மனித நேயமே இறை நேசம்


மனித நேயமே இறை நேசம்
x
தினத்தந்தி 6 Dec 2017 8:49 AM GMT (Updated: 6 Dec 2017 8:49 AM GMT)

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

* ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. நபிகள் நாயகம் எழுந்து சென்று மரியாதை செய்தபோது, தோழர்கள் நபிகளாரை நோக்கி, “அவர் யூதராயிற்றே, நீங்கள் ஏன் அவருக்காக மரியாதை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம், “அவர் மனிதராயிற்றே” என்று விடை அளித்தார்.

யூத மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் நபிகள் நாயகம் அவற்றைப் பொருட்படுத்தாது, இறந்து விட்ட ஒரு யூதருக்கு மரியாதை செய்தார். மனித உறவுகளுக்கும், மனித நேயத்திற்கும், மதங்களும், கொள்கைகளும் ஒரு தடையாக இருக்க வேண்டாம் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொள்கை வேறு, மனித நேயம் வேறு என்ற நபிகளாரின் அணுகுமுறை மனித சமூகத்திற்குச் சிறந்த படிப்பினை ஆகும்.

* அபூதர் என்பவரும், பிலால் என்பவரும் நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர்கள். அவர்களுக்கிடையே சிறிய பிரச்சினை எழுந்தது. அபூதர் மிகவும் சினமுற்று அடிமை இனத்தைச் சேர்ந்த கறுப்பு நிற ஆப்பிரிக்கரான பிலாலை நோக்கி, “கறுப்புத் தாய்க்குப் பிறந்தவனே” என்று கூறினார். மனவேதனை தாங்காமல் பிலால், நபிகளாரிடம் சென்று இதனை முறையிட்டார். நபிகள் நாயகம் அவர்கள் அபூதர் அவர்களைக் கூப்பிட்டு இதைப் பற்றி விசாரித்தார்கள்.

நபிகளார்: பிலாலைக் குறித்து இழிவாகப் பேசினீரா?

அபூதர்: ஆம்

நபிகளார்: அவருடைய தாயாரைக் குறை கூறினீரா?

அபூதர்: (மவுனம் சாதித்தார்)

நபிகளார்: அறியாமைக் கால மடமைத்தனம் இன்னும் உம்மிடம் குடி கொண்டிருக்கிறதே.

அபூதரின் முகம் வெளுத்தது. அச்சத்துடன் பெருமானாரிடம் கேட்டார்: “என்னிடம் பெருமை இருப்பதற்கான அடையாளமா இது?”

நபிகளார்: ஆம்.

பின்னர் நபிகள் நாயகம் தன்னை விட கீழானவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அபூதருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பாடத்தைப் பெற்றுக் கொண்ட அபூதர், பிலாலை நோக்கி ஓடினார். அவரது கரம் பற்றி மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டதுடன், பிலாலின் முன்னால் வந்து தன் கன்னத்தை நிலத்தில் வைத்தார். பிலாலின் பாதங்களைத் தம் கைகளால் பிடித்து இவ்வாறு கூறினார்:

“உமது காலால் என் கன்னத்தை மிதியுங்கள். பிலாலே, என் ஆணவம் அடியோடு அழியட்டும்”

அபூதர் அவர்களை பிலால் வாரி அணைத்தார். உச்சி முகர்ந்து, “இறைவன் உம்மை மன்னிப்பானாக” என்று கூறினார். (நூல்: முஸ்லிம்)

இனம், நிறம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது அறியாமையின் அடையாளம் என்பதை உணர்த்துவதாக இச்சம்பவம் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட இனத்தில், நிறத்தில், ஜாதியில் பிறப்பது அவரது கரத்தில் இல்லை. அவரது முயற்சியினாலும் அது விளைந்தது இல்லை. மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடல் அமைப்புகளையும், உணர்வுகளையும், தேவைகளையும் பெற்றிருக்கின்றனர். அப்படியிருக்கையில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது அறியாமை; ஆணவத்தின் அடையாளம். எனவேதான் நிறத்தைச் சொல்லி இழிவுபடுத்திய தோழரை நோக்கி நபிகள் நாயகம், “நீர் இன்னும் அறியாமையில்தான் இருக்கிறீர்” என்று கடிந்து கொண்டார்.

நபிகளார் தன் தோழர் மீது சினமுற்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மனிதர்கள் அனைவரும் சமம் என்ற போதனையைப் பல ஆண்டுகளாகக் கற்பித்த பின்னரும், தமது தோழர் இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்பது பெருமானாரைச் சினம் கொள்ளச் செய்தது.

* மதீனாவில் ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசலை தினமும் ஒரு கறுப்பு நிற மூதாட்டி துப்புரவு செய்வது வழக்கம். பள்ளிவாசலைத் துப்புரவு செய்யும்போது அப்பெண்மணி காட்டிய ஆர்வத்தைக் கண்டு நபிகள் நாயகம் வியந்திருக்கிறார். ஒருநாள் அவர் இல்லாததைக் கண்டு நபிகளார் விசாரித்தார்.

‘அவர் இறந்து விட்டார்’ என்று தோழர்கள் கூறினார்கள்.

‘இதை ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை’ என்று நபிகளார் கேட்டார்கள். “அப்பெண்மணி நேற்று மரணித்தார். உங்களை இரவில் எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை” என்று நபித்தோழர்கள் தெரிவித்தனர்.

மக்களின் கண்களுக்கு வேண்டுமானால் அப்பெண்மணி சாதாரணமானவளாக இருந்திருக்கலாம். ஆனால் நபிகளாரைப் பொறுத்தவரை துப்புரவு செய்யும் அந்தப் பெண்மணி மிக முக்கியமானவள். அப்பெண்மணிக்காகத் தொழுகை நடத்த விரும்பினார். அப்பெண்மணி அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் காட்டுமாறு கேட்டார். தோழர்களுடன் அந்த மூதாட்டியின் மண்ணறைக்குச் சென்று அந்தப் பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்.

“மண்ணறை இருட்டாக இருக்கும். நான் செய்த பிரார்த்தனையால் இறைவன் நிச்சயமாக அதனை ஒளிமிக்கதாக ஆக்குகின்றான்” என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் மனித நேயத்திற்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

இறைவனை நேசிப்பது உண்மையானால், இறைவனின் படைப்புகளையும் நேசிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிகிற மனிதனை நேசிக்காமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிப்பதாகச் சொல்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும்”

“மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால், விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்”

“மனிதர்களை நேசிக்காதவர்களை இறைவனும் நேசிப்பதில்லை” என்று கூறினார்கள், நபிகள் நாயகம் அவர்கள்.

மனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நாடு ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டும். தனது சமூகம், உறவினர்கள், மதத்தவர்கள் ஆகியோரை மட்டும் நேசிப்பது என்பது, உண்மையான மனித நேயம் ஆகாது.

அனைவரையும் நேசிப்பதே மனித நேயமாகும்.

-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்.


Next Story