நள்ளிரவில் நடைதிறக்கப்படும் ஆலயம்


நள்ளிரவில் நடைதிறக்கப்படும் ஆலயம்
x
தினத்தந்தி 28 Nov 2017 10:38 AM GMT (Updated: 28 Nov 2017 10:38 AM GMT)

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது.

ஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது. இத்தல இறைவன் ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்மனுக்கு சன்னிதி கிடையாது.

முன் காலத்தில் வான் கோபர், மகா கோபர் என இரண்டு முனிவர்கள் இருந்தனர். அவர்களுக்கு ‘இல்லறம் சிறந்ததா? அல்லது துறவம் சிறந்ததா?’ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு சொல்லும்படி சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவரோ, தற்போது பொது ஆவுடையார் ஆலயம் இருக்கும் இடத்தில் காத்திருக்கும் படியும், அங்கு வந்து தீர்ப்பு கூறுவதாகவும் சொல்லி அனுப்பினார்.

அதன்படி இரண்டு முனிவர்களும் இத்தலம் வந்து புளியமரம் ஒன்றின் கீழ் அமர்ந்தனர்.

சிவபெருமான், ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமையில், சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு, இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று முனிவர்கள் இருவருக்கும் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு சொல்வதற்காக வந்த சிவன் என்பதால் ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.

முனிவர்களுக்கு திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் காட்சி தந்ததால், இந்த ஆலயமும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பகலில் நடைதிறக்கப்படுவதில்லை. திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூைஜகளும் நடைபெறும். அப்போது திரையிட்டு இருப்பதால் இறைவனை தரிசிக்க இயலாது. 11.30 மணி அளவில் மீண்டும் நடை அடைக்கப்பட்டு, நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், ஈசனின் தீர்ப்பைப் பெற்ற இரண்டு முனிவர்களின் சன்னிதிகளில் பூஜை செய்யப்படும். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் மீண்டும் சுவாமி சன்னிதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடைசாத்தப்பட்டு விடும்.

பகல் நேரத்தில் கோவில் நடை திறக்கப் படுவதில்லை. அந்த நேரங்களில் சுவாமி சன்னிதியின் கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னிதி கதவையே, இறைவனாக நினைத்து மாலைகள் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். பின்னர் பிரகாரத்தில் இருந்தபடி ஆலமரத்தை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இத்தலத்தில் இறைவன் வெள்ளால மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோவில் நடை திறக்கப்படும் போது, வெள்ளால மரத்தின் முன் பக்கத்தின் ஒரு பகுதியில் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்கரிக்கிறார்கள். மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன் பாக சிவபெருமானின் பாதம் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது.

திருமண வரம், புத்திர பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆலயத்தில் உள்ள மரத்திற்கு தாலி, தொட்டில் கட்டி வேண் டிக்கொள்கின்றனர்.

மற்ற ஆலயங்களில் நடை அடைக்கப்படும் நேரத்தில் இந்த ஆலயம் திறக்கப்பட்டு நள்ளிரவு வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர் சூரிய உதயத்திற்கு முன்பாக நடை அடைக்கப்படும். தமிழர்கள் திருநாளான பொங்கல் அன்று மட்டும் அதிகாலையில் நடை திறக்கப்படும். அன்று இத்தல இறைவனின் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பம்சமாகும்.

Next Story