பிரபஞ்ச ரகசியங்களை அறிய வைக்கும் ஷாமனிஸம்


பிரபஞ்ச ரகசியங்களை அறிய வைக்கும் ஷாமனிஸம்
x
தினத்தந்தி 10 Oct 2017 2:45 AM GMT (Updated: 9 Oct 2017 1:27 PM GMT)

கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு, டான் ஜுவான் கற்றுத்தந்த பாடங்களும் பயிற்சிகளும் உணர்வுநிலைகளை இந்த அளவு கூர்மைப்படுத்தியதும், முன்னேற்றி இருப்பதும் திகைப்பைத் தந்ததில் வியப்பேதுமில்லை.

கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு, டான் ஜுவான் கற்றுத்தந்த பாடங்களும் பயிற்சிகளும் உணர்வுநிலைகளை இந்த அளவு கூர்மைப்படுத்தியதும், முன்னேற்றி இருப்பதும் திகைப்பைத் தந்ததில் வியப்பேதுமில்லை. ஏன் என்றால் பயிற்சிகளின் போதும், பாடங்களைப் பின்பற்றிய போதும் பல முறை அவர் தடுமாறியிருக்கிறார். ஆரம்பத்தில் மவுனமாய் இருப்பது பெரும் அவஸ்தையாக அவருக்குத் தோன்றியிருக்கிறது. அடுத்தபடியாக சிறிய பிராணிகள், தாவரங்களிடம் பேசி அவை சொல்லும் செய்தி அறிவதில் பல முறை தடுமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு நிலையிலும் வேகமாக வெற்றியடைந்து விடவில்லை போலத் தோன்றினாலும் கூட இந்த அளவு முன்னேறி விட்டோமே என்ற பரவசம் ஏற்பட்டது.

தன்னுடைய நூல் பிரபலமானதைத் தொடர்ந்து அதை எடுத்துக் கொண்டு போய் டான் ஜுவானிடம் கார்லோஸ் காஸ்டநேடா தந்தார். அந்த நூலின் வெற்றி அந்தக் கிழவரைத் திருப்திப் படுத்தி விடவில்லை. அதை அவர் வாங்கியும் பார்க்கவில்லை. ‘எனக்கு இது டாய்லெட் பேப்பராகத் தான் பயன்படும்’ என்று சொன்னார். அது கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு ஆரம்பத்தில் கசப்பாக இருந்தாலும் அதுவும் ‘ஷாமனாக உருமாறப் போகிறவன் அகங்காரம் அடைந்து விடக்கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டது’ என்றே எடுத்துக் கொண்டார். தொடர்ந்து டான் ஜுவானிடம் நிறைய கற்றார்.

சின்னச் சின்ன வி‌ஷயங்களில் கூட டான் ஜுவான் கவனமாகவும், சிந்தனையோடும், வித்தியாசமாகவும் இருப்பதை கார்லோஸ் காஸ்டநேடா உணர்ந்தார். உதாரணத்திற்கு, நடந்து கொண்டே டான் ஜுவான் எப்போதும் பேச மாட்டார். அப்படியே பேச வேண்டும் என்றாலும் ஓரிடத்தில் நின்று தான் பேசுவார். பல சமயங்களில் நீண்ட தூரம் நடந்து பின் மணிக்கணக்கில் இருவரும் மவுனமாக இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அது இமாலய சாதனை போல் இருந்தாலும் பின் கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு அந்த மவுனம் பழகிப் போனது. எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறை வேண்டும், எதையும் முழுமையாக அறிய பொறுமை வேண்டும் என்பதை எல்லாம் தன்னிடம் செய்கை களாலேயே டான் ஜுவான் கற்பித்ததாக கார்லோஸ் காஸ்டநேடா கூறுகிறார்.

டான் ஜுவானின் சக்திகள் எல்லையில்லாதது என்பதைக் கண்கூடாகப் பல முறை கண்டிருப்பதாக கார்லோஸ் காஸ்டநேடா சொல்கிறார். ஒருமுறை அவருடைய கார் சாலையில் திடீரென்று நின்று விட்டதாகவும், அதை எத்தனை முயன்றும் கிளப்ப முடியவில்லை என்றும், ஆனால் அதை டான் ஜுவான் தன் அமானுஷ்ய சக்தியால் கிளப்பி விட்டதாகவும் சொல்கிறார். அதே போல் டான் ஜுவான் அறிமுகப்படுத்திய இன்னொரு சக்தி வாய்ந்த ஷாமன் டான் ஜெனரோ. இவர் கார்லோஸ் காஸ்ட நேடாவுடன் அருகில் இருந்து பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று அடுத்த கணமே அருகே இருந்த மலை உச்சியில் நின்று ஆச்சரியப்படுத்தியதாகச் சொன்னார்.

