வேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீனிவாசர்


வேண்டியதைத் தரும் விராலூர்  ஸ்ரீனிவாசர்
x
தினத்தந்தி 22 Dec 2017 1:00 AM GMT (Updated: 21 Dec 2017 8:22 AM GMT)

மணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில்.

விரலியர்கள் வசித்த ஊர் என்பதால், இது விராலூர் ஆனதாக கூறப்படுகிறது. விராலூரை வைத்தே விராலிமலை பெயர் ஏற்பட்டது. இவ்வூரின் தொன்மையைக் குறிக்கிறது.

கி.பி. 9–ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களும், திருமண உறவு கொண்டு வாழ்ந்த வேளிர்களும், விராலூரின் அருகேயுள்ள கொடும்பாளூரில் இருந்து இப்பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயன். இவர் வழி வந்த அழகிய மணவாளதேவன், குமாரவாடி ஜமீன் லெக்கம நாயக்கர், மருங்காபுரி ஜமீன், மதுரை நாயக்கர், குளத்தூர் நமன தொண்டைமான், புதுக்கோட்டை தொண்டைமான் காலங்களிலும் இப்பகுதி மாறி மாறி ஆட்சி செய்யப்பட்டு வந்தது. என்றாலும், விராலூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயமும் போற்றி  பராமரிக்கப்பட்டு வந்தது.

தலவரலாறு

பழங்காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக 27 அந்தணர்கள் பயணமாகினர். இவர்களால் 26 பேர் சைவ அந்தணர்கள். ஒருவர் மட்டும் வைணவர்.

நடைப்பயணமாக வந்தவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த வனப்பகுதியாக இருந்த விராலூர் திருத்தலம் வந்தனர். அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறினர். மறுநாள் காலை அனைவரும் ராமேஸ்வரம் புறப்பட்டபோது, வைணவ அந்தணரைக் காணவில்லை. அவர் எங்கே என்று அனைவரும் தேடியபோது, அங்கே ஓர் அசரீரி ஒலித்தது.

‘உங்களுடன் வந்த திருமால் நான், எனக்கு இந்த தலமும், இயற்கை வளமும் பிடித்துப் போனதால், நான் இங்கேயே தங்கிட விரும்புகிறேன்’ என்று கூறியது. இதனால் மனம் மாறிய 26 அந்தணர்களும், அதே இடத்தில் ஊரின் மேற்குப் பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட அப்பகுதியை ஆண்ட மன்னன் ஆலயம் எழுப்ப உதவிபுரிந்தான். அத்துடன் அந்தணர்களுக்கு நிலதானம் வழங்கியும் கவுரவித்தான். இந்நிலையில், இப்பகுதியை ஆட்சி செய்த கத்தலூர், பேராம்பூர் அழகிய மணவாளத்தேவர், அழகிய ஆலயம் எழுப்பிட உதவினார் என தலவரலாறு கூறுகிறது.

ஆலய அமைப்பு

விர£லூரின் மேற்குப்புறத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அருகே ஏரம்ப விநாயகர் தனிச் சன்னிதி கொண்டுள்ளார். ஆலயத்திற்குள் பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் அமைந்துள்ளன. ஆலயம் விசாலமாகவும், பசுமையாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்திருக்கிறது. கருங்கல்லினால் ஆன மகாமண்டபத்தில் ஆழ்வார்களின் சிலா வடிவங் களும், ஆண்டாளின் சிறு சன்னிதியும் உள்ளது. இதனைக் கடந்ததும், ஸ்ரீதேவி–பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் எளிய வடிவில் அருள்காட்சி வழங்குகிறார். இவரே தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வள்ளல் பிரான்.

இவ்வூரின் ஈசான்ய பகுதியில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த பூமீஸ்வரர், அருகே வடமலையான், குரும்பச்சியம்மன் ஆலயங்களும், திருக்குளமும் அமைந்துள்ளன.

இவ்வாலயத்தின் முன்புறச் சுவரில் தொண்டைமான் காலக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதில் இத்திருக்கோவிலுக்கு ஒரு காணம்  தீப எண்ணெயைக் கொடையாகத் தந்தது குறித்து கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இத்தலம் திருமணப்பேறு – குழந்தைப்பேறு பெற உகந்த தலமாக விளங்குகிறது. குழந்தை வரம் பெற்றோர், தங்கள் குழந்தையைஇறை வனுக்குத்தத்துக் கொடுத்து, காணிக்கை செலுத்தி திரும்பப் பெற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது.

இந்த ஆலயத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் சுவாமி வீதியுலா, மார்கழியில் உற்சவம், வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

அமைவிடம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், திருச்சிராப்பள்ளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலி மலையை அடுத்து, சாலையோரம் அமைந்த ஊர் விராலூர். திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராலிமலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் விராலூர் அமைந்துள்ளது.

–பனையபுரம் அதியமான்.

Next Story