மழை பொழிய வைத்த பேப்பர் சுவாமி


மழை பொழிய வைத்த பேப்பர் சுவாமி
x
தினத்தந்தி 7 March 2018 10:17 AM GMT (Updated: 7 March 2018 10:17 AM GMT)

பேப்பர் சுவாமிகள் ஆரம்ப காலங்களில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அழகும், வனப்பும் கொண்ட அருமையான கிராமம் இளையரசனேந்தல். இங்குத் தான் சித்தர் மகான் பேப்பர் சுவாமிகள் அருள்புரிந்து, அடங்கி நல்லருள் வழங்கி வருகிறார்.

அது என்ன பேப்பர் சுவாமி?.

இவர் எப்போதும் தனது கைகளில், கீழே கிழிந்து கிடக்கும் செய்தித் தாள்களை சேகரித்து, அதைக் கொண்டு சிலவற்றை வாசிப்பார். அது மறுநாள் நாளிதழில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்திருக்கும். எனவே தான் இவரை அந்தப் பகுதி மக்கள் ‘பேப்பர் சுவாமிகள்’ என்று அழைத்தனர்.

பேப்பர் சுவாமிகள் ஆரம்ப காலங்களில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் இவரது இயற்பெயர் என்ன? இவர் எதற்காக இளையரசனேந்தல் வந்தார்? என்பது அறியப்படவில்லை.

சித்தர்களின் பிறப்பு ரகசியம் யாராலும் அறிய முடியாது என்பார்கள். அதுபோலத் தான் பேப்பர் சுவாமிகள் பெயர், பிறந்த காலம், பெற்றோர், பிறப்பிடம், வயது ஆகியவை தெரியவில்லை.

இவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர், மாநிறத்தவர். ஜிப்பா சட்டையும், வேஷ்டியும் அணிவது வழக்கம். இரண்டு கைகளிலும் காப்பு அணிந்து இருப்பார். விரல்களில் மோதிரம் காணப்படும். கண்கள் வடிவில் சிறியதாக இருக்கும். இதனால் இவரைப் பார்ப்பவர் களுக்கு, இவர் சாமியார் போலவே தெரியமாட்டார். ஆனாலும் அரிய சக்திக் கொண்டவர்.

இவருக்கு தாடியும், ஜடைமுடியும் கிடையாது. அதே வேளையில் மொட்டை தலையுடனும் காணப்படமாட்டார்.

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பேப்பர் சுவாமிகள், சித்தன் போக்கு சிவன் போக்கு என அலைந்து திரிந்து கொண்டிருக்க வில்லை. ஓரிடத்திலேயே அமர்ந்து இருப்பவர். இலஞ்சியில் உள்ள பெருந்தெரு பிள்ளையார் கோவில், குன்னக்குடி பிள்ளையார் கோவில், கீழ இலஞ்சியில் உள்ள நாராயண சுவாமி கோவில் போன்ற இடங்களில் மான் தோல் மீது அமர்ந்து கடுந்தவம் புரிந்துள்ளார்.

இங்குள்ள சித்திரா நதியில் மூழ்கி தவம் செய்யும் இவர், 2 மணி நேரம் கழித்து தான் வெளியே வருவாராம். இதை சுவாமியின் ‘ஜல ஜெபம்’ என கூறுகிறார்கள்.

இவர் இயக்கியாடும் பெருமாள் ஜீவசமாதி, தென்காசி மருதப்ப ஞானியார் ஒடுக்கத்தலம், தென்காசி இடைக்கால் முப்புடாதி அம்மன் கோவில் உள்பட பல பகுதியில் கடுந்தவம் புரிந்துள்ளார்.

இலஞ்சியில் இருந்த காலத்தில், துப்புரவுத் தொழிலாளரான கருப்பன் என்பவரின் வீட்டுக்கு தனது சீடர் ஒருவரோடு சென்றார் பேப்பர் சுவாமிகள். கருப்பன் வீட்டில் உணவு உண்ட சுவாமிகள் தனது சீடரையும் சாப்பிடச் சொன்னார். அவர் முகம் சுளிக்கவே.. ‘உனக்கு வசதி இருந்தாலும் மாதத்தில் பாதி நாள் உணவு கிடைக்காது போ' என சாபம் விட்டார். அதே போல் அவர் பிற்காலத்தில் வறுமையில் வாடியுள்ளார். எனவே சாமியிடம் வரம்வேண்டும் என வேண்டுபவர்கள், அவரிடம் சாபம் வாங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்களாம்.

