இஸ்லாம் - ‘கட்டை அவிழ்த்து விடுங்கள்’


இஸ்லாம் - ‘கட்டை அவிழ்த்து விடுங்கள்’
x
தினத்தந்தி 5 Sep 2017 8:05 AM GMT (Updated: 5 Sep 2017 8:05 AM GMT)

குற்றச்செயல்களில் தனிமனிதனாக ஈடுபடுபவரைவிட கும்பலாக ஈடுபடுபவர்களே அதிகம். கும்பல் மனோபாவம் அசட்டுத் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும்.

குற்றச்செயல்களில் தனிமனிதனாக ஈடுபடுபவரைவிட கும்பலாக ஈடுபடுபவர்களே அதிகம். கும்பல் மனோபாவம் அசட்டுத் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். அசட்டுத் துணிச்சலையும் கொடுக்கும். மக்களிடையே வேகமாக வளர்ந்து வரும் இந்தக் கும்பல் மனோபாவம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது மட்டுமல்ல, யார் குற்றவாளி என்றே தீர்மானிக்க முடியாது.

அனாச்சாரமும், ஆபாசமும் நிறைந்த ஊருக்கு கும்பலாகச் செல்ல சிலர் நாடுகின்றனர்.

என்ன செய்வது..? அங்கு செல்ல வேண்டாம் என்று உபதேசிக்கலாம். ஆயினும் நமது இரண்டொரு உபதேச வார்த்தைகளைச் செவியுறும் மனோநிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள். அது எப்பயனையும் தராது.

கட்டை அவிழ்த்து விறகுகளைத் தனித்தனியாக பிரிப்பதுதான் ஒரே வழி.

அவர்களிலேயே கொஞ்சம் புத்திசாலி யார் என்று கவனிக்க வேண்டும். பின்னர் அவரிடம் கருணை கலந்த உள்ளத்துடன் தனிமையில் பேச வேண்டும். அந்தத் தவறில் இருந்து கும்பலைத் தடுத்தால் அவர்கள் அனைவருக்குமான நற்கூலி உனக்குக் கிடைக்கும் என்று உபதேசிக்க வேண்டும்.

நாம் சொல்வதை இவர் காதுகொடுத்து கேட்கத் தொடங்கிவிட்டால் அடுத்து வேறொரு நபரைத் தெரிவு செய்து அவரிடமும் இதைப் போன்றே பேசவேண்டும். பின்னர் மூன்றாவது நபர் என்று நமது திட்டத்தைச் செயல்படுத்தலாம். ஆயினும் நமது உபதேசம் குறித்தோ உரையாடல் குறித்தோ மூன்றாவது நபருக்குத் தெரியாமல் கவனமாக இருக்க வேண்டும்.

மக்காவின் ஆரம்ப நாட்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் குறைஷி களுக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியபோது நபிகளாரையும் பனூஹாஷிம் மற்றும் பனூதாலிப் குடும்பத்தினரையும் ஊர்விலக்குச் செய்யும் தீர்மானத்தை குறைஷிகள் முன்னெடுத்தனர். அதை ஒரு பொது அறிவிப்பாக எழுதி கஅபாவின் சுவரில் தொங்கவிட்டனர்.

நபியும் குடும்பமும் விவசாயமோ விளைச்சலோ இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் ஊர்விலக்கு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இலை தழைகளை உண்ணும் அளவுக்கு பசிக்கொடுமை வாட்டி வதைத்தது. உணவின்றி குழந்தைகள் தவித்தனர். ஒன்றல்ல இரண்டல்ல பல மாதங்கள் இதே நிலை நீடித்தது.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தமது சிறிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் கூறினார்கள் (இவரும் ஊர்விலக்கு செய்யப்பட்ட குடும்பத்தினருடன் அங்கு தான் தங்கியிருந்தார்): “சாச்சாவே! குறைஷிகள் எழுதித் தொங்கவிட்டிருக்கும் அந்த ஒப்பந்தத்தைக் கரையான் அரித்துவிட்டது. ‘பிஸ்மிக அல்லாஹும்ம’ என்ற அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எதுவும் அதில் மீதி இல்லை”.

அபூதாலிப் அவர்களுக்கு அந்தச் செய்தி பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. பெருமானார் (ஸல்) அவர்களிடம், “உமது இறைவன் இதனை உமக்கு அறிவித்தானா?” என்று கேட்டார். நபிகளார், ‘ஆம்’ என்று கூறினார்கள்.

அபூதாலிப்: ‘அவ்வாறெனில் அல்லாஹ்வின் மீது ஆணை! குறைஷிகளிடம் இந்த விஷயத்தைக் கூறிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்’ என்றவாறு அங்கிருந்து எழுந்து சென்றார்.

குறைஷிகளிடம் இது குறித்து கூறியபோது உடனே வந்து பார்வையிட்டனர். உண்மையை உணர்ந்துகொண்டனர். ஆயினும் பனூஹாஷிம் குடும்பத்தினர் மீது குறைஷிகளுக்கு கொஞ்சம்கூட இரக்கம் பிறக்கவில்லை. மாறாக மென்மேலும் வெறுப்பையே விதைத்தனர். ஊர்விலக்கு செய்யப்பட்ட பனூஹாஷிம் குடும்பத்தினருக்கோ நிலைமை மென்மேலும் சிக்கலாகிக்கொண்டே சென்றது.

