நர்த்தன விநாயகர்


நர்த்தன விநாயகர்
x
தினத்தந்தி 2 Jan 2018 6:06 AM GMT (Updated: 2 Jan 2018 6:06 AM GMT)

விநாயகப் பெருமான் நர்த்தனக் கோலத்தில் இருப்பது (நடனம் ஆடுவது) போன்ற காட்சி களை ஆலயங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்று. ஆனால் இந்த அபூர்வ நர்த்தன விநாயகரின் தோற்றத்தை திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளி பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயத்தில் காணலாம்.

எல்லா ஆலயங்களிலும் விநாயகப் பெருமானின் சன்னிதி முன்பாக, அவரது வாகனமான மூஞ்சுறு எலியின் உருவம் வைக்கப்பட்டி ருக்கும். ஆனால் இந்த சன்னிதி யில் விநாயகருக்கு முன்பாக மூஞ்சுறு வாகனம் இல்லை. அதற்குப்பதிலாக விநாயகப் பெருமான், தனது வாகனமான மூஞ்சுறு வாகனத்தின் மீது நின்று நர்த்தனம் புரிந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார். இது ஒரு விசேஷமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.

பெண் வடிவ பிள்ளையார்

முதன் முதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகப்பெருமானை, ஒரு சில இடங்களில் பெண் வடிவிலும் வழிபடுகிறார்கள். இந்தியாவிலும் கூட இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. இப்பொழுதும் இருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட விநாயகரை ‘கணேஷினி’ என்றும், ‘கஜானனி’ என்றும் அழைக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் விநாயகப்பெருமான், பெண் உருவில்தான் காட்சி தருகிறார். அவர் இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கி அருள்பாலிக்கிறார். அதே போல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சுவாமி சன்னிதி நுழைவு வாசலின் வலது பக்க தூணிலும், விநாயகப் பெருமானின் பெண் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால், இவரை ‘வியாக்ரபாத கணேஷினி’ என்று அழைக்கிறார்கள்.


சதுர்த்தி வழிபாடு

விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை போன்ற பாடல்களை பாடி, மூல முதல்கடவுளை வழிபாடு செய்யலாம். காரிய சித்திமாலை என்ற பாடல்களில், எடுத்த காரியங்களில் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தத் துதியை விநாயகப்பெருமானின் முன்பாக அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி, பாராயணம் செய்து வந்தால், மனதில் விரும்பிய விஷயங்கள் யாவும் மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் விரைவில் நடந்தேறும். காரிய சித்திமாலை பாடல்களை, காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் சொல்லி வந்தால், நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் தொடர்ச்சியாக இந்தப் பாடலை மனதில் சொல்லிக்கொண்டு வந்தால், மனம் அமைதி காணும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில், தேய்பிறை சதுர்த்தி அன்று, எட்டு முறை இந்தப் பாடலைப் பாடினால் ‘அஷ்டமா சித்தி’ கைகூடும் என்கிறார்கள். தினமும் 21 முறை இப்பாடலை பாடுவோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேன்மையான நிலையை அடைவார்கள்.


Next Story