பாவக்கழுவாய் பண்டிகை


பாவக்கழுவாய் பண்டிகை
x
தினத்தந்தி 28 March 2018 7:55 AM GMT (Updated: 28 March 2018 7:55 AM GMT)

மக்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செலுத்துகின்ற விழா தான் ‘பாவக்கழுவாய் விழா’ என அழைக்கப்படுகிறது.

“ஆண்டவர் மோசேயிடம், ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக்கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். அந்த நாளை ஓய்வு நாளாய் அனுசரிக்க வேண்டும்” என கட்டளை கொடுத்தார்.

அது மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்பட்டது. அந்த பலியில் பங்கு பெறாதவர்கள் அழிக்கப்படுவார்கள். உயிர் வாழவேண்டுமென்றால் அந்த பண்டிகையைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் எனுமளவுக்கு அந்த விழா கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

கடவுளின் ஆலயத்தில் தூயகம், அதாவது மகா பரிசுத்த ஸ்தலம் ஒன்று உண்டு. அங்கே யாரும் நுழைய முடியாது. தூயகத்துக்கு முன்னால் ஒரு தொங்கு திரை இருக்கும். அதைத் தாண்டி யாராவது நுழைந்தால் கடவுளால் அவர்கள் கொல்லப் படுவார்கள்.

அந்த நாளில் மோசேயின் சகோதரர் ஆரோன் என்பவர் தான் பலி செலுத்தும் அனுமதி பெற்ற குருவாக இருந்தார். அவர் அந்த தூயகத்துக்கு நுழையும் முன் இரண்டு பலிகளைச் செலுத்த வேண்டும்.

நன்றாகக் குளித்து சுத்தமானபின், நார்ப்பட்டினாலான ஆடைகளைத் உடுத்த வேண்டும். கச்சை, தலைப்பாகை போன்றவற்றை அணிய வேண்டும். முதலில் அவர் ஒரு காளையைப் பலியிட்டு தனக்கும், தன் குடும்பத்துக்கும் இருக்கும் பாவக்கறைகளை நீக்க வேண்டும்.

அதன்பின் இரண்டு வெள்ளாட்டுக் கிடாக்களைக் கொண்டு வருவார். அதில் ஒரு ஆடு பலியாகப் போகும் ஆடு. இன்னொன்று போக்கு ஆடாக அனுப்பப்படப் போகும் ஆடு.

பலி கொடுக்கப்படுவதெற்கென தெரிந்து கொள்ளப்பட்ட ஆட்டை முதலில் ஆரோன் அடிப்பார். அந்த ரத்தத்துடன் தான் தூயகத்தில் தொங்கு திரையைத் தாண்டி அவர் நுழைய முடியும். அவர் ஒற்றை ஆளாக தனியாக தூயகத்தில் நுழைந்து சடங்குகளைச் செய்வார். அப்போது அந்த சந்திப்புக் கூடாரத்திலேயே யாரும் இருக்கக் கூடாது.

பின்னர் இரண்டாவது ஆடு கொண்டு வரப்படும். அதன் மீது ஆரோன் கைகளை வைப்பார். இஸ்ரேல் மக்கள் செய்த அத்தனை பாவங்களையும் அதன் மேல் சுமத்துவார். அந்த ஆட்டை ஒருவர் கொண்டு சென்று பாலை நிலத்தில் அலைய விடுவார். பின் அவர் குளித்து தூய்மையானபின் ஊருக்குள் வருவார்.

அன்றைய தினம் முழுவதும் மக்கள் நோன்பிருந்து தங்கள் பாவங்களையெல்லாம் கடவுளிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்பார்கள்.

இதுவே அன்றைய காலத்தில் கொண்டாடப்பட்ட பாவக்கழுவாய் சடங்கு விழா.

விவிலியத்தில் கொண்டாடப்படும் விழாக்கள் குறியீடுகளே. அவற்றுக்கான உண்மையான பொருள் மறைவாய் இருக்கும்.

இதுவும் இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பிடுகின்ற ஒரு விழா. பலியாகும் ஆடு, இறைமகன் இயேசு. அவர் கல்வாரியில் பலியானார். அவர் பலியான போது ஆலயத்தின் தொங்கு திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அதன் மூலம் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயிருந்த திரையை இறைமகன் இயேசு அழித்து விட்டார். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே இப்போது நேரடியான உறவு இயேசுவின் மூலம் உருவாகி விட்டது.

அவரே பாவம் இல்லாத முதன்மை குரு, பிரதான ஆசாரியன். கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார் எனும் எபிரேயர் 5:5 வசனம் அதை தெளிவாக்குகிறது.

இரண்டாவது ஆடு குறித்து பல்வேறு இறையியல் சிந்தனைகள் உலவுகின்றன. அதில் பெரும்பாலானோர் ஒத்துக் கொள்ளும் சிந்தனை, இரண்டாவது ஆடு ‘சாத்தான்’ என்பது.

பாவம் மனுக்குலத்தில் நுழைய முக்கிய காரணமாக இருந்தவன் சாத்தான். எனவே அவனே பாவத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி நடக்கும். அப்போது சாத்தான் கட்டி வைக்கப்படும். அதன் பின் சில காலம் கட்டவிழ்த்து விடப்படும் என்கிறது திருவெளிப்பாடு 20-ம் அதிகாரம்.

பாஸ்கா விழா ஒருவகையில் இஸ்ரேல் மக்களுக்கான ஒரு மீட்பு வாழ்க்கையை குறிப்பிடுகிறது. பாவக்கழுவாய் விழாவோ சர்வதேச இறை சமூகத்துக்கான மீட்பாக அமைகிறது.

இன்றைக்கு இந்த விழா நமக்கு உணர்த்தும் பாடம், இறைமகன் இயேசுவின் பலியை உணர்ந்து கொள்வதும், அதன் மூலம் கிடைக்கும் மீட்பை அணிந்து கொள்வதும், பாவமற்ற ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்பதும் தான்.

இரண்டாம் வருகை எப்போது வரும் என்பதல்ல கேள்வி.

வந்தால் நாம் தயாராக இருக்கிறோமா என்பது மட்டுமே கேள்வி.

(பண்டிகை தொடரும்)

Next Story