சோழிகள் காட்டும் அதிசய வழிகள்


சோழிகள் காட்டும் அதிசய வழிகள்
x
தினத்தந்தி 29 Aug 2017 12:30 AM GMT (Updated: 28 Aug 2017 1:43 PM GMT)

சோழி என்று சொல்லும்போது நமக்கு நினைவுக்கு வரும் வி‌ஷயம், ஜோதிட ரீதியான பிரசன்ன முறை பார்ப்பது தான்.

சோழி என்று சொல்லும்போது நமக்கு நினைவுக்கு வரும் வி‌ஷயம், ஜோதிட ரீதியான பிரசன்ன முறை பார்ப்பது தான். உப்புக் கடலின் ஆழங்களில் உருவாகும் சோழிகளில் அராபிய சோழி, புலி சோழி, முட்டை சோழி, கத்தரிப்பூ சோழி, மான் சோழி, பூனை சோழி, பாம்பு தலை சோழி, மோதிர சோழி, பண சோழி, வெள்ளை சோழி என்று பத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. மகாலட்சுமியின் பிறப்பிடமான கடலில் தோன்றிய காரணத்தால், நமது நாட்டில் ஆன்மிக பயிற்சி மற்றும் பூஜைகளுக்கு சோழிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, வீட்டில் மகாலட்சுமிக்கு உரிய பூஜைகளை செய்யும்போது சோழிகளை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. பொதுவாக, நவராத்திரி காலங்களில் வீடுகளுக்கு வரும் பெண்கள், தேவியின் வடிவமாக கருதப்பட்டு மஞ்சள், குங்குமத்தோடு சோழிகளை வழங்குவதும் நமது நாட்டில் பல இடங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

ஆன்மிக அருள்

இன்றைய காலகட்டத்தில் வட இந்திய பெண்கள் தங்களது காக்ரா, துப்பட்டா, சோளி ஆகிய ஆடைகளில் சோழிகளை பல்வேறு விதங்களில் கோர்த்து அலங்காரமாக அணிவதால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று நம்புகின்றனர். மேலும், குர்த்தா, டாப்ஸ், சட்டைகள் ஆகியவற்றிலும் பல வண்ண சோழிகளை கோர்த்து அணிவதும் வழக்கத்தில் உள்ளது. குஜராத்தின் ‘பஞ்சாரா’ பழங்குடியினர் தங்களது மணிக்கட்டுகளில் ‘பிரேஸ்லெட்’ போன்று சோழிகளை கோர்த்து அணிவது நெடுங்கால வழக்கம். இடையில் கட்டும் ‘பெல்ட்டு’ வகைகள், காதுகளில் அணியும் ‘ஸ்டட்கள்’, ‘பென்டன்ட்’ எனப்படும் டாலர்கள் மற்றும் கைகளில் அணியும் காப்புகள் ஆகிய பலவற்றிலும் சோழிகளை பயன்படுத்தினால், ஆன்மிக அருள் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் சோழிகளால் தயாரிக்கப்பட்ட மாலையை தலையை சுற்றி அணிவதால், பொருளாதார வளம் பெருகும் என்றும், ஆடைகளில் கோர்த்து அணிவதால் ராஜ சன்மானம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. உலகின் பல நாடுகளில் திருமணத்தின்போது, சோழிகள் கோர்க்கப்பட்ட ஆடைகள் அணிவதும், பரிசாக தருவதும் நடைமுறையில் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகளின் சில பகுதிகளில் சோழிகளை ஒன்றாக நூலில் கோர்த்து ‘நெக்லஸ்’ போன்று கழுத்தில் பெண்கள் அணிந்து கொள்வது நாகரிகமாக இருக்கிறது. நமது நாட்டிலும் மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இறையருளை பெறுவதற்காக சோழிகள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்லாங்குழி

நமது ஊர்ப்புறங்களில் தமிழ் மண்ணின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ‘பல்லாங்குழி’ பெண்களால் இன்றும் சில பகுதிகளில் விளையாடப்பட்டு வருகிறது. முக்கியமாக பெண்கள் அந்த விளையாட்டை விளையாடுவதில் பல்வேறு ஆன்மிக, பண்பாட்டு காரணங்கள் இருப்பதாக பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது, சோழிகளில் சுண்ணாம்பு சத்தான ‘கால்சியம்’ பெருமளவுக்கு இருக்கிறது. கால்சியத்தின் தொடர்பு அன்றாட வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்படும் பொழுது கெட்ட ஆவிகளின் தொல்லைகள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதாக நம்பிக்கை உண்டு.

