விசுவாசமும் நம்பிக்கையும்


விசுவாசமும் நம்பிக்கையும்
x
தினத்தந்தி 26 Sep 2017 12:15 AM GMT (Updated: 25 Sep 2017 10:41 AM GMT)

‘லூக்கா’ என்ற நற்செய்தியாளரின் நற்செய்தியின் வாசகத்தை மிகவும் கூர்ந்து கவனித்து செவிமடுப்போம்.

நற்செய்தி சிந்தனை

செம்பை சேவியர்


‘லூக்கா’ என்ற நற்செய்தியாளரின் நற்செய்தியின் வாசகத்தை மிகவும் கூர்ந்து கவனித்து செவிமடுப்போம்.

அக்காலத்தில் இயேசு பிரான் ‘கெனசரேத்து’ என்ற ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். பெருந்திரளான மக்கள் கூட்டம், இறை வார்த்தையைக் கேட்பதற்கு, அவரை நெருக்கிக் கொண்டிருந்தது. அப்போது ஏரிக்கரையில், இரண்டு படகுகள் நிற்பதை அவர் கண்டார். மீனவர்கள், படகை விட்டுக் கீழே இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளில் ஒன்று, ‘சீமோன்’ என்பவருக்கு சொந்தமானது. அப்படகில் இயேசு பிரான் ஏறினார். கரையில் இருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்.

பிறகு படகில் அமர்ந்தபடியே, மக்கள் கூட்டத்தை நோக்கி கற்பிக்கத் தொடங்கினார். பேசி முடித்த பிறகு, சீமோனைப் பார்த்து, ‘‘ஆழத்திற்குக் கொண்டு போய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’’ என்று கூறினார்.

சீமோன் அதற்கு மறுமொழியாக, ‘‘ஐயா! இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும், ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்   படியே வலைகளைப் போடுகிறேன்’’ என்றார்.

அப்படியே அவரும் ஏனையோரும் வலைகளைப் போட்டனர். பெருந்திரளான மீன்களைப் பிடித்தனர். வலைகள் கிழியத் தொடங்கின. மற்ற படகில் இருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் ‘சைகை’ காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்தனர். இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. இதைக் கண்ட ‘சீமோன் என்ற இராயப்பர்’ இயேசு பிரானின் கால்களில் விழுந்து, ‘‘ஆண்டவரே! நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய் விடும்’’ என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும், மிகுதியான மீன்களைக் கண்டு திகைப்போடு பார்த்தனர். சீமோனின் பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைப்படைந்தனர்.

இயேசு பிரான், சீமோனை நோக்கி, ‘‘அஞ்சாதே! இந்நாள் முதல், நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்’’ என்று சொன்னார். அவர்கள் தங்கள்,  படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின், அனைத்தையும் விட்டு விட்டு, இயேசு பெருமானைப் பின்பற்றிச் சென்றார்கள்.

விசுவாசமும், நம்பிக்கையும் எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதற்கு, இந்நற்செய்தி ஒரு சான்றாக அமைகிறது.

இயேசு பிரான், ஒரு செய்தியை சீமோனிடம் கூறுவதைச் சற்றுக் கவனியுங்கள்.

‘‘ஆழத்திற்குக் கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’’ என்ற வார்த்தை முதலில், அர்த்தமற்றதாகச் சீமோனுக்குத் தோன்றியிருக்கக் கூடும். காரணம் இரவு முழுவதும் வலைகளைப் போட்டும், மீன்கள் கிடைக்கவில்லை.

இருப்பினும், ‘‘உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’’ என்று சீமோன் கூறுகிறார். இந்த விசுவாசமும், அவர் மேல் உள்ள நம்பிக்கையும், சீமோனை உயர்த்துகிறது. எதிர்காலத்தில் ஆண்டவருக்காக, அவர் தன்னுடைய இன்னுயிரையும் இழந்து விடுவதைக் காண்கிறோம்.

பெருந்திரளான மீன்கள் கிடைத்த தாகவும், வலைகள் கிழிந்து போகும் அளவுக்கு மீன்கள் நிரம்பி வழிந்ததாகவும் நற்செய்தியில் படிக்கிறோம். இதைக் கண்ட சீமோன், இயேசு பிரானைப் பார்த்து, ‘‘ஆண்டவரே! நான் பாவி. என்னை விட்டு அகன்று போய் விடும்’’ என்று கூறுகிறார்.