கார்லோஸ் காஸ்டநேடாவின் முதல் புத்தகம் அடைந்த வெற்றி, அடுத்தடுத்து மூன்று நூல்களை வெளியிடச் செய்தது. அந்த மூன்று நூல்களையும் வேறு பதிப்பாளர் பதித்து மூன்றுமே மிகப்பெரிய வெற்றி கண்டன. A Separate Reality, Journey to Ixtlan, Tales of Power என்ற இந்த மூன்று நூல்களுமே கார்லோஸ் காஸ்டநேடாவைக் கோடீஸ்வரராக மாற்றின. டைம் பத்திரிகை அவரை புரட்சிகரமான மனிதராகப் பாராட்டி எழுதியது.

‘A Separate Reality’ நூலில் தாவரங்களின் பகுதிகளை உட்கொண்டதில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும், அதனால் ஏற்பட்ட சக்திகளின் போக்கையும் கார்லோஸ் காஸ்டநேடா விவரிக்கிறார். ‘Journey to Ixtlan’ நூலில் அந்த தாவரங்கள், போதை சாதனங்கள் இல்லாமலேயே உயர் உணர்வு நிலைக்குப் போக முடிந்த விதத்தை விவரிக்கிறார்.  ‘  Tales of Power  ’ நூலில் டான் ஜுவானும் டான் ஜெனரோவும் கார்லோஸ் காஸ்டநேடாவை ஒரு மலையுச்சிக்கு அழைத்துச் சென்றதாகவும், அந்த மலையுச்சியில் இருந்து அவரை அவர்கள் குதிக்கச் சொன்னதாகவும், குதிக்க முயன்றால் ஷாமனிஸ உச்ச சக்தி அனுபவங்களை அவரால் உணர முடியுமென்று சொன்னதாகவும் சொல்கிறார். அது உண்மையான நிகழ்ச்சி அல்ல குறியீடாகச் சொல்லப்பட்ட ஷாமனிஸ கடைசி பரீட்சை என்றும் சிலர் சொல்கிறார்கள். கிடைப்பது உச்ச சக்திகளா, இல்லை மரணமா என்ற சந்தேகம் யாருக்கும் வராமல் போகாது அல்லவா? ஆனாலும் தான் திரும்பிப் பார்க்கவில்லை என்றும், அந்த மலையுச்சியிலிருந்து குதித்து விட்டதாகவும் கூறி கார்லோஸ் காஸ்டநேடா நூலை முடிக்கிறார். அது ஷாமனாகவே முழுவதுமாக மாறி விடுவதற்கான கடைசிப் பரீட்சை என்று சொல்லப்படுகிறது.

இந்த மூன்று புத்தகங்களுமே கார்லோஸ் காஸ்டநேடாவைப் புகழின் உச்சாணிக்கொம்புக்குக் கொண்டு சென்றன. அதன் பின்னும் எட்டு நூல்களை கார்லோஸ் காஸ்டநேடா எழுதினார். அவையும் பிரபலமாகின. ஆனால்   Richard de Mille   என்ற மனோதத்துவப் பேராசிரியர், கார்லோஸ் காஸ்டநேடா அந்தப் புத்தகங்களில் சொல்லியிருப்பதிலேயே ஒன்றுக்கொன்று முரண் இருப்பதையும், இடையிடையே பேட்டிகளில் சொன்னதற்கும், புத்தகங்களில் சொன்னதற்கும் இடையே பல முரண்பாடுகள் இருப்பதையும் பட்டியல் இட்டுக் காட்டினார். டான் ஜுவான் சொன்னதாகச் சொல்லப்பட்ட அத்தனை உயர்ந்த வி‌ஷயங்களும் இந்தியாவின் யோக சாஸ்திரங்களிலும், ஆசிய தத்துவ விசாரங்களிலும், ஷாமனிஸ பழங்கால நூல்களிலும் சொல்லப்பட்ட வி‌ஷயங்களே என்பதை ஆதாரங்களுடன் எழுதினார். கார்லோஸ் காஸ்டநேடாவை ஆரம்பத்தில் உயர்த்திப் புகழ்ந்த டைம் பத்திரிகையும், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளும் அதன் பின் கார்லோஸ் காஸ்டநேடாவைப் பொய்யர் என்று குற்றம் சாட்டின. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக கார்லோஸ் காஸ்டநேடா பதிலளிக்கவில்லை. டான் ஜுவான் வெளியுலக மனிதர்களுடன் தொடர்பை நிறுத்திக் கொள்ளும்படி சொல்லி விட்டதாகச் சொல்லி, தலைமறைவு வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். பலரும் டான் ஜுவான் என்கிற மனிதரே கற்பனைக் கதாபாத்திரம் தானோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் பதில் அளிக்காமலேயே கார்லோஸ் காஸ்டநேடா 1998–ம் ஆண்டு காலமானார்.