சோழிகளை பயன்படுத்தி விளையாடப்படும் பல்லாங்குழியானது, உடல் மற்றும் மனம் ஆகியவற்றை ஆன்மிக ரீதியில் ஒருங்கிணைப்பதாக அறியப்பட்டுள்ளது. பல்லாங்குழி விளையாடும்போது கூர்ந்து கவனிக்கும் திறமை, மனதின் ஒருமுக தன்மை, ஞாபக சக்தி, கண் மற்றும் கைகளின் ஒருங்கிணைந்த இயக்கம் ஆகியவை மேம்படுகின்றன. கை விரல்களில் அமைந்துள்ள ‘மோட்டார் தசைகள்’ வலிமையடைவதோடு ‘டிஸ்லெக்சியா’ போன்ற பாதிப்புகள் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.

சோழிகளை குவியலாக போட்டு, மற்ற சோழிகளுடன் இடிக்காமல் ஒவ்வொரு சோழியாக எடுப்பது கவன ஒருங்கிணைப்புக்கும், விரலுக்கும் ஏற்ற பயிற்சியாக இருக்கும். மேலும், சிறிது சோழிகளை சிறு பையில் எடுத்து கொண்டு, இன்னொருவர் கேட்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப கண்களை மூடியபடி எடுத்து தருவதன் வாயிலாக தொடு உணர்வுகள் கூர்மை பெறும். சோழியை தரையில் குவியலாக கொட்டி, அதை கைகளால் அள்ளுவதன் மூலம் கை விரல்கள் மற்றும் கைகளின் செயல் திறன்கள் வலுவாக மாறும் என்ற வி‌ஷயங்கள் அனைத்தும் சற்றே காலம் கடந்துதான் நமது கவனத்துக்கு தெரிய வந்திருக்கிறது.

பண மதிப்புக்கு சோழிகள்


பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளில் வியாபார ரீதியான தொடர்புகளில் சோழிகள் பணமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் அதிர்ஷ்டத்துக்காக ஆடைகளில் கோர்த்து அணிவது, மாலையாக அணிவது, மோதிரமாக அணிவது, இடுப்பில் அணிவது என்று ஆபரணமாக சோழிகள் பயன்பட்டிருக்கின்றன. இந்திய பெருங்கடல் பகுதிகள், பசிபிக் கடல் பகுதிகள், மாலத்தீவு கடற்பகுதிகள் ஆகிய இடங்களில் சோழிகள் கிடைக்கின்றன. நமது இந்திய பெருங்கடலில் கிடைக்கும் சோழிகள் மிக நீண்ட வருட பாரம்பரியம் கொண்டவையாக அறியப்பட்டுள்ளன.

சோழிகளை குலுக்கி போட்டு, அவை எவ்விதமாக விழுகின்றன என்பதை கணக்கிட்டு, அதன் வாயிலாக எதிர்கால பலன்களை அறிந்துகொள்ளும் முறையானது பல நூற்றாண்டு  களாக நமது நாட்டில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. ‘பலகரை ஆருடம்’ என்றும் நமது பகுதிகளில் சொல்லப்படும் அவற்றில் பல்வேறு வகைகள் கையாளப்பட்டு வருகின்றன. அதாவது, ஒரு வி‌ஷயத்தை மனதில் நினைத்து சோழிகளை ஒரு பலகை அல்லது விரிப்பின்மீது குலுக்கி போடும்போது நிமிர்ந்து விழும் சோழிகளின் எண்ணிக்கை பலனை குறிப்பிடுவதாக கருதப்படும். இதற்கு 12 சோழிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

