ஆன்மிகம்

முருகப் பெருமானுக்கு சக்தி வேல் வழங்கிய அம்மன் + "||" + Amman who gave power to Lord Murugan

முருகப் பெருமானுக்கு சக்தி வேல் வழங்கிய அம்மன்

முருகப் பெருமானுக்கு சக்தி வேல்  வழங்கிய அம்மன்
திருச்செந்தூர் என்றாலே அறுபடை வீடுகளில் 2–ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமான்தான் அனைவரது கண்முன்பும் வந்து நிற்கும்.
திருச்செந்தூர் என்றாலே அறுபடை வீடுகளில் 2–ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமான்தான் அனைவரது கண்முன்பும் வந்து நிற்கும். அதேபோல் சிறப்பு வாய்ந்த மற்றொரு கோவிலும் திருச்செந்தூரில் அமைந்து உள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா?.  ஆம்! அந்த கோவிலின் பெயர் வெயிலுகந்தம்மன் திருக்கோவில்.

இந்த கோவிலில் கொலு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் ஸ்ரீ வெயிலுகந்தம்மன். தல விருட்சம் பன்னீர் மரம். தீர்த்தம்–வதனாரம்ப தீர்த்தம். திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது இக்கோவில்.      

இனி இந்த கோவிலை பற்றியும், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்மனின் சிறப்புகளையும் காண்போம்!.

கந்தபுராணத்தின்படி, முருகப்பெருமான் பத்மாசூரனை அழிப்பதற்கு முன்பே அவருடைய தாய் பராசக்தியானவள் திருச்செந்தூரில் அமர்ந்தருளியிருக்கின்றார். பத்மாசூரனை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வந்து தன் தாயை வணங்கி வேண்டி நிற்க, அன்னையும் கருணை கூர்ந்து தன் மகனுக்கு வெற்றி தரும் சக்தி வேலை கொடுத்தபடியினால், ‘வேல் உகந்த அம்பாள்’ என்று இந்த அம்பாள் அழைக்கப்பட்டார். அதுவே பின்பு பேச்சு வழக்கில் ‘‘வெயிலுகந்தம்மன்” என்று மருவி வழங்கலாயிற்று. அதன்பிறகே அன்னையின் ஆணைப்படி இந்நகரை முருகப்பெருமான் நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.

சூரபத்மனுடன் நடந்தபோரின் போதும் அன்னையே பல வடிவம் கொண்டு போருக்கு உதவினாள். சூரனை அழித்ததினால் ஏற்பட்ட  பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கிட, சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்து தவம் இயற்றும்படி அன்னை ஆணையிட, அதன்படியே சுப்பிரமணியரும் செய்திட்டார்.

பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தையும், ஜபமாலையுடன் தவமியற்றும் கோலத்தில் சுப்பிரமணியர் இருக்கும் கோலத்தையும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றும் காணலாம். அன்னையும், கிழக்கு முகமாக சிவபூஜை செய்யும் தன் மகனை ஆசீர்வதிக்கும் கோலத்தில் பத்திரகாளி அம்மன் அம்சத்தில் அருள்பாலிப்பதை(கோவிலுக்கு சற்று தொலைவில்) காணலாம்.

அன்னைக்கு சிறப்பு மரியாதை அளிக்கும் விதமாக முருகப்பெருமானுக்கு நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாவிற்கு முன்பாக வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் தினந்தோறும் முருகப்பெருமானுக்கு நிவேதன பொருட்கள் எடுக்கும் முன்பாக அன்னை வெயிலுகந்தம்மனுக்கு முதல் மரியாதையாக நிவேதன பொருட்கள் கொடுத்த பிறகே எடுக்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய இரவு, முருகப்பெருமானே சூட்சும உருவில் இத்திருக்கோவில் வந்து தன் அன்னைக்கு பூஜை செய்து அருள் பெற்று வேல் வாங்கி செல்வதாக ஐதீகம். எனவே அன்று இரவு பூஜை செய்யும் பாத்திரங்கள் தயாராக வைக்கப்பட்டு கோவில் திருக்காப்பிடப்படுகிறது.

அம்மன் இவ்வூரின் வடக்கே கோவில் கொண்டுள்ளதால், இவளே ஊர் காளியாகவும் வணங்கப்பட்டு வருகிறாள். சித்திரை மாதத்தில் திருச்செந்தூரில் மற்ற பிற அம்மன் கோவில்களில் கொடை விழா தொடங்கும் முன்பாக அன்னை வெயிலுகந்தம்மனுக்கு மரியாதை செய்த பின்பே கொடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

திருச்செந்தூரின் முக்கியமான பிரசித்தி பெற்ற தீர்த்தமான வதனாரம்ப தீர்த்தம் இங்குள்ளது. இந்த தீர்த்தம் ஏற்பட ஒரு சுவையான கதையும் உண்டு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டில் வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே இருந்து வந்தது. திருச்செந்தூர் வந்து கந்த சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையின் உடல் மனித உடலாகவும், முகம் குதிரை முகமாகவும் காணப்பட்டது. இதனால் மன்னன் மிகவும் கவலை கொண்டு முருகப்பெருமானிடம் வேண்டினான். ஒருநாள் மன்னனின் கனவில் கந்தன் தோன்றி, ‘‘ இந்த குறையை போக்கிட என் அன்னையினால் மட்டுமே முடியும். ஊரின் வடக்கில் உள்ள என் அன்னையை வேண்டிக்கொள். குறை நீங்கும்” என கூறினான்.

