இரிஞ்சாலக்குடா பரதன் கோவில்


இரிஞ்சாலக்குடா  பரதன்  கோவில்
x
தினத்தந்தி 15 Sep 2017 1:00 AM GMT (Updated: 14 Sep 2017 7:53 AM GMT)

கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் அமைந்திருக்கும் பரதன் கோவில், இரண்டாவது தலமாகும்.

கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் அமைந்திருக்கும் பரதன் கோவில், இரண்டாவது தலமாகும். இந்த ஆலயம் சென்று வழிபடுபவர் களுக்குத் தடைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வேண்டியவை அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.   

கோவில் அமைப்பு

இரிஞ்சாலக்குடாவில் இருக்கும் பரதன் கோவில் மூன்று பக்கம் வாசல்களுடன் மிகப்பெரிய கோவிலாக அமைந்திருக் கிறது. வட்டவடிவில் அமைந்திருக்கும் இக்கோவிலின் கரு வறையின் மேற்கூரை, கூம்பு வடிவத்தில் இருக்கிறது. இக்கரு வறையில் இருக்கும் பரதன் நான்கு கரங்களுடன், வலதுபக்க மேற்கரத்தில் தண்டம், கீழ் கரத்தில் அட்சமாலை, இடதுபக்க மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் சங்கும் கொண்டு நின்ற நிலையில் விஷ்ணுவாகவே காட்சி தருகிறார்.

இக்கோவிலில் இவரே முழுமுதற்கடவுளாக இருப்பதாகக் கருதப்படுகிறார். எனவே விநாயகர் உள்ளிட்ட வேறு எந்தத் துணைத் தெய்வமும் இக்கோவிலில் இடம் பெறவில்லை. இக்கோவில் முழுவதும் அழகிய ஓவியங்கள், கற்சிலைகள், மரச்சிலைகள் என்று கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருக் கிறது. ஆலயத்தின் சுற்றியுள்ள பகுதியில் நான்கு திருக்குளங் கள் அமைந்திருக்கின்றன. இவற்றுள் கோவில் வளாகத்தில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ‘குலிப்பிணித் தீர்த்தம்’ புனிதமுடையதாக பக்தர்களால் போற்றி வழிபடப்படுகிறது.

கூடல் மாணிக்கம்

இத்தலத்தில் வீற்றிருக்கும் பரதன் ‘கூடல் மாணிக்கம்’ என்றும், ‘சங்கமேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், கூடல் மாணிக்கம் என்னும் பெயரே அனைவரும் பயன்படுத்துவதாக இருக்கிறது. அவர் இப்பெயரால் அழைக்கப்படுவதற்கு மூன்று விதமான காரணங்களைச் சொல்கின்றனர்.

முந்தைய காலத்தில் சாலக்குடி எனும் ஆறும், குருமலி எனும் ஆறும் சேருமிடத்தில் (கூடும் இடம்) இக்கோவில் அமைந்திருந்தது. எனவே கூடலில் அமைந்த கோவிலின் பேரொளி என்னும் பொருளில், இவர் கூடல் மாணிக்கம் என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கின்றனர்.

ஒரு சமயம் இந்த தலத்தில் உள்ள பரதனின் தலையில் இருந்து பேரொளி தோன்றியது. அப்பேரொளி மாணிக்கத்திலிருந்து வரும் ஒளியைப் போன்றிருந்தது. அப்போதைய காயங்குளம் அரசன், தன்னிடமிருந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியுடன் அந்தப் பேரொளியை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினான். அவன் தன்னுடைய அரண்மனையிலிருந்து ஒரு மாணிக்கத்தை எடுத்து வந்து, அதை ஒப்பிட்டுப் பார்க்க, பரதனின் திருவுருவம் அருகில் சென்றான். அப்போது, அந்த மாணிக்கம், பரதனின் திருவுருவத்துடன் சேர்ந்து மறைந்து விட்டது. அன்றிலிருந்து அவர், ‘கூடல் மாணிக்கம்’ என்று பெயர் பெற்றதாக வேறு சிலர் சொல்கின்றனர்.

இன்னொரு விதமான கூற்றையும் பார்த்து விடுவோம்.

ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர், பல்வேறு ஆலயங்களின் சக்தியை ஒரு சங்கில் ஒன்று திரட்டினார். அதைக் கொண்டு போய் தன் ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிலின் மூர்த்தியிடம் சேர்த்து, அவரை பெரும் சக்தியுடையவராக மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் வரும் போது, இக்கோவிலுக்கும் வந்தார். அப்போது அவர் கையில் இருந்த சங்கு எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து போனது. அந்தச் சங்கில் இருந்த இறைசக்திகள் அனைத்தும், இங்கிருந்த பரதனுடன் சென்று கூடியதால், இவர் ‘கூடல் மாணிக்கம்’ என்று பெயர் மாற்றமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தக் கோவில் அதிகாலை 3 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகிறது. இங்கு உச்சிகால பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. இது போல் கேரளக் கோவில்களில் தினமும் நடைபெறும் சீவேலி எனும் உற்சவர் ஊர்வலமும் இங்கு நடத்தப்படுவது கிடையாது. இங்கு பரதன் தவக்கோலத்தில் இருப்பதால், பூஜையின் போது எந்தவிதமான வாசனைத் திரவியங்களும் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் இல்லை. தாமரை மலர், துளசி மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த மலரும் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இக்கோவில் வளாகத்தில் இருக்கும் துளசிச் செடிகளில் விதைகள் கூடத் தோன்றுவதில்லை என்று சொல்கிறார்கள்.  

கூடல் மாணிக்கருக்கு, 101 தாமரை மலர்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் 12 அடி நீளமான தாமரை மலர் மாலையை அணிவித்து வேண்டுபவர்களுக்கு, காரியத் தடைகள் அனைத்தும் விலகும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், இங்கு தாமரை மலர் மாலை வழிபாடு அதிகமாக இருக்
கிறது.



கத்தரிக்காய் படையல்

இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீராத வயிற்று வலியால் துன்பமடைந்து வந்தார். அவரது கனவில் தோன்றிய இவ்வாலய இறைவன், அவரது தோட்டத்தில் விளைந்த கத்தரிக் காய்களில் 101 கத்தரிக்காய்களைக் கோவில் வழிபாட்டிற்கான உணவாகப் படைத்து வணங்கினால், வயிற்று வலி மறைந்து, அதனால் ஏற்பட்ட அனைத்துத் துன்பங்களும் தீரும் என்று கூறியிருக் கிறார். அந்தப் பக்தரும் அது போல் செய்து வயிற்று வலி நீங்கப் பெற்றார் என்கிறார்கள். அன்றிலிருந்து, இக்கோவிலில் தீராத வயிற்று வலியால் துன்பப்படுபவர்கள், 101 கத்தரிக்காய்களைப் படைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.

விழாக்கள்

இக்கோவிலில் மலையாள நாட்காட்டியில் மேட மாதம் (சித்திரை மாதம்) பூரம் தொடங்கி, திருவோணம் முடிய ‘மேடத் திருவிழா’ (சித்திரை விழா) நடத்தப்படுகிறது. இவ்விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் 17 யானைகளுடன் சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதில் நூறு இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசையை வாசிப்பது சிறப்புக் குரியதாகும்.

மலையாள நாட்காட்டியில் துலாம் மாதம் (ஐப்பசி மாதம்) வரும் திருவோண நாளில், பரதனுக்குப் புதிதாக அறுவடையான அரிசியைக் கொண்டு, புத்தரிசி உணவு படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அன்றைய நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் புத்தரிசி உணவு பிரசாதமாக வழங்கப்படு கிறது. மறுநாள் முக்குடி என்ற வயிற்று வலியைப் போக்கும் பிரசாதம் ஒன்றினைப் பக்தர்களுக்கு அளிக்கின்றனர். இந்த முக்குடிப் பிரசாதம், பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்

திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சாலக்குடியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுங்கலூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இரிஞ்சாலக்குடா பரதன் கோவில் உள்ளது. திருச்சூர், சாலக்குடி, கொடுங்கலூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங் களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

அடுத்த வாரம்:  மூழிக்குளம் லட்சுமணன் கோவில்.

குலிப்பிணி  தீர்த்தம்

முந்தைய காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இவ்விடத்தில், குலிப்பிணி என்ற முனிவர் தலைமையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு அவர்களுக்குக் காட்சியளித்து, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.

அவர்கள் தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டு அருள வேண்டும் என்று வேண்டினர். விஷ்ணுவும் முனிவர்கள் கேட்ட வரத்தை அளித்தார்.

அதன் பின்னர், முனிவர்கள் கங்கையை வேண்டி வரவைத்து, கங்கை வெள்ளத்தில் மூழ்கி அனைவரும் இறைவனின் திருவடியைச் சென்றடைந்தனர். கங்கை வந்தடைந்த இடம் இக்கோவில் வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. அந்தக் குளம், இங்கு தவமிருந்த முனிவர்களின் தலைமை முனிவரான குலிப்பிணி என்பவரின் பெயரிலேயே ‘குலிப்பிணி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குலிப்பிணித் தீர்த்தக் குளத்தில், கோவிலில் பூஜை செய்பவர்கள் மட்டுமே நீராடுகின்றனர்.

Next Story