சங்கடங்கள் தீர்க்கும் சண்டிகேஸ்வரி


சங்கடங்கள் தீர்க்கும் சண்டிகேஸ்வரி
x
தினத்தந்தி 5 Sept 2017 1:31 PM IST (Updated: 5 Sept 2017 1:31 PM IST)
t-max-icont-min-icon

ஆம்! எலுமிச்சை பழங்களைக் கோர்த்து மாலையாகக் கட்டி, அந்த மாலையைக் கொண்டு போய் அன்னை சண்டிகேசுவரியின் கழுத்தில் அணிவிக்கின்றனர் கன்னிப் பெண்கள்.

லனங்களையும், சங்கடங்களையும் போக்குபவர் அன்னை சண்டிகேஸ்வரி.

ஆம்! எலுமிச்சை பழங்களைக் கோர்த்து மாலையாகக் கட்டி, அந்த மாலையைக் கொண்டு போய் அன்னை சண்டிகேசுவரியின் கழுத்தில் அணிவிக்கின்றனர் கன்னிப் பெண்கள்.

பின்.. தங்கள் மனதில் இருக்கும் சலனங் களையும், வேதனைகளையும் அன்னையிடம் கூறி மனமுருக பிரார்த்தித்துக் கொள்கின்றனர். அன்னையின் அருள் அவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்களின் துயரங்களும் மனச் சலனங்களும் அகலுகின்றன. அவர்கள் மனம் நிம்மதியடைகிறது.

அன்னை சண்டிகேசுவரிதான், தங்கள் துயரங்களையும் சலனங்களையும் போக்கினாள் என்று நம்பும் கன்னிப் பெண்கள், அன்னைக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றியும், ராகு காலத்தில் அர்ச்சனை செய்தும், தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இப்படி சலனங்களைப் போக்கும் சண்டிகேசுவரியின் சன்னிதி எங்கே உள்ளது? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆலய அமைப்பு

தோகூரில் உள்ளது சுந்த ரேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். இறைவி பெயர் மீனாட்சி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் உள் பிரகாரத்தின் வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் பாலதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். அடுத்து உள்ளது நந்தி மண்டபம். அதைக் கடந்தால் மகாமண்டபம். மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அதைத் தொடர்ந்து உள்ள அர்த்த மண்டபத்தை உற்சவர் திருமேனிகள் அலங்கரிக்கின்றன.

வலது புறம் சந்திரசேகர், அம்மன், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருமேனிகளும், இடது புறம் விநாயகர், சீனிவாசப் பெருமாள், சண்டிகேசுவரர், பிரதோச நாயகர் திருமேனிகளும் கொலுவிருக்கின்றன.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிர மணியர், கயிலாசநாதர் தனித் தனி சன்னிதிகளில் அருள்கின்றனர்.

இதையடுத்த சன்னிதியில் பெருமாள் நான்கு கரங்களுடன் இங்கு சேவை சாதிக்கிறார். அவரது வலது மேல் கரத்தில் சக்கரமும் இடது மேல்கரத்தில் சங்கும், வலது கீழ் மற்றும் இடது கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள் பாலிக்கும் அழகே அழகு.

பெருமாளின் சன்னிதியின் எதிரே தனிச் சன்னிதியில் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும், இறைவியின் சன்னிதிக்கு அருகே சண்டிகேசுவரியின் தனிச் சன்னிதியும் உள்ளன. வடகிழக்கு திசையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். கிழக்குப் பிரகாரத்தில் பைரவர் சன்னிதியும் உள்ளது.

ஆராதனைகள்

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் காலை 9½ மணி முதல் 10½ மணி வரையிலும், மாலை 6½ மணி முதல் 7½ மணி வரையிலும் திறந்திருக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகளும் விநாயகரின் வீதி உலா காட்சியும் உண்டு. தைப்பூசம், பிரதோஷம், சோம வாரங்கள், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை, சித்திரை மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தைப்பூசம் அன்று ஆலயத்தின் முன்பு தீமிதித் திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கார்த்திகை தீபத்தன்று இறைவிக்கும், இறைவனுக்கும் சிறப்பு பூஜைகளுடன் சொக்கப்பனை தீபம் ஏற்றும் விழாவும் சிறப்பாக நடைபெறு கிறது. மார்கழி மாதம் முழுவதும் இறைவனுக்கும் இறைவிக்கும் மூன்று கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

திருமண மண்டபம்

இந்த ஆலயம் உள்ள தோகூர், சிறிய கிராமம். இந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டு மங்கல காரியங்களை நடத்த தொலைவில் உள்ள திருவெறும்பூருக்கோ அல்லது திருச்சிக்கோ செல்ல வேண்டும். அவர்களது சிரமத்தை இந்த ஆலயம் குறைத்துள்ளது. ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தைக் கட்டியுள்ளனர். இந்த ஊர் மக்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், காதுகுத்து போன்ற அனைத்து சுபகாரியங்களையும் இந்த மண்டபத்தில் நடத்தி மகிழ்கின்றனர்.

இங்கு சேவை சாதிக்கும் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியிலும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் தங்கள் வேண்டுதல் தவறாது நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

மும்மூர்த்தி தலம்

இந்த ஆலயம் ஒரு மும்மூர்த்தி தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. ஆம்! பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளையும் நாம் ஒரே ஆலயத்தில் தரிசித்து பயன் பெறும் வாய்ப்பு இந்த ஆலயத்தில் உள்ளதல்லவா? எனவே, நாமும் ஒரு முறை தோகூர் சென்று மும்மூர்த்திகளையும் தரிசித்து வரலாமே!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், கல்லணையில்இருந்து 1½ கி.மீ தொலைவிலும் உள்ளது இந்த ஆலயம்.

-ஜெயவண்ணன்

Next Story