மன்னனும் மறுநாளே சென்று அன்னையை தேட, காட்டினில், கயிலாய மலையை போன்ற இடத்தினில் அன்னையை கண்டு தன் குறையை நீக்கும்படி மனமுருக வேண்டினான். அன்னையின் அருகிலேயே குடில் ஒன்றும் அமைத்து அங்கேயே தங்கி விரதம் இருந்தான். இதனால் மன      மகிழ்ந்த அன்னை மன்னனிடம், ‘‘ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையன்று தன் எதிரில் இருக்கும் கடலினில் குழந்தையுடன் சென்று நீராடினால் குழந்தையின் குதிரை முகம் நீங்கி அழகிய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாக கூறினாள்.

அதன்படி வரகுணபாண்டிய மன்னனும் தன்னுடைய பச்சிளம் குழந்தையை எடுத்துக்கொண்டு அன்னையை நினைத்தபடி கடலுக்குள் இறங்கினான். அதுவரை பெரும் அலைகளாக வந்து கொண்டு இருந்த கடலில் இருந்து சிறிய அலைகள் மட்டுமே வர தொடங்கியது. மன்னன் குழந்தையோடு கடலில் தீர்த்தமாடி வரவும், குழந்தையின் முகம் அழகிய பெண் முகமாக மாறியது. இவ்வாறு ஆனபடியினால்தான் இந்த இடம் வதனாரம்ப (வதனம்+ஆரம்பம்= வதனாரம்பம்) தீர்த்தம் என வழங்கப்படலாயிற்று.

இதனால் மனமகிழ்ச்சி அடைந்த மன்னன், குழந்தையின் உடலில் ‘நலுங்கு மஞ்சள்‘(மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்து) பூசி, செவ்வரளி மாலை அணிவித்தும் அலங்காரம் செய்து  அன்னையை தரிசனம் செய்ய சென்றான். அங்கே அன்னையோ, அவளது முகம் மாறி குதிரை முக தோற்றத்தோடு வீற்றிருப்பதை கண்ட மன்னன், ‘என் குழந்தையின் குதிரை முகத்தைப் பெற்றுக்கொண்டு உன் முகத்தை என் குழந்தைக்கு கொடுத்து விட்டாயே. இந்த பாவத்தில் இருந்து என்னை காக்க வேண்டும்’ என்று அழுது வேண்டினான்.

அதற்கு அன்னை, ‘‘என்னிடம் வந்து, யார் என்னை ‘அம்மா’ என்று அழைத்தாலும் அவர்கள் வேண்டியதை கொடுக்காமல் இருக்க என்னால் முடியாது” என்றும், மேலும் நீ செய்த கர்ம பலனின்படி, என்ன துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அதை நான் பெற்றுக் கொண்டேன். உன் கர்ம பலன் தீர்ந்ததும், நான் பெற்ற குதிரை முகம் மாறி விடும்” என்றும் அன்னை கூறினாள். அதுபோலவே சில காலம் கழிந்தபின் அன்னையின் முகம் மாறி தன் முகத்தோடு காட்சியளித்தாள்.

அதன்பிறகு வரகுணபாண்டியமன்னன், அன்னைக்கு கோவில் எழுப்பி, கோவிலுக்காக நிலங்களும், மானியங்களும் எழுதி வைத்தான். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக இன்றும் பெண் பக்தர்கள் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில், அம்மனுக்கு எதிரில் இருக்கும் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி நலுங்கு மஞ்சள் பூசி, செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்குகின்றனர். இப்படி வேண்டினால் அழகு வடிவம் பெறுவதோடு, தீர்க்க சுமங்கலிகளாக இருப்போம் என்பது பெண்களின் நம்பிக்கை.

–நெல்லை வேலவன்.

அம்மன் மீது வீசப்படும் தின்பண்டம்


இந்த கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னைக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். அப்போது தினமும் காலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகள் கடந்து கோவிலுக்குள் நுழையும்போது, ஊரில் இருக்கும் சிறு குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களை அன்னைக்கும் கொடுப்பது போல், அன்னையின் மீது தின்பண்டங்களை எறிகிறார்கள். அதன்பின் கோவிலில் சிறிது நேரம் விளையாடி விட்டு திரும்புகிறார்கள். வீட்டினில் செய்த தின்பண்டங்களை எந்த கோவிலிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதற்கு மாறாக இங்கு மட்டும் அனுமதிக்கப்படுவது வேறெந்த தலங்களிலும் நடைபெறாத அற்புதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் மண்டபத்தினை ‘அம்மன் மண்டபம்’ என்று ஊர் மக்கள் அழைக்கிறார்கள்.

ஆவணி மற்றும் மாசி திருவிழாவின் பத்தாம் திருநாள் அன்று அம்மன் கடலில் தீர்த்தவாரி செய்து முருகப்பெருமான் எதிரில் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி சண்முகருக்கு நேர் எதிர் சேவையாகி தன் மகனுக்கு ஆசிகளை வழங்கி, ‘இனி உனது உற்சவம்(திருவிழா) சிறப்பாக நடைபெற நான் உறுதுணையாக இருப்பேன்’ என்று உறுதி கூறுவதாக ஐதீகம். பின்பு அன்னை மற்றும் சண்முகருக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறுகிறது.