’ என்றார்.

அதற்கு குரு, ‘விஹாரத்தில் இருப்பது’ என்றார்.

உடனே அந்த நபர் ‘அது வெறும் சிலைதானே?’ என்று கேட்டார்.

‘ஆமாம்’ என்று தயக்கமின்றி பதிலளித்தார் ஜென் குரு.

‘அப்படியானால் எது புத்தர்?’ என்றார் அந்த நபர்.

இப்போது மீண்டும் குரு அதே பதிலையேச் சொன்னார். ‘விஹாரத்தில் இருப்பதுதான்’. அவரது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.

உடனே அந்த நபர் அடுத்த கேள்விக்குச் சென்றார். ‘சுவாமி! புத்தரே பத்து பிறவிகள் எடுத்தாராமே?’.

 அதற்கு ஆமாமென்று தலையசைத்தார் குரு.

‘பத்து பிறவிகள் எடுத்தும், அவரால் புத்த நிலையை அடைய முடியவில்லையாமே’ என்று தனது அடுத்த சந்தேகத்தை வைத்தார் அந்த நபர்.

‘ஆமாம். அதுதான் புத்த நிலை’ என்றார் குரு தீர்மானமான குரலில்.

‘தியானம் இருந்தும், ஏன் அவரால் புத்த நிலையை அடைய முடியவில்லை’ வந்தவர் மேலும் தெளிவு பெற வேண்டி அடுத்த கேள்வியை கேட்டார்.

‘ஏனெனில் அவர் புத்தர்’ என்றார் அதே புன்னகையுடன் குரு.

புத்த நிலை என்பதும், புத்தர் என்பதும் வேறு வேறு. புத்தரை விடவும், புத்தம் உயர்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம். உள்ளுணர்வால் விழிப்புற்று ஒன்றுவதே புத்த நிலை.

Next Story