பேப்பர் சுவாமிகள் பல சித்தர்களோடு தொடர்பு கொண்டவராகவே வாழ்ந்துள்ளார்.

அம்பலவாண சுவாமிகள் என்ற சிவகிரி சுவாமிகள், இலஞ்சி முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் சிவபூஜை செய்து தவம் இருந்தார். இவரை அடிக்கடி சந்தித்தார் பேப்பர் சுவாமிகள்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பேப்பர் சுவாமிகள் தவமேற்றும் போதெல்லாம் அவரை காண வந்து செல்வார் என்றும் பலர் கூறுகிறார்கள்.

பேப்பர் சுவாமிகள் தனது அருள் மேம்பட, ஒரு முறை ஒரு விஷயத்தைச் செய்தார்.

ஒரு காலகட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையே மழையின்றி வறண்டது. குற்றாலச் சாரலின் மூலமாக எப்போதுமே குளுகுளுவென காணப்படும் இலஞ்சிக்கும் அதே நிலை தான். குளங்களில் தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் பொய்த்தது.

தென்றல் தவழும் புண்ணிய பூமியில் மழை இன்றி வறண்டால் விவசாயிகள் பரிதவித்தனர்.

விவசாயிகள் சுவாமியிடம் ஓடோடி வந்து, ‘சுவாமி! வயக்காட்டுல நாத்து நட்டாச்சு.. ஆனால் மழையும் இல்லை.. தண்ணியும் இல்லை. நீங்கதான் அருள் புரியனும்' என்றனர்.

சுவாமி அவர்களை மேலும் கீழுமாக பார்த்தார்.

‘மழை தண்ணி வரும்டா, பாத பூஜை நடத்தி.. ஊர்ல பட்டண பிரவேசம் சுத்தி வாங்கடா.. மழை பெய்யும்' என்றார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு பாடலையும் பாடினார். அவர் பாடிய பாடல் இதுதான்.

‘இடி இடிக்க மழை பெய்ய
இடும்பன் குளம் தத்தளிக்க
குடை பிடிச்சு வருவேன்
குடமயிலே தூங்கிடாதே..' என்று போனது அந்தப் பாடல்.

பேப்பர் சுவாமிகள் கூறியதை விவசாயிகள் ஊர் மக்களிடம் கூறினர். ஊர் கூடியது. சுவாமிக்கு பாத பூஜையும், பட்டணப் பிர வேசமும் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை பேப்பர் சுவாமி களிடம் கூறினர். மேலும் இந்தப் பூஜையை யாரை வைத்து செய்வது? என்றும் அவர்கள் கேட்டனர்.

அதற்கு பேப்பர் சுவாமி கள், ‘பங்களாக்காரனை வைத்து செய்யுங்கள்’ என்றார்.

அவர் குறிப்பிட்டது, இளையரசனேந்தல் ஜமீன் நரசிம்ம அப்பாசாமி.

ஜமீன்தாருக்கு சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் என்றாலும், அவருக்கு சொந்தமான பல நிலபுலன்கள் இலஞ்சி பகுதியில் இருந்தது. மழை இல்லாமல் அதை நம்பியிருந்த விவசாய தொழிலாளிகளும் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே மழைக்காக எதுவும் செய்ய தயார் என்ற நிலையில் ஓடோடி வந்தார் ஜமீன்தார்.

தன்னை வணங்கி நின்ற ஜமீன்தாரை மேலும் கீழுமாக பார்த்த பேப்பர் சுவாமிகள், ‘நீ.. எனக்கு பாத பூஜை செய்யப் போகிறாயா? இது லேசான வண்டி கிடையாதுடா. இந்த வண்டி முதலில் கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் சமாதி ஆகியிருக்கு. இரண்டாவதாக கரூருக்குப் பக்கத்தில் உள்ள நெரூரில் சமாதி ஆகியிருக்கு’ என்றார்.

