பகைவரிடம் அன்பு


பகைவரிடம் அன்பு
x
தினத்தந்தி 24 Oct 2017 12:00 AM GMT (Updated: 23 Oct 2017 1:09 PM GMT)

இயேசு பெருமானார், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், அவர் தம் சீடர் களுக்குப் போதித்த நற்செய்திகள் மிகுதி என்பதை நாம் அறிவோம்

நற்செய்தி  சிந்தனை

 - செம்பை சேவியர்


ற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய  நற்செய்தியைக் கேட்போம்.

இயேசு பெருமானார், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், அவர் தம் சீடர் களுக்குப் போதித்த நற்செய்திகள் மிகுதி என்பதை நாம் அறிவோம். மீண்டும் மீண்டும் அவர் தம் சீடர்களுக்குப் போதிக்கும் அடிப்படைக் கருத்துகளை, உற்று நோக்குவோம்.

இயேசு பெருமகனார், தம் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறினார்.

‘‘நான் சொல்கின்றவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும், உங்களுக்குக் கூறுகின்றேன். நீங்கள் உங்கள் பகைவர்களிடம் அன்பாக இருங்கள். உங்களை வெறுக்கின்றவர்களுக்கு, நன்மையைச் செய்யுங்கள். உங்களைச் சபிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உங்கள் ஆசியைக் கூறுங்கள். உங்களை இகழ்ச்சியாகப் பேசுகின்றவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்களை ஒரு கன்னத்தில் அறைகின்றவர்களுக்கு, மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்களின் மேலாடையை எடுத்துக் கொள்பவர், உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ளப் பார்த்தால், அவரைத் தடுக்காதீர்கள்.

உங்களிடம், எவரும் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுங்கள். உங்கள் பொருட்களை எடுத்துக் கொள்வோரிடம் இருந்து, அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.

பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துபவர்களிடமே, நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு அதனால் வரும் நன்மை என்ன?

பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம், அன்பு செலுத்து கிறார்களே!

உங்களுக்கு நன்மையைச் செய்பவர்களுக்கே, நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார் களே!

திரும்பவும் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்து, நீங்கள் கடனைக் கொடுத்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன?

ஏனென்றால், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்துடன், பாவிகளும், பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் பகைவரிடமும், நீங்கள் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

திரும்பக் கிடைக்கும் என்று, எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் கைம்மாறு மிகுதியாக இருக்கும். நீங்கள் உன்னதக் கடவுளின் மக்களாக இருப்பீர்கள்.

ஏனென்றால், அவர் நன்றி கெட்டோருக்கும், பொல்லாதவருக்கும் நன்மை செய்கிறார்.

உங்கள் தந்தையானவர், இரக்கம் உள்ளவராக இருப்பதைப்போல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாக இருங்கள். பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள். அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

மன்னியுங்கள். மன்னிப்பைப் பெறுவீர்கள். கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். நன்றாக அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி, நன்றாய் அளந்து, உங்கள் மடியில் போடுவார்கள்.

நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்.’’

நீண்டதொரு பிரசங்கமாக, இந்நற்செய்தி அருளப்பட்டிருக்கிறது. இந்நற்செய்தி, மனித சமுதாயத்திற்குத் தேவையான ஒன்று.

இந்நற்செய்தியை மிகவும் ஆழமாகவும், நுட்பமாகவும் உணர்ந்து மனித சமுதாயம் தெளிவடைய வேண்டும்.

இவ்வுலகக் கண்ணோட்டத்தில், இவைகள் அத்தனையும், பைத்தியக் காரத்தனமாகத் தோன்றலாம். காரணம், இவ்வுலகம் நிலைத்தது, நாம்தான் எல்லாமே. நம்மை யாரும் அசைத்து விட முடியாது என்றெல்லாம் எண்ணுபவர்கள், முதன் முதலில் இந்நற்செய்தியின் உண்மைத் தன்மையை உணர வேண்டும்.

இயேசு பெருமகனாரின், எல்லா நற்செய்திகளின் சாரம்தான் இந்நற்செய்தி என்பதைப் படிப்போர் உணரலாம்.

‘‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்’’


என்பது பிற்காலத்தில் எழுந்த திருக்குறளின் உயரிய சிந்தனை. இயேசு பெருமான் இதைவிட ஒருபடி மேலாக, ‘‘உங்களை வெறுக்கின்றவர்களுக்கு நன்மையைச் செய்யுங்கள்’’ என்கிறார்.

இந்நற்செய்தியில், ஒவ்வொரு வாசகமும், ஆழமானது. நம்மை நாமே நெறிபடுத்திக் கொள்ள அருளப்பட்டது.

ஆழ்ந்து நுண்ணறிவோடு படிக்கின்றபொழுது, நம்மிடமுள்ள ‘கடினத்தன்மை’ மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். எல்லாவற்றையும் எடுத்து ஆராய்வதை விட, மூன்று கருத்துகளை மட்டும் ஆராய்வோம்.

‘நீங்கள் உங்கள் பகைவர்களிடம் அன்பாய் இருங்கள்’

அடுத்தடுத்து, அவர் கூறும் கருத்துகளுக்கு, இக்கருத்து முத்தாய்ப்பாய் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

பகைவர்களிடம் அன்பாய் இருப்பது, அவ்வளவு எளிதல்ல. பக்குவப்பட்ட மனம் இருந்தால்தான் இதைச் செய்ய இயலும். இயேசு பெருமான் இவ்வுலகில் இதைத்தான் செய்து காட்டினார்.

‘உங்களை ஒரு கன்னத்தில் அறைகின்றவர்களுக்கு, மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.’ என்ற வாசகத்தைப் பலர் வேடிக்கையாகவும், கிண்ட லாகவும் பேசுவதைக் காண்கிறோம். ‘கன்னம்’ மட்டுமே நமக்கு மேலோட்டமாகத் தெரிகிறது. இதற்குப் பொருள் இது அன்று. அந்த அளவுக்கு, உன் பகைவனை நேசி என்கிறார். பகைவனை நேசித்து விட்டால், பகைக்கும் தன்மை உடையவன், என்றாவது ஒருநாள் பகை உள்ளத்தை மாற்றிக் கொண்டுதான் வாழ்வான். பகைவனை வெறுத்து ஒதுக்குகின்றபொழுது, மேலும் மேலும் வெறுப்பைத்தான் கக்குவான். இது இயல்பானது.

உங்களிடம் அன்பு செலுத்துவோரிடம், நீங்கள் அன்பு செலுத்துவது இயல்பானது. அதைச் செய்வதால் என்ன நன்மை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டு பாவிகளும் அப்படித்தானே செய்கிறார்கள் என்று கூறுகிறார்.

அதைப்போல, உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே, நன்மையைச் செய்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன? என்ற வினாவையும் தொடுக் கிறார்.

இப்படி ஒவ்வொரு வினாவாக இந்நற்செய்தியில் தொகுத்து விட்டு, இறுதியில் ஒரு கருத்தைக் கூறுகிறார்.

‘‘நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்’’

‘நான் இப்படி ஆகி விட்டேனே’ என்று அங்கலாய்ப்பவர்களுக்கு, தன்னைத்தானே உணராதவர்களுக்கு, மேற்கண்ட வாசகம்தான், சரியான பதிலாக இருக்கிறது என்பதை உணர்ந்து, இந்நற்செய்தி வழியாகத் தெளிவடைவோம். நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வோம்.

(தொடரும்)

Next Story