சாளரம் வழியே ஈசனை வழிபடும் நந்தி


சாளரம் வழியே ஈசனை வழிபடும் நந்தி
x
தினத்தந்தி 19 Dec 2017 6:19 AM GMT (Updated: 19 Dec 2017 6:19 AM GMT)

வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புதுப்பாடி. இங்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

ஆலயத்தின் உள்ளே நுழைகையில், அக்னி மூலையில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்று நீரைத் தான் ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். கிணற்றின் எதிரே கருவறை மண்டபம் இருக்கிறது.

கருவறையானது விமான அமைப்புடன் உள்ளது. கருவறைக்குள் அருள்மிகு வைத்தியநாத சுவாமி அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதிக்கு எதிரே வெளிப்பிரகாரத்தில் நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது. நந்திக்கு முன்பாக சாளரம் காணப்படுகிறது. அதன் வழியாகத்தான் நந்தி, ஈசனை வழிபடுகிறார்கள். இந்த அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனின் முன் ஒரு நிமிடம் மனமொன்றி நிற்கையில் மனதிலுள்ள பாரங்கள் நீங்கி மனது நிம்மதியடைவதை உணரலாம்.

சுவாமி சன்னிதியை விட்டு வருகையில் கரு வறையின் வலப்புறத்தில் திரிபுர சுந்தரி அம்பாள் சன்னிதி உள்ளது. இந்த அன்னை நின்ற திருக்கோலத்தில் இரண்டு கரங்களில் மலர்கள் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் வரத, அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகின்றார். புன்முறுவல் பூத்த முகத்துடனும், சாந்த சொருபியாகவும், சமர்ப்பிக்கும் குறைகளை உடனே தீர்ப்பவளாகவும் திகழ்கிறார்.

அம்பாள் சன்னிதியை அடுத்து நாம் தரிசிப்பது நவக்கிரக சன்னிதி. வேறெந்த ஆலயத்திலும் இல்லாத அமைப்பாக இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. அம்பாள் சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வெளிப்பிரகாரத்தில் இடது புறத்தின் மூலையில் விமான அமைப்பில் விநாயகர் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். தும்பிக்கையை வாயில் வைத்த கோலத்தில் ஆகாரம் உண்ணும் பாவனையில் எழுந்தருளியுள்ளார்.

விநாயகர் சன்னிதியை அடுத்து பிரகாரம் சுற்றி வருகையில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதியை நாம் வணங்கலாம். இங்கு நின்ற கோலத்தில் சுப்ரமணியர் அருள்பாலிக்கின்றார். அடுத்ததாக இருப்பது ஈசான லிங்க சன்னிதி. இந்த சன்னிதிக்கு வெளியே சிறிய அளவிலான நந்தி, பலிபீடம் இருக்கிறது. காஞ்சி மகாப் பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சுவாமிகள், இந்த ஆலயத்திற்கு மூன்று முறை வந்து, இந்தச் சன்னிதியில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்ததாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஈசான லிங்க சன்னிதியை அடுத்து நாம் தரிசிப்பது கால பைரவர். கருவறை பிரகார கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவபெருமானுக்குப் பின்னால் பெருமாள், பிரம்மா, துர்க்கை எழுந்தருளியுள்ளார்கள். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதியை நாம் தரிசிக்கலாம்.

இவ்வாலயத்தில் தானாக தோன்றிய இரண்டு புற்றுகள் அமைந்துள்ளன. ஆடி வெள்ளி, தை வெள்ளி மற்றும் கருட பஞ்சமி தினங்களில் பக்தர்கள் இந்த புற்றிற்கு விமரிசையாக பூஜை செய்கின்றனர்.

வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சன்னிதியில் மூலவர் சன்னிதிக்கு சற்று முன்பாக வலது புறம் சல்லாப நாகங்களும், இடது புறம் ஐந்து தலை நாகமும் உள்ளன. தம்பதி ஒற்றுமை ஏற்பட, தாம்பத்திய மேன்மை ஏற்பட சல்லாப நாகங்களை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஆலய விசேஷங்கள்

ராகு, கேது பரிகாரத்தலமாகவும், 27 நட்சத்திரங்களில் கடகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு பரிகாரத்தலமாகவும் இவ்வாலயம் திகழ்கிறது. திரு மணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், செல்வம் பெருகவும் வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியரை வழிபட்டு பலனடைகின்றனர்.

இவ்வாலயத்தில் பிரதோஷம், கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி, சஷ்டி, திருவாதிரை, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்பான பூஜை நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன உற்சவம் இவ்வாலயத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்னாபிஷேகம் மற்றும் மகா சிவராத்திரி (நான்கு கால பூஜை) இவைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை நல்ல முறையில் கொண்டாடுகின்றனர்.

இவ்வாலயத்திற்கு ராஜ கோபுர அமைப்பு இல்லை. நந்தவனம் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

மு.வெ.சம்பத், சென்னை.

Next Story