நீதி தரும் நிம்மதி


நீதி தரும் நிம்மதி
x
தினத்தந்தி 22 Dec 2017 12:30 AM GMT (Updated: 21 Dec 2017 8:13 AM GMT)

மனித குலம் நாட்டின் பெயரால் மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் உலகில், அதிகமான அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

மனித குலம் நாட்டின் பெயரால் மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் உலகில், அதிகமான அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அழிவிற்கும் அமைதி இன்மைக்கும் என்ன காரணம்? என்று பார்க்கும்போது, அது நீதி செலுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவே ஆகும்.

எங்கெல்லாம் நீதி நசுக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் அழிவு என்பது தானாகவே வந்து விடுகின்றது. அத்தகைய அழிவை இறைவன் இயற்கையின் சீற்றத்தைக் கொண்டும் ஏற்படுத்தி விடுகின்றான்.

பாரபட்சமின்றி நீதி செலுத்துவதும், அதனை நிலை நாட்டுவதும், உண்மைக்கு சாட்சியாக இருப்பதும், அதனை நேசிக்கும் மனிதர்   களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அது தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ, பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் நீதி தவறக்கூடாது என்பதையும் திருக்குர் ஆன் இவ்வாறு வலியுறுத்துகின்றது:

‘முமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும், அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்’. (4:135)

நீதியை வலியுறுத்தும் திருக்குர்ஆன் ஒரு நாட்டினருக்கோ, ஒரு மொழியினருக்கோ, ஒரு மதத்தினருக்கோ, ஓர் இனத்திற்கோ உரியது அல்ல. அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

‘குர்ஆன்’ என்ற வார்த்தைக்கு ‘ஓதப்படுவது’ என்பது பொருளாகும். அத்தகைய திருக்குர்ஆன் உலகில் உள்ள அனைவராலும் ஓதப்பட வேண்டும், அதன் வழிகாட்டுதலின் படி யாவரும் நேர்வழி பெற வேண்டும் என்பதே அதன் உள்ளார்ந்த கருத்தாகும்.

திருக்குர்ஆன், ‘ஓ மனிதர்களே’ என்றழைக்கின்றது. ‘ஆதமுடைய மக்களே’ என உலக மக்களை அழைத்து பேசுகின்றது. ‘வேதத்தையுடையவர்களே’, ‘விசுவாசம் கொண்ட முமின்களே’ என்றெல்லாம் கூறி நேர்வழியின் பக்கம் மனித குலத்தை திருக்குர்ஆன் அழைத்துக் கொண்டே இருக்கின்றது.

திருக்குர்ஆனின் மேன்மை குறித்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஹசரத் அலி (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:

‘திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதமாகும், அது உலகில் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழியாக இருக்கின்றது’.

‘உங்களுக்கு முன்னர் நடந்துள்ள செய்திகளும், உங்களுக்கு பின்னர் நடக்க போகின்ற நிகழ்வுகளும் அதில் உள்ளது. சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் பரி  காசமானது அல்ல’.

‘அதனை பெருமை கொண்டு (பின்பற்றாது) எவர் விடுவாரோ, அவரை அல்லாஹ் துண்டு துண்டாக்கி விடுவான். குர்ஆனை விட்டு விட்டு, அது அல்லாததில் நேர்வழியை தேடுபவரை (அல்லாஹ்) வழிதவறச் செய்து விடுவான். ஞான உபதேசமான குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு ஆகும்’.

‘இதனை திரும்ப திரும்ப ஓதுவதால் சடைவு ஏற்படாது, குர்ஆனுடைய ஆச்சரியங்கள் முடிவடைந்து விடாது, இதனை ஓதுகின்ற நாவுகள் பிசகி விடாது, இதனை உறுதி கூறியவர் உண்மை சொல்லிவிட்டார்’.

‘இதனை செயல்படுத்தியவர் நன்மை வழங்கப்பட்டவராவார், இதனை கொண்டு தீர்ப்பு செய்தவர் நீதி செலுத்திவிட்டார், இதனை கொண்டு (மக்களை) நேர் வழியில் பக்கம் அழைத்தவர் நேர் வழிகாட்டிவிட்டார்’. (நூல்: மிஷ்காத்).

தன் அறிவை பெரிதாக மதித்து பெருமையுடன் குர்ஆனின் நல்லுபதேசத்தை யார் புறக்கணிக்கின்றார்களோ, அவர்களின் நிலை குறித்து குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது:

‘எந்த மனிதன், கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டு விட்டு அலட்சியமாக இருக்கின்றானோ, அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவிவிடுகின்றோம். அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான்’. (43:36)

சைத்தான் ஒருவருக்கு நெருங்கிய நண்பனாகிவிட்டால் அழிவை தவிர அவர் எதிர்கொள்ளபோவது வேறொன்றுமில்லை. சைத்தானோ பேரழிவில் கொண்டுபோய் சேர்த்து விடுவான்.

எனவே குர்ஆனின் நேர்வழிகாட்டுதலின் படி நடந்து மகத்தான வாழ்வை பெறுவோம். பாவமான காரியங்களில் நடப்பதற்காகவே, நீதியை நாம் தவறவிடுகின்றோம். அதனால் ஏற்படும் நாசம், தரையிலும், கடலிலும் பரவி விட்டதையும், அதன் வேதனையை கண்ட பின்னராவது மனிதன் மனம் திருந்தி இறைவன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையும் குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

‘மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ, அதன் காரணமாக தரையிலும், கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக் கூடும்’. (30:41)

நியாயமாக நடப்பவர்கள் இறைவனை தவிர்த்து வேறு எதற்காகவும் அஞ்சுவதில்லை, நிம்மதியை இழப்பதில்லை. தன்னை சுற்றி எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் அவர்கள் அதனை கண்டு பயப்படுவதில்லை. அத்தகைய நீதி மிக்கவர்களாக நாம் மாறுவோம், மனம் திருந்துவோம்,  நிம்மதியை பெறுவோம்!

மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

Next Story