எண்ணிக்கைகள்

பொதுவாக நமது பகுதிகளில் சோழிகளை குலுக்கி போடும்போது ஒன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் பதினொன்று சோழிகள் நிமிர்ந்த நிலையில் இருந்தால் மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறுவதோடு, மனதில் மகிழ்ச்சி பெருகும் என்று கணிக்கப்படுகிறது. அதற்கு மாறாக இரண்டு, மூன்று, ஆறு, எட்டு, பத்து மற்றும் பனிரெண்டு ஆகிய எண்ணிக்கை கொண்ட சோழிகள் நிமிர்ந்து இருந்தால் காரிய தாமதம் உள்ளிட்ட பல்வேறு மன உளைச்சல்கள் உண்டாவதாக கணிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் தென் பகுதிகளில் ஆன்மிக சடங்குகளுக்கும், முன்னோர் வழிபாடுகளுக்கும் சோழிகள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதாவது முன்னோர்களின் வழிகாட்டுதல் சோழிகளை பயன்படுத்துவதன் மூலம் கிடைப்பதாக கருதப்பட்டது. பலகை, புல்லால் செய்த ‘மேட்’ அல்லது புனிதமான துணி ஆகியவற்றின்மீது சோழிகளை குலுக்கிப் போட்டு, அவை விழுகின்ற முறைகளுக்கு ஏற்ப பலன்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே மேற்கு ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் ‘ஓபி கணிப்பு’ என்ற முறையை கையாண்டு வந்துள்ளார்கள். அதாவது, நான்கு சோழிகளை மட்டும் குலுக்கி போட்டு அவை விழும் விதங்களுக்கு ஏற்ப, நினைத்த காரியம் நடக்கும் அல்லது நடக்காது என்ற முடிவுக்கு வந்தனர்.

அமெரிக்க பழங்குடியினர்

அமெரிக்க நாட்டு பழங்குடியினரும் சோழிகளை பயன்படுத்தி எதிர்காலத்தை கணிக்கும் முறையை வழக்கத்தில் கொண்டிருந்தனர். தக்க ஆரம்ப கட்ட பயிற்சி முறைகளுக்கு பிறகு தகுதி பெற்ற ஒருவர்தான் பலன்களை சொல்லவேண்டும் என்பது அவர்களது முறையாக இருக்கிறது. பலன் சொல்பவர், தம்மிடம் கேட்கப்பட்ட கேள்வியை, நான்கு சோழிகள் வைத்து மடக்கப்பட்ட கையை வாய்க்கு அருகில் வைத்து, உரக்க சொல்லிய பின்னர் சோழிகளை தரையில் போடுவார். அவ்வாறு போடப்         படும்போது நான்கு சோழிகள் நிமிர்ந்து இருந்தால் காரியம் நடக்கும் என்றும், மூன்று நிமிர்ந்து இருந்தால் சற்று கால தாமதம் என்றும், இரண்டு நிமிர்ந்து இருந்தால் காரிய வெற்றி என்றும், ஒன்று மட்டும் நிமிர்ந்து இருந்தால் காரியம் நடக்காது என்றும் கணிக்கப்பட்டது.

அடுத்த வாரம்: புண்ணியம் பெருக்கும் பஞ்சலோகம்

சுகப்பிரசவத்துக்கு சோழிகள்

இந்தியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய பல நாடுகளில் பெண்மையை பிரதிபலிக்கும் ஆன்மிக வடிவமாகவும், தாய்மை மற்றும் குழந்தைப்பேறு ஆகியவற்றை தரக்கூடிய இயற்கையின் பரிசாகவும் சோழிகள் கருதப்பட்டன. ஜப்பானில் பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்கள் சோழியை தம்முடன் வைத்துக்கொள்வதன் மூலம் சுகப்பிரசவம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், ஆப்பிரிக்க பெண்கள் இடுப்பை சுற்றிலும் சோழிகளை கோர்த்து அணிவதன் மூலம் குழந்தை பேறு உள்ளிட்ட பிரசவம் சம்பந்தமாக சிக்கல்கள் விலகுவதாக நம்புகிறார்கள்.

Next Story