சித்தர்கள் பல இடங்களில் அடங்குவார்கள். மக்கள் சேவைக்காக மீண்டும் பிறவி எடுப்பார்கள். ராமதேவர் தான் பிற்காலத்தில் தேரையராக பிறந்தார். நெல்லை மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரண மலையில் தான் தேரையர் அடக்கமானார். பேப்பர் சுவாமிகளும் ஏற்கனவே இரு இடங்களில் ஜீவ சமாதி அடைந்து, மூன்றாவதாக இங்கே அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் பலரும் வியந்து நின்றனர்.

தொடர்ந்து பேப்பர் சுவாமிகள், ‘இன்று மட்டும் நீ.. பூஜை நடத்தினால் போதாது, 21 வருடம் தொடர்ந்து பாத பூஜை நடத்தவேண்டும். முடியுமா?' எனக் கேட்டார்.

‘நடத்துகிறேன் சுவாமி' என நரசிம்ம அப்பாசாமி ஜமீன்தார் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு பட்டணப் பிரவேசத்துக்கு தயாரானார்கள்.

6.4.1936 அன்று சித்ரா பவுர்ணமி.

விவசாயிகள் ஒன்று கூடினர். பேப்பர் சுவாமிகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இளையரசனேந்தல் ஜமீன்தார் சுவாமிக்கு பாத பூஜையை நடத்தினார்.

பின்னர் சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட காரில் அமரச் செய்து இலஞ்சி ஊரைச்சுற்றி பட்டணப்பிரவேசம் கூட்டி வந்தனர்.

வானம் எப்போதும் போலவே காணப்பட்டது. கரும்மேகம் கூடவில்லை. மழை வருமா?. பலருக்கு சந்தேகம் எழுந்து விட்டது.

ஆனால் விவசாயிகளுக்கு சித்தர் பெரும் மகனார் மீது அளவில்லாத பக்தியும், நம்பிக்கையும் இருந்தது. நிச்சயமாக மழை வரும் என்ற நம்பிக்கையிலேயே ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தனர்.

ஊர்வலம் பெருந்தெருவில் இருந்து கீழ் திசையில், மேற்கு பார்த்த பிள்ளையார் கோவில் அருகே வந்தது. அதன் பின் அங்கிருந்து ஜமீன்தாரின் பங்களாவின் தலைவாசலுக்குச் சென்றது.

திடீரென மிகப்பெரும் ஓசையுடன் கூடிய இடியோடும், மின்னலோடும் பலத்த மழை இடைவிடாது பெய்தது. மழை என்றால் மழை.. அப்படியொரு மழை. அதுவரை அப்படியொரு மழையை யாரும் பார்த்திருக்கவே இயலாது. ஒவ்வொரு துளியும் பனிக்கட்டி போல வெளியே நின்றவர்கள் மீது விழுந்தது. பட்டணப் பிரவேசத்தோடு வந்தவர்கள் அருகிலுள்ள வீடுகளில் ஒதுங்கிக் கொண்டார்கள்.

சுவாமி தன்னோடு வந்தவர்களை அழைத்தார். ‘இங்கே வாங்கடா.. அன்னைக்கே சொன்னேனே.. நினைவு இருக்கிறதா? இடி இடிக்க மழை பெய்ய... அந்த பாடலை போல மழை பெய்ததா. நாளைக்கு காலையிலேயே போய் பாருடா.. குளம் எல்லாம் எப்படி நிறைஞ்சு இருக்குன்னு சொல்லுங்க' என்றார்.

மறுநாள் காலையில் இலஞ்சியை சுற்றியுள்ள அனைத்து குளங்களும் தண்ணீரால் தளும்பிக் காணப்பட்டன. இதனால் இலஞ்சி மக்களுக்கு பேப்பர் சுவாமிகள் மீது அளவற்ற அன்பும் பக்தியும் ஏற்பட்டது.

இளையரசனேந்தலின் ஜமீனில் மூத்தவர் சங்கர நாராயண அப்பாசாமி ஆவார். இளையவர் நரசிம்ம அப்பாசாமி. இருவருக்குமே பெண் குழந்தைகள் இருந்தனர். ஆண் வாரிசுகள் இல்லை.

இலஞ்சியில் சுவாமியை நேரில் பார்த்து வணங்கினார்கள் ஜமீன்தார்கள்.

அவர்களை எதிர்பார்த்தது போலவே சுவாமிகள் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

அவர்கள் கேட்டு வந்த வரம் கிடைத்ததா?..

- சித்தர்களைத் தேடுவோம். 

Next Story