கைரேகை அற்புதங்கள் - மணப் பொருத்தம்


கைரேகை அற்புதங்கள் - மணப் பொருத்தம்
x
தினத்தந்தி 11 Sep 2017 9:25 AM GMT (Updated: 11 Sep 2017 9:24 AM GMT)

கைரேகைகளை ஆராய்வதன் மூலமாக ஒருவருடைய திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்பதை கணித்து விடலாம்.

 சுக்ர மேட்டிலிருந்து புதன், சனி, சூரியன், குரு வழி பார்வையில் செல்லும் குறுக்கீடு ரேகைகள் பலம் வாய்ந்தவை. அவை திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைப்பவர்களுக்கு நன்மையே தரும். முக்கியமாக சுக்ர மேடு எப்படி அமைந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை அமையப்பெற்றிருக்கும் இடம், செல்லும் திசை ஆகியவற்றையும் அலசி ஆராய வேண்டும். சுக்ர மேட்டின் அம்சங்களை வைத்தே இல்லற வாழ்க்கையின் சாதக, பாதகங்களை யூகித்துவிடலாம்.

பொதுவாகவே கைகளில் சுக்ர மேடு சிறப்பாக அமைந்திருந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும். சுக்ர மேட்டிலிருந்து தொடங்கும் குறுக்கீடு ரேகைக்கும் இல்லற பந்தத்தை நிர்ணயிக்கும் சக்தி உண்டு. அது சுக்ர மேட்டில் இருந்து ஆரம்பித்து ராகு மேடு நோக்கி சீராக பயணித்து சிக்கலின்றி முடிவடைந்திருக்க வேண்டும். அத்தகைய கைரேகை கொண்டவருக்கு அவருடைய விருப்பம் போலவே இல்லற வாழ்க்கை அமையும். அவர் மனதுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதிலும் காதல் திருமணமாக இருந்தால் எத்தகைய பிரச்சினையுமின்றி சுமுகமாக திருமணம் நிறைவேறும் யோகம் இருக்கிறது. அதேபோல் சுக்ர மேடு தெள்ளத்தெளிவாக அமையப்பெற்றவருக்கும் இல்லற வாழ்க்கை இனிமையாகவே அமையும்.

அவருக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். அதே சமயத்தில் சுக்ர மேடு கையின் பெருவிரலுக்கு மிக அருகில் அமைந்திருப்பது நல்லதல்ல. அப்படி அமையப்பெற்ற பெண்கள் சிற்சில கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும். அதேபோல் ஆண்களுக்கும் சுக்ரமேடு பெருவிரலின் அருகில் அமைந்திருப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பெருவிரலில் இருந்து சற்று தூரத்தில்தான் ஆயுள்ரேகை அமைந்திருக்க வேண்டும் என்பது கைரேகை சாஸ்திர நியதியாகும்.

Next Story