இயந்திர உலகில் இறைவன்


இயந்திர உலகில் இறைவன்
x
தினத்தந்தி 15 Dec 2017 8:02 AM GMT (Updated: 15 Dec 2017 8:02 AM GMT)

ஆன்மிக வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கைஅல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை.

‘நான் ரொம்ப ஸ்டெடி’ என்று தான் தள்ளாடிக் கொண்டிருக்கும் குடிகாரன் சொல்வான். அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய வாழ்க்கை. டிஜிட்டல் மாயைக்குள் சிக்கித் தவிக்கின்ற இளசுகள் யாரையேனும் நிறுத்தி கேட்டுப் பாருங்கள், ‘நான் அப்படியெல்லாம் இல்லையே’ என்பார்கள்.

‘எப்பவாச்சும் தான் நான் போனையே யூஸ் பண்றேன்’ என்று சொல்கின்ற இளசுகளில் பெரும்பாலானோர், எப்போதாவது தான் போனை தரையிலேயே வைக்கிறார்கள். போனைத் தவுழும் நேரம், பெற்றோரைத் தழுவியிருந்தால் தாய்ப்பாசம் தழைத்திருக்கும். போனைத் தழுவும் பொழுதெல்லாம் துணையைத் தழுவியிருந்தால் குடும்ப உறவு வலுவடைந்திருக்கும்.

அவற்றையெல்லாம் விட்டு விட்டு ஐந்தரை அங்குல வெளிச்சத் திரைகளில் டிஜிட்டல் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் வாழ்க்கையின் இனிமையை இழந்து விடுகின்றனர். ஆனால், அது தான் இன்றைய யதார்த்தம்.

எல்லாமே ‘பாஸ்ட் புட்’ போல சட்டென கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது இளைய சமுதாயம். முகநூலில் முகம் பார்த்து, ‘வாட்சப்’பில் குரல் கேட்டு சந்திப்பதற்கு நாள் குறிக்கும் இள வயதுகள் அவசரத்தின் குடுவைகளில் சோதனைக்கூட அமிலங்களைப் போல உருமாறி அழிகின்றனர்.

உண்மையில் ‘நேரமில்லை’ என நினைக்கும் நாம் செலவிடும் நேரங்களில் பெரும்பாலானவை வீணானவையே. சந்தேகமெனில் ஒரே ஒரு வேலை செய்யுங்கள். உங்களுடைய போனில் வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற அனைத்து உரையாடல், சமூக வலைத்தளங்களை ‘அன் இன்ஸ்டால்’ செய்து விடுங்கள். ஒரு வாரம் கழிந்து திரும்பிப் பாருங்கள், உங்களுக்கு எக்கச்சக்க நேரம் கிடைத்திருக்கும். நீங்கள் இழந்தது என எதுவுமே இருக்காது. அது தான் யதார்த்தம்.

ஆன்மிக வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கைஅல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை.

அன்னை தெரசா ஒருமுறை ஆலயம் சென்று கொண்டிருந்த போது வழியில் ஒரு முதியவர் சாலையோரம் கிடப்பதைக் கண்டு அவருக்கு உதவி செய்ய ஓடினார். கூட இருந்தவர்கள், ‘சர்ச்சுக்கு நேரமாகிறது, திரும்பி வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அன்னையோ, ‘நீங்கள் செல்லுங்கள் நான் இயேசுவை இங்கேயே கண்டு கொண்டேன்’ என்றார்.

நின்று நிதானிப்பவர்களே மனிதர்களில் இயேசுவைக் காண்கின்றனர். இந்த இயந்திரமயமான காலகட்டத்தில் ஆன்மிக வாழ்க்கை செழுமையடைய நாம் என்ன செய்ய வேண்டும்:

அன்புடன் சந்திப்போம்

அன்பின் சந்திப்புகள் அதிகரிக்க வேண்டும். அதுவும் தனிப்பட்ட சந்திப்புகளாக, உரையாடல்களாக, அரவணைத்தல்களாக, அன்புப் பகிர்தல்களாக இருக்க வேண்டும். அதுவே உறவைக் கட்டியெழுப்பும்.

