நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்


நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்
x
தினத்தந்தி 15 Nov 2017 5:49 AM GMT (Updated: 15 Nov 2017 5:49 AM GMT)

ஒருவர் தனது இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப- துன்பங்களுக்கு, ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களும், கர்ம வினைகளுமே காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள்.

ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே. ஜாதக தோஷம் இருப்பவர்கள், தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த தோஷங்களை நீக்கிக்கொள்ள முடியும் என்கிறார்கள். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

சூரிய தோஷம்

குளிக்கும் தண்ணீரில் சிவப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும். நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும். அதன்பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

சந்திர தோஷம்

ஒரு சிலர் முக அழகுக்காக, தயிரை முகத்தில் பூசிக்கொள்வார்கள். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும், இதைத் தான் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

செவ்வாய் தோஷம்

திருமணத் தடை ஏற்படுவதற்கு செவ்வாய் முக்கிய காரணமாக இருக்கிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சிலருக்கு நிறைய பிரச்சினைகள் வந்து சேரலாம். இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் ஒன்று இருக்கிறது. வில்வம் பழக் கொட்டையை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். நான்கைந்து குவளை நீரை இதுபோல் குளித்துவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் நீராடலாம். இதனால் செவ்வாய் தோஷம் அகலும்.

புதன் தோஷம்

இந்த தோஷம் நீங்குவதற்கு கடல் நீரோ அல்லது கங்கை நீரோ தேவைப்படும். மஞ்சள் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, அதில் தேனை கலக்க வேண்டும். தொடர்ந்து இந்தக் கலவையை சிறிதளவு கடல் நீர் அல்லது கங்கை நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் குளிக்கும் நீரில் இதனை கலந்துவிட்டு நீராட வேண்டும்.

குரு தோஷம்

கருப்பு ஏலக்காயை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வருவதன் மூலமாக வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

சுக்ர தோஷம்

பச்சை ஏலக்காயை நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை, நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சுக்ர தோஷம் விலகும்.

சனி தோஷம்

கருப்பு எள் வாங்கி அதனை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் சனி தோஷம் நீங்கப்பெறலாம்.

ராகு-கேது தோஷம்

அருகம்புல்லை, நீரில் நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் அதை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் ராகு-கேது தோஷம் அகலும். 

Next Story