நல்லொளி தரும் செண்பகரேஸ்வரர்


நல்லொளி தரும் செண்பகரேஸ்வரர்
x
தினத்தந்தி 13 Feb 2018 11:34 AM GMT (Updated: 13 Feb 2018 11:34 AM GMT)

ஒரு காலத்தில் அசுரர்களும், தேவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். இரண்டு பக்கமும் நிறைய இழப்புகள். பிரளயம் வந்து பூமியைச் சூழ்ந்தது.

சாகாவரம் தரக் கூடிய அமிர்தமும் பிரளயத்தில் அழிந்தது. தேவர்கள் பிரம்மாவிடம் சென்று, பாற்கடலைக் கடைந்து அந்த அமிர்தத்தை எடுத்துத் தரும்படி முறையிட்டனர்.

இத்தனை பெரிய பிரம்மாண்டமான பாற்கடலை எப்படிக் கடைவது?. தேவர்களோ எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். எனவே இந்திரன் ‘அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்; அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு கொடுத்து விடலாம்’ என்றான். அசுரர்கள் ஒப்புக் கொண்டனர். அமிர்தம் எடுப்பதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகிப் பம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள், அசுரர்களால், பாற்கடல் கடையப்பட்டது.

இருபக்கமும் கடுமையாக இழுத்ததால் மந்தார மலை சரிய ஆரம்பித்தது. அப்போது திருமால், சிவபெருமானை வணங்கி ஆமையின் உருக்கொண்டு அந்த மலையின் அடியில் சென்று தாங்கிப் பிடித்தார். தொடர்ந்து பாற் கடல் கடையப்பட்ட போது, கடலுக்குள் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அது தேவர்கள், அசுரர்கள் அனைவரையும் அழித்து விடும் சக்தி கொண்டதாக இருந்தது.

ஆகையால் பிரம்மாவும், விஷ்ணுவும் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை நாடினர். சிவபெருமான் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த விஷத்தை சுந்தரர் மூலம் கொண்டு வரச் செய்து அருந்தினார். அந்த விஷத்தால் சிவனுக்கு ஏதும் ஆகி விடக் கூடாதே என்று பதறிய பார்வதி தேவி, ஈசனின் கழுத்தைப் பிடிக்க, விஷம் ஈசனின் தொண்டையோடு நின்று போனது. இதனாலேயே சிவபெருமானுக்கு ‘நீலகண்டன்' என்று சிறப்பு பெயர் வந்தது.

அதேசமயம் மலையின் கீழ் பகுதி சரியாமல் ஆமை வடிவில் தாங்கி இருந்த மகாவிஷ்ணுவின் உடல் முழுவதும் நீலமாகிப் போனது. உடலில் விஷ முடிச்சுகள் தோன்றின. இதைக்கண்டு பயந்துபோன லட்சுமி, திருக்கயிலாயம் சென்று கயிலாசநாதனிடம் முறையிட்டாள்.

சிவபெருமானோ, ‘லட்சுமிதேவியே! நீ பூலோகத்தில் பாலாற்றின் தென்கரையில் உள்ள செண்பகவனம் சென்று, அங்கு உறையும் சிவலிங்கத்தை குறித்து தவம் இயற்று. அப்போது யாம் பார்வதி பரமேஸ்வரனாய் காட்சி தந்து உந்தன் குறை களைவோம்' என்று அருளினார். அதன் படி லட்சுமிதேவி பூலோகத்தில், பாலாற்றின் தென்கரையில் உள்ள செண்பக வனத்துக்கு வந்து அங்கே செண்பக மரத்தின் அடியில் சுயம்புவாய் எழுந்தருளி இருந்த சிவலிங்கத்தை, நறுமண மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள்.

மகாலட்சுமி ஈசனை வழிபட்ட அந்தத் தலம் நத்தம் பரமேஸ்வர மங்கலம். அத்தல ஈசன் செண்பகரேஸ்வரர் என போற்றப்படுகிறார். இறைவியின் பெயர் சவுந்தர நாயகி. இந்த அம்பாள் தன்னுடைய கரங்களில் பாசம், அங்குசம் இல்லாமல், மகாலட்சுமியைப் போல தாமரையும் நீலோற்பலமும் ஏந்தி அருள் கிறார் என்பது தனிச் சிறப்பு.

மகாலட்சுமி தன்னைப்போலவே கரங்களில் தாமரையும் நீலோற்பலமும் ஏந்தி அருளும் சவுந்தரநாயகி அம்மனை கண்டு ஆனந்திக்க, ஈசன் திருமாலின் உடலில் உள்ள விஷ முடிச்சுகளை அகற்றுகிறார். திருமாலின் உடலில் உள்ள விஷ முடிச்சுக்களை சிவபெருமான் இத்தலத்தில் அகற்றிய திருநாள், ஒரு சிவராத்திரி தினமாகும். எனவே சிவராத்திரி விழா இத்தலத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலத்தில் மகா சிவராத்திரி, மாதாந்திர சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், ஆயில்ய நட்சத்திர நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலங்களில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வில்வத்தால் அர்ச்சித்து வழிபடுவதோடு, கருவறை தீபத்தில் நல்எண்ணெய் சேர்த்து வேண்டிக் ெகாண்டால், துன்பங்கள் யாவும் அடியோடு விலகும். விஷக்கடியினால் பாதிப்பு உள்ளவர்களும் இத்தலத்தில் முறைப்படி வழிபட்டால் நலம் அடையலாம்.

சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை செண்பகப்பூ, கொன்றை பூ, வில்வம் இவற்றால் வழிபட்டால் வறுமை, தரித்திரம், உடல் உபாதைகள் அகன்று வாழ்வில் நலம், வளம் வந்தடையும். மகாலட்சுமி இத்தலத்தில் ஈசனை தரிசிக்கும் போது, இத்தல அம்பிகை சவுந்தர நாயகியை கண்டு ஆனந்தித்ததால், இந்த ஆலயத்தில் அம்பாளுக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. அதன் பின்பே செண்பகரேஸ்வரருக்கு பூைஜ செய்யப்படுகிறது.

இறைவனின் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணா மூர்த்தி, பிரம்மா, துர்க்கை, ஹரிஹரன் திருவுருவம் உள்ளது. ஆலயத்தில் முருகர், வீரபத்திரர், பைரவர், சூரியன், சனி பகவான் ஆகியோர் தனி சன்னிதிகளில் அருள்கின்றனர்.

சென்னை -புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வரும் மகாபலிபுரத்தில் இருந்து தென் மேற்கில் 14 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றின் கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. பாலாற்று பாலத்தைக் கடந்தவுடன் காத்தான் கடை என்னும் ஊர் வரும். அங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் நத்தம் பரமேஸ்வரமங்கலம் கோவில் இருக்கிறது.

-சிவ.அ.விஜய்பெரியசாமி

Next Story