உதாரணமாக, பல ஆண்டுகளாக நாம் சந்திக்காத எத்தனையோ நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். அவர்களை திடீரென ஒரு நாள் சென்று பார்த்து அவர்களோடு சில மணி நேரங்கள் செலவிட்டுப் பாருங்கள். வாழ்வின் உன்னதம் புரியும். அன்பு எத்தனை வசீகரமானது என்பதை அறிய முடியும்.

மனம் விட்டுப் பேசுவோம்

மனம் விட்டுப் பேசுவதற்கு மனமில்லாமலோ, நேரமில்லாமலோ பயணிக்கின்றனர் இன்றைய இளம் தம்பதியர். ‘டைமுக்கு காபி கிடைக்காவிட்டால் கூட டைவர்ஸ் கேட்கிறார்கள்’. இயந்திரத்தனமான வாழ்க்கை அவர்களுடைய இதயங்களுக்கு இடையே தொழில்நுட்பத்தை இட்டு நிரப்புகிறது. இந்த சிக்கல்களிலிருந்து விடுபட, மனம் விட்டுப் பேசும் பழக்கத்துக்கு நாம் திரும்ப வேண்டும். டைப் அடிக்கும் வார்த்தைகளில் அல்ல, கரம் பிடிக்கும் வார்த்தைகளில் தான் அன்பின் ஸ்பரிசம் செழிக்கும் என்பதை உணர வேண்டும்.

இருப்பதைப் பகிர்வோம்

‘மனிதநேயத்தின் வேர்களே பகிர்ந்தலின் கிளைகளில் கனிகளை விளைவிக்கும்’. கடைசியாக எப்போது உங்களிடம் இருந்த உணவையோ, உடையையோ, நேரத்தையோ, பொருட்களையோ பகிர்ந்தளித்தீர்கள் என சிந்தியுங்கள். பழைய ஆடைகளை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுக்கக் கூட மாதக்கணக்கில் தாமதம் செய்கிறோமா இல்லையா? நிதானிப்போம், ‘பகிர்தலோடு வாழ்தலே பரமனோடு வாழ்தல்’ என்பதை உணர்வோம்.

மனமார மன்னிப்போம்

இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த ஒரு முக்கியமான விஷயம் மன்னித்தல். நமது கடந்த தலைமுறையினரிடம் இருந்த பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, விட்டுக் கொடுத்தலோ இந்த தலைமுறையினரிடம் இல்லை. மன்னிப்பை மறுதலித்து வெறுப்பை வளர்க்கவே சமூகமும், ஊடகங்களும் கற்றுத்தருகின்றன. மன்னித்தல் வேண்டுமெனில், நாம் உலகின் போதனைகளை விடுத்து, இறைவனின் போதனைகளை உடுத்த வேண்டும்.

நிஜத்தை அணிவோம்

இயந்திர வாழ்க்கை கொண்டு வரும் முக்கியமான குணாதிசயம் இரட்டை வேடம் போடுதல். அவசரத்தின் கைக்குள் அலைகின்ற வாழ்க்கையில் பொய்யும், கபடமும் இணைந்தே பயணிக்கின்றன. நிஜம் அமைதியாய் வரும், பொய் புயலாய் வரும். நிஜம் தென்றலாய் வருடும், பொய் கனலாய் சுடும். உள்ளுக்குள் ஒன்றை புதைத்து, முகத்தில் ஒன்றைத் தரித்து வருகின்ற போலித்தனங்களை உதறுவோம்.

இறை வார்த்தைகளை மனதில் நடும் போது விளைகின்ற செயல்கள் நல்ல செயல்களாகவே இருக்கும். வெறுப்பின் விரல் பிடிக்காமல், அன்பின் மனம் பிடித்து நடப்போம்.

சேவியர், சென்னை. 

Next Story