‘நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை...’


‘நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை...’
x
தினத்தந்தி 13 Oct 2017 1:00 AM GMT (Updated: 12 Oct 2017 12:37 PM GMT)

‘நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த உங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

‘நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த உங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூர்ணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’. (யோவேல் 2:25,26)

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இந்நாட்களில் சாத்தான் அநேக குடும்பங்களை பலவிதமான போராட்டங்களில், பிரச்சினைகளில் சிக்க வைத்து வெட்கப்பட்டுப் போகும்படிச் செய்கிறான். இதனால் தேவபிள்ளைகள் மிகவும் சோர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விசுவாசத்தில் பலவீனமடைகிறார்கள்.

ஆனால் கர்த்தருடைய பிள்ளையே! நம்முடைய கர்த்தருடைய வார்த்தையை மனப்பூர்வமாய் நம்புங்கள். அவர் உங்களை பார்த்து சொல்லுகிறார், ‘என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’.

‘சாத்தான் தந்திரமாய் சில குடும்பங்களில் நுழைந்து தேவ பிள்ளைகளை வெட்கப்படுத்துகிறான். அவன் தந்திரமுள்ளவன்’ என்று பவுல் மிமி கொரி.2:11–ல் கூறுகிறார்.

யோவான் 10:10–ல் இயேசு சொன்னார், ‘சாத்தான் திருடுகிறவன், கொல்லு கிறவன் மற்றும் அழிக்கிறவன்’.

மேலும் மத். 13:25–ல் சொல்லுகிறது, ‘மனிதன் தூங்கும்போது இரவில் பல விதமான களைகளை விதைப்பான்’. (சிந்தனையில் பயம், திகில், குழப்பம், சந்தேகம், எதிர்மறையான சிந்தனைகள் போன்ற களைகள்).

இவ்வாறு பலவிதங்களில் சாத்தான் தேவபிள்ளைகளை வெட்கப்படுத்து கிறான். அதே வேளையில் நம் அருமை ஆண்டவரும் அவனை வெட்கப்படுத்தி அதனால் நம்மை சந்தோ‌ஷப்படுத்த வல்லவராயிருக்கிறார். சாத்தானை கர்த்தர் வெட்கப்படுத்தின ஒரு சந்தர்ப்பத்தினை உங்களுக்கு எழுதுகிறேன்.

வனாந்தர பாதையில் வெட்கப்படுவதில்லை

பழைய ஏற்பாட்டில் மோவாபியர் எப்போதும் தேவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிற ஜனமாகும். இந்த மோவாபியருக்கு விரோதமாக ஏதோமின் ராஜா, இஸ்ரவேலின் ராஜா மற்றும் யூதாவின் ராஜா மூவரும் இணைந்து மோவாபியரை மேற்கொள்ளப்போகும் பாதையில் வனாந்தரத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வனாந்தரத்தில் தங்களுக்கும் தங்கள் ராணுவத்திற்கும் தண்ணீரில்லாமல் மிகுந்த கஷ்டத்தின் நடுவே கடந்து போனார்கள்.

ஆம் தேவனுடைய பிள்ளையே! நீங்களும் தேவனுடைய பிள்ளையாக இருந்தும் ஏதோ வனாந்தர வழியாய் நடந்து வருவது போல உங்களுடைய சூழ்நிலையும், குடும்ப வாழ்க்கையும் தற்போது காணப்படலாம். வனாந்தரம் ஒருவேளை உங்களுக்கு சோர்வை உண்டாக்கியிருக்கலாம். அவிசுவாசமான வார்த்தைகளை நீங்கள் பேசியிருக்கக் கூடும். ஆனாலும் சோர்ந்து போகாமல் அற்புதத்திற்கு வழி என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

கர்த்தரைத் தேடினார்கள்

‘‘அப்பொழுது யோசபாத், நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா? என்று கேட்டதற்கு, எலியாவின் கை களுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான். இஸ்ர வேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்’’. மிமி  ராஜா.3:11,12

எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே! ‘என் ஜனங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை’ என்று சொன்னவரை தேடுவதற்கு உங்கள் இருதயத்தைத் திருப்புவீர்களா? அன்றைக்கு ராஜாக்கள் தேவனைத் தேடினார்கள். கர்த்தர் ஒரு வழியை உண்டாக்கியது போல நீங்களும் தேடுவீர்களேயானால் உங்களுக்கு ஒரு வழி பிறக்கும்.

கர்த்தர் சொல்வதை மட்டும் செய்யுங்கள்

‘‘அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்’’. மிமி   ராஜா.3:16

எனக்கன்பான சகோதர, சகோதரியே! ஏதோம் வனாந்தரத்தில் மூன்று ராஜாக் களுக்கும் கர்த்தர் செய்த அற்புதம் மகத்துவமானது. தேவனை தேடும் போது எத்தனை பெரிய வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு ஆண்டவர் அளித்தார் என்பதை கீழ்க்காணும் வசனங்களை வாசியுங்கள்.

‘‘நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள். ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும், உங்கள் மிருக ஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம், மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்’’. மிமி ராஜா.3:17,18

நம்முடைய கர்த்தர் வாக்குத்தத்தத்தின் தேவனல்லவா. பொய்யுரையாத நீதியின் தேவனல்லவா. அவர் சொன்னதை கட்டாயம் நிறைவேற்றுவார். ஆனால் அவர் கூறும் அற்புதம் நடைபெற வேண்டுமானால் வனாந்தரமான பள்ளத்தாக்கில் வாய்க்கால் வெட்ட வேண்டியது நம்முடைய வேலையல்லவா? இயற்கையாக வனாந்தரத்தில் ஒருவரும் வாய்க்காலை வெட்டமாட்டார்கள். ஆனால் உலகத்தால் புரிந்து கொள்ள முடியாத காரியங்களில் மகிமையான அற்புதங்களை செய்கிறவர் நம் ஆண்டவர்.

உங்கள் வாழ்விலும் உங்கள் வனாந்தர பாதையில் விசுவாசத்தோடு கர்த்தர் கூறுகிறதை மட்டும் செய்யுங்கள். அன்றைக்கு வனாந்தரத்தை தண்ணீரால் நிரப்பின கர்த்தர் உங்களுக்கும் அற்புதம் செய்வார். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தண்ணீர் 3 ராஜாக்களுக்கும் அவர்களுடைய ராணுவத்திற்கும் மற்றும் மிருக ஜீவன்களுக்கும் தாகத்தை தீர்த்தது.

ஆனால் மோவாபியரின் கண்களுக்கோ அந்த தண்ணீரில் சூரியன் பட்டபோது ரத்தமாய் காட்சியளித்தது. இதனால் மூன்று ராஜாக்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்து அதனால் ஏற்பட்ட ரத்தம் என நினைத்து மோவாபியர் இஸ்ரவேலின் பாளையத்திற்குள்ளே வந்தபோது எளிதில் மூன்று ராஜாக்களும் மோவாபியரை முறியடித்தார்கள். தேவ ஜனங்களுக்கு கர்த்தர் பெரிய ஜெயத்தைக் கட்டளையிட்டார். சத்துருவை வெட்கப்படுத்தினார்.

ஆகவே தேவனுடைய பிள்ளையே! நீங்கள் கடந்து வருகிற வனாந்தர பாதையில் கர்த்தர் உங்களோடிருந்து சத்துருவை வெட்கப்படுத்தி உங்களை சந்தோ‌ஷப் படுத்துவது அதிக நிச்சயம்.

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–54.


Next Story