குறைஷிகளில்கூட ஒருசில நல்லவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் ஹிஷாம் பின் அம்ர்.

‘அவர்களைக் காப்பாற்றியே தீரவேண்டும். பனூஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தினருக்கு எதிராக அநீதி இழைப்பதில் குறைஷிகள் அனைவரும் ஒருமித்து நிற்கின்றனர். இதனை முறியடித்தே தீரவேண்டும். என்ன செய்வது?’ என்று யோசித்தார். ஒரு திட்டம் தீட்டினார். அவர், ஸுஹைர் அபீ உமைய்யா, முத்யிம் பின் அதீ, அபுல் பக்தரி பின் ஹிஷாம், ஸம் அத் பின் அல் அஸ்வத் ஆகியோருடன் சென்று தனது கருத்துக்கு ஆதரவு திரட்டினார்.

ஐவரும் தயாராயினர். மக்காவின் ‘ஹுதமுல் ஹஜூன்’ எனும் உயரமான பகுதியில் இரவு வேளையில் ரகசியமாக ஒன்றுகூடினர். ஒப்பந்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்றும் கிழித்து எறிவது என்பது குறித்தும் திட்டம் தீட்டினர்.

மறுநாள் காலை வேளையில் கஅபாவுக்கு அருகே குறைஷிகள் ஒன்று கூடும் சபைக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். ஸுஹைர் பின் உமைய்யாவும் அங்கு வந்தார். கஅபாவில் வலம்வந்துவிட்டு நேராக குறைஷிகள் இருக்கும் சபையை நோக்கி வந்து பெரும் சப்தத்தில் இவ்வாறு கூறினார்:

‘மக்காவாசிகளே! நமது ரத்த பந்த உறவுகள் அங்கே மடிந்துகொண்டிருக்க.. நாமோ நன்றாக உண்ணுகிறோம்.. அழகிய ஆடை அணிகிறோம். அவர்களுடன் எவ்வித கொடுக்கல்-வாங்கலையும் நாம் வைத்துக்கொள்ளவில்லை. பசியால் அவர்கள் அங்கே துடிதுடிக்க இங்கே நாம் சுகம் அனுபவிக்கின்றோம்.. இது அநீதி இல்லையா..? இறைவன் மீது ஆணை! இந்த ஒப்பந்தத்தைக் கிழித்து வீசிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்’.

இதைத்தொடர்ந்து ஸம்அத்பின்அஸ்வத், அல்பக்தரி முத்யிம் பின் அதீ ஆகியோர் ஸுஹைர் பின் உமைய்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

பின்னர் ஹிஷாம் பின் அம்ர் அவர்களும் அவ்வாறே கூற, சபையில் சல சலப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு கிளம்பியது. திகைத்தான் அபூஜஹ்ல். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். பின்னர் கூடி இருந்தவர்களை நோக்கிக் கூறினான்: ‘இது திட்டமிட்ட சதி. இந்தச் சதி இங்கு வைத்தல்ல.. இரவில் வேறு எங்கோ வைத்து தீட்டப்பட்டுள்ளது’.

அபூஜஹ்லின் வார்த்தைகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் முத்யிம் பின் அதீ அவர்கள் கஅபாவை நோக்கி எழுந்து சென்றார். சென்றவர் நேராக கஅபாவில் தொங்கவிடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை கிழித்து வீசுவதற்காக அதை நோக்கி முன்னேறினார். ஆயினும் கரையான் அந்த ஒப்பந்தத்தை ஏற்கனவே தின்று முடித்திருந்தது. ‘அல்லாஹும்ம பிஸ்மிக’ என்ற வாசகத்தைத் தவிர.

இறுதியில் அந்த ஐந்து நபர்களுடைய முயற்சியால் பனூஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தினருக்கு மூன்று வருடங்களாக குறைஷிக் கும்பலால் செய்யப்பட்டு வந்த பெரும் அநீதி முடிவுக்கு வந்தது.

ஊசிபோடுவதாக இருந்தால் ஒரு புத்திசாலி மருத்துவர் என்ன செய் வார் ..? உடலில் எந்த இடத்தில் ஊசிபோடலாம் என்று தோதுவான இடத்தை விரலால் முதலில் தடவிப் பார்ப்பார். பின்னரே ஊசி போடுவார்.

கும்பலாகச் சேர்ந்து தீய செயலில் ஈடுபடுவோரை ஓரளவேனும் கட்டுப் படுத்த வேண்டுமெனில் அதற்கான நடைமுறையைச் செயல்படுத்துமுன் தோதுவான வழிமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கும்பலின் கட்டை அவிழ்த்துவிடுவதுதான் அதற்கான முதல்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி ஒருபோதும் நடைமுறைக்கு ஒத்துவராது. கைமேல் பலனும் கிடைக்காது.

-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story