புகழில் கார்லோஸ் காஸ்டநேடா சறுக்கினாலும், அவரது புத்தகங்களின் விற்பனையில் பாதிப்பு இருக்கவில்லை. இன்று வரை அவர் நூல்கள் அமோக விற்பனையிலேயே இருக்கின்றன. அந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் அறிவுரைகள் டான் ஜுவான் சொன்னதோ, இல்லை பலரும் சந்தேகிக்கும் பழங்கால யோக சாஸ்திர, ஷாமனிஸ நூல்களில் இருந்து எடுக்கப்பட்டதோ, எதுவாக இருந்தாலும் சொன்ன எளிமையான விதமும், சொல்லப்பட்டிருக்கும் வி‌ஷயங்களின் உண்மைத்தன்மையும் கார்லோஸ் காஸ்டநேடா என்ற எழுத்தாளரைப் புறந்தள்ளி புத்தகங்களை முன்னிறுத்தி வைத்திருக்கின்றன. அந்த நூல்கள் 17 மொழிகளில் மொழி    பெயர்க்கப்பட்டுள்ளன. கார்லோஸ் காஸ்டநேடாவை குருவாக ஏற்றுக் கொண்டு அவர் சொல்லிக் கொடுத்ததையும் அவருடனான அனுபவங்களையும்   Felix Wolf, Amy Wallace    என்ற இரு எழுத்தாளர்கள் தனித்தனியாக எழுதியிருக்கும் நூல்களும் பிரபலமாக உள்ளன.

தொடரை முடிப்பதற்கு முன் ஷாமனிஸம் எந்தெந்த வகைகளில் தனித்தன்மை வகிக்கின்றது என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஷாமனிஸத்தில் எதிலுமே கட்டாயம் என்பது கிடையாது. ஷாமனாக உருவாகுபவன் ஒரு கட்டத்தில் தன் சக்திகளை இழந்து விட்டாலோ, சலிப்படைந்து விட்டாலோ அதிலிருந்து கவுரவமாகவே விலக அனுமதிக்கப்படுகிறான். ஷாமனாக ஒருவனை உயர்சக்திகள் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட, சில காலப்பயிற்சிக்குப் பின் விலகிக் கொள்வதை அந்த உயர்சக்திகளும் கோபமில்லாமல் ஏற்றுக் கொள்வதாகவே ஷாமனிஸம் சொல்கின்றது. இது போலித்தனம், நடிப்பு ஆகியவற்றை அவசியமில்லாமல் ஆக்குவதால் இதை ஷாமனிஸத்தின் விசே‌ஷ அம்சம் என்றே சொல்ல வேண்டும்.

ஷாமனிஸம் நம்மைச் சுற்றி உள்ள உலகத்தை சூசகமாகப் பார்க்கவும், புத்திசாலித்தனமாகக் கையாளவும் சொல்லிக் கொடுத்து உயர் தத்துவங்களை வாழ்வியல் சார்ந்ததாகவே வைத்திருக்கிறது. இயற்கையின் குறியீடுகளை அறிந்து அறிவார்ந்த வழியில் இயங்குதல், நோய்களின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்தல், மேலோட்டமாக வாழ்ந்து விடாமல் ஆழமாய் இயற்கையை ஒட்டியும், உயர்சக்திகளைத் துணைகொண்டும் வாழ்தல் என்று வாழ்க்கையின் மேலான விஞ்ஞான வழியாகவே இருக்கின்றது. தாவரமாகட்டும், விலங்காகட்டும் மனிதன் தன் உணர்வுநிலையில் சரியாகப் புரிந்து கொள்ளவும், அறியப்படவும் வேண்டியதே என்பதை அழுத்தமாகச் சொல்வது ஷாமனிஸத்தின் தனிச்சிறப்பு.

மனிதன் பிரபஞ்ச சக்திகளின் ரகசியத்தைத் தன் உணர்வுநிலைகளைக் கூர்மைப்படுத்தி அறிந்து கொண்டால் அவனால் அடைய முடியாத உயரங்கள் இல்லை என்று சொல்கிற ஷாமனிஸம், அதற்குச் சிறந்த முறைகளில் வழியும் காட்டுகிறது. புத்திசாலித்தனமும், கூர் உணர்வு நிலையும் உள்ள ஒருவனால் சமுதாயம் பயன்படும் என்றிருந்த ஆரம்ப நிலை ஷாமனிஸம் மாறி, அவரவர் வழியில் ஆராய்ந்து, பிரபஞ்ச விதிகளையும், அது அனுப்பும் தகவல்களையும் உள்வாங்கி உயர்வடைய எண்ணத் தொடங்கியிருக்கும் நவீன ஷாமனிஸம் இன்று பிரபலமடையத் தொடங்கி இருந்தாலும், அதன் அடிப்படை அம்சங்கள் இன்றும் அலட்சியப்படுத்தாமல் அனுசரிக்கப்படுகின்றன என்பதே ஷாமனிஸத்தின் பெரிய வெற்றி.

வூடூ, அகோரிகள், ஷாமனிஸம் குறித்த இந்த அமானுஷ்ய ஆன்மிகத்தில் என்னோடு சேர்ந்து பயணித்த வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன். வணக்கம்!

–நிறைவடைந்தது.

Next Story