அழகுபடுத்தப்படும் அத்தப்பூ கோலம்


அழகுபடுத்தப்படும் அத்தப்பூ கோலம்
x
தினத்தந்தி 29 Aug 2017 12:30 AM GMT (Updated: 28 Aug 2017 1:47 PM GMT)

ஓணம் திருவிழாவினை 10 நாட்களும் வண்ணமயமாக மாற்றுவது அத்தப்பூக் கோலம் என்றால் அது மிகையாகாது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூக் கோலம் முக்கிய இடம் வகிக்கும்.

ணம் திருவிழாவினை 10 நாட்களும் வண்ணமயமாக மாற்றுவது அத்தப்பூக் கோலம் என்றால் அது மிகையாகாது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூக் கோலம் முக்கிய இடம் வகிக்கும். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும்.

ஓணம் தொடங்கிய இடம்

ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று, கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற பகுதியில் உள்ளது. இத்தலத்தில் வாமன அம்சமாக எழுந்தருளியிருக்கும் திருமால், தெற்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் அருள்  பாலிக்கிறார். ‘திருக்காட்கரை அப்பன்’ என்ற பெயர் கொண்ட இத்தல இறைவன், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி காட்சி தருகிறார். இத்தல தாயாரின் திருநாமம் பெருஞ்செல்வ நாயகி என்பதாகும். வாத்சல்யவல்லி என்ற பெயரும் தாயாருக்கு உண்டு. இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும், மகாலட்சுமிக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த கோவிலின் விமானம் விருத்த விமானம். இங்குள்ள சிவலிங்கத்தை, மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. முதன் முதலாக திருக்காட்கரை அப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட ஓணம் திருவிழா தான், காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறுகிறார்கள். கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள வாமனப் பெருமாளை வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் ‘கபில தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைக் கொண்டுதான், வாமனருக்கு மூன்றடி நிலத்தை மகாபலி தானம் அளித்ததாக கூறப்படுகிறது.

திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகையன்று, அதிகாலையிலேயே நேந்திரம் குலைகளைத் தோளில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிப்பதைக் காணலாம். அந்தக் குலைகள் கோவில் முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. கேரள மக்களின் வீட்டிலும் ஓணம் பண்டிகை நாளன்று மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது.புலிக்களி ஆட்டம்

மலையாளத்தில் ‘களி’ என்பது நடனத்தை குறிக்கும். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனம் ஓணம் பண்டிகையின் 4–ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

அறுசுவை உணவு

‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஓண சத்யா’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெற்றிருக்கும். வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story