இதில் இருந்து நாம் உணரும் செய்தி என்ன என்பதைச் சற்று எண்ணிப் பார்ப்போம்.

இரவு முழுவதும் வலைகளைப் போட்டும், மீனே கிடைக்காததால் சற்று யோசித்துக் கொண்டிருந்த சீமோனுக்கு, இயேசு பிரானின் வார்த்தை நம்பிக்கையற்றதாகவே தோன்றியிருக்கலாம். ‘இருந்தாலும்...’ என்று சொல்லி, வலையைப் போடுகிறார். மீன்களை அள்ளுகிறார்.

நம்பிக்கை தரும் வார்த்தையாக அவருடைய வார்த்தை இருந்தது என்பதை அக்காலத்தில் அங்கிருந்தவர்கள் கண்டு கொண்டார்கள். இறுதியாக ஒரு வார்த்தையை இயேசு பிரான் அங்கு சீமோனிடம் கூறுகிறார். இதோ! அந்த வார்த்தை: ‘‘அஞ்சாதே! இந்நாள் முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்’’.

அன்றே இயேசு பிரான் இந்தச் சீடரிடம் கண்டு கொண்டது என்ன?

இவர்தான் திருச்சபையை வழி நடத்தப் போகிறவர் என்பதை மறைவாகச் சொல்வதுபோல் இருக்கிறது. மீன்களைப் பிடிப்பதே சவாலாக இருந்த நேரத்தில், மனிதனைப் பிடிப்பது எளிதான காரியம் அல்ல.

இக்காலத்தில், நல்ல செய்திகளை மனிதரிடம் சொல்லி, அவர்களை நல்வழியில் நடக்கச் செய்வதென்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர முடிகிறது.

முழுக்க முழுக்க நெறி பிறழ்ந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அக்காலகட்டத்தில், இப்படி ஒரு வார்த்தையைக் கூறுகிறார்.

‘‘நீ சென்று மனிதனைப் பிடி’’ என்று அவர் கட்டளையிடவில்லை.

‘‘அஞ்சாதே! நீ, இன்று முதல் மனிதனைப் பிடிப்பவன் ஆவாய்!’’ என்று கூறுகிறார். எவ்வளவு ஆழமான வார்த்தை என்பதை, நாம் உணர வேண்டும்.

‘பயப்படாதே’ என்று முதலில் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் முதலில் ‘தைரியம்’ தேவை என்பதை வலியுறுத்துகிறார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

‘இன்று முதல் மனிதனைப் பிடிப்பவன் ஆவாய்’ என்று அடுத்த வார்த்தைகளால், அவரை ஆட்கொள்கிறார்.

ஆம்! இயேசு பெருமான் ஒரு முடிவு எடுத்து விட்டார். மனிதர்களைப் பிடிப்பதற்கு, இவர்தான் சரியான ஆள் என்பதை உணர்த்துகிறார். வரம் அளிக்கிறார். ‘இன்று முதல்’ என்கிறார்.

இவ்விடத்தில் ‘ஒன்றே செய்; நன்றே செய்; அதுவும் இன்றே செய்’ என்ற வார்த்தைகளை எண்ணிப் பார்ப்போம்.

இவ்வார்த்தைகளைக் கேட்டதும் மகிழ்ச்சியோடு மறுவார்த்தை எதுவும் பேசாமல், படகுகளை அங்கேயே விட்டு விட்டு, அவரைப் பின்தொடர்கிறார்.

இயேசு பெருமானின் மேல் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை இச்செயலின் மூலம் வெளிப்படுகிறது.

இந்நற்செய்தியைப் படிப்போர், உறுதியான விசுவாசமும், நம்பிக்கையும் ஒருவரை உயர்த்தும் என்பதை உணர வேண்டும். நற்செய்தியைப் படிப்பதோடு மட்டும் நின்று விடாமல், நற்செய்தியைப் பரப்புவதற்கு, நம்மால் இயன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மனிதன், மனிதனாக வாழ வேண்டும் என்றால், நல்ல வழியில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

‘நற்செய்தியைப் பரப்புவோர்’ முதலில், வழிகாட்டிகளாக இருந்தாலே போதுமானது. இயேசு பெருமான், நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்ற காரணத்தால்தான், அவர் வாழ்ந்த காலத்தில், பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. போதிப்பவர்கள் எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். பிறர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதை  எண்ணிப் பார்த்து, உயர்வோமாக!

(தொடரும்)

Next Story