அசுரர்களுக்காகத் திறந்த சொர்க்கவாசல்


அசுரர்களுக்காகத் திறந்த சொர்க்கவாசல்
x
தினத்தந்தி 26 Dec 2017 8:12 AM GMT (Updated: 26 Dec 2017 8:12 AM GMT)

‘இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.

பிரம்மதேவனை தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து படைத்தார், திருமால். இறைவனின் உடலில் இருந்து வெளிப்பட்டதை நினைத்து, பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதே நேரம், திருமாலின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் இருவரும், அகங்காரத்தில் இருந்த பிரம்மனை கொல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய திருமால், ‘பிரம்மனைக் கொல்ல வேண்டாம். உங்களுக்கு வேண்டிய வரத்தை நான் தருகிறேன்’ என்றார்.

அதைக் கேட்ட அசுரர்கள் இருவரும், ‘நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம்’ என்றனர்.

அவர்களின் அறியாமையை நினைத்து சிரித்த திருமால், ‘சரி! இப்படி அகங் காரம் கொண்ட நீங்கள், என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்’ என்றார்.

அசுரர்கள் திகைத்தனர். தங்களின் அறியாமையை எண்ணி வருந்தினர். ‘இறைவா! எங்களுக்கு இந்த தண்டனை வேண்டாம். உங்களோடு நாங்கள் ஒரு மாத காலம் போரிட வேண்டும். அதன்பிறகு வதம் செய்யப்பட்டு, சித்தியடைய வேண்டும்’ என்று திருமாலை வேண்டினர்.

அவர்களின் வேண்டுதல்படியே, அசுரர்களிடம் போரிட்ட திருமால், இறுதியில் அவர்களை வதம் செய்தார். வதம் செய்யப்படும்போது, ‘இறைவா! தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்’ என்று அசுரர்கள் இருவரும் வேண்டினர்.

அதன்படி அவர்கள் இறந்தபிறகு, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, வைகுண்டத்தில் வடக்கு வாசலைத் திறந்த திருமால், அதன் வழியாக அவர்களை உள்ளே அனுமதித்தார். அங்கே ஆதிசேஷன் மீது அருள்புரியும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவைக் கண்டு, அசுரர்கள் இருவரும் ஆனந்தம் அடைந்தனர்.

பின்னர் தங்களுக்குக் கிடைத்த இந்த பெரும்பேறு, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள், ‘இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.

வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வுலக வாழ்வு செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்வும் வகையில் அமையும். 

Next Story