சுகமான திருமண வாழ்வருளும் பங்குனி உத்திரம்


சுகமான திருமண வாழ்வருளும் பங்குனி உத்திரம்
x
தினத்தந்தி 28 March 2018 10:19 AM GMT (Updated: 28 March 2018 10:19 AM GMT)

நம் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும், நாம் அன்றாடம் வணங்கும் தெய்வங்களின் பெயரால் விரதங்களை ஏற் படுத்தி, ஆன்மிகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் அதன் மூலம் அவர்களுக்குள் மனோபலத்தையும் உருவாக்கி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

தமிழ் மாதங்களின் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிகவும் சிறப்பைப் பெற்று அதன் நினைவைப் போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திரப் பெருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக திருமணம் என்பது இறைவனால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நிகழும் அற்புதம் என்று கூறுவது உண்டு. எங்கேயோ பிறந்து வெவ்வேறு சூழலில் வளர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்றால் அந்த இறைவன் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அது காதல் திருமணமாய் இருந்தாலும் சரி, பெற்றோரால் நடத்தி வைக்கப்படும் திருமணமாய் இருந்தாலும் சரி.

இன்றைய காலத்தில் ஒரு திருமணம் நல்லவிதமாக முடிவதற்குள், பெற்றோர் படும்பாடு இருக்கிறதே? அடேங்கப்பா... ஜாதகம் பொருந்துவதில் இருந்து, கல்வி மற்றும் வசதிகள் வரை எத்தனை எத்தனை தடைகள்? அனைத்தையும் மீறிப் பொருத்தமான துணையுடன் எவ்வித பிணக்கும் இன்றி இல்லற வாழ்வின் மகிழ்வை முழுமையாக அனுபவிப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. இந்த சவாலை சரி செய்து தகுந்த துணையுடன் திருமணம் நடைபெற பங்குனி உத்திர விரதம் உதவுகிறது. இந்த சிறப்பான நாளில் விரதம் இருந்து ஒரு முகத்துடன் தெய்வ சிந்தனையுடன் ஆலயங்களுக்கு சென்று, தெய்வங்களின் திருமணக் காட்சியைக் கண்டு வேண்டினால் நிச்சயம் நாம் நினைத்தபடி திருமணம் கைகூடுகிறது.

திருமணத்துக்கும்.. பங்குனி உத்திரத்துக்கும் அப்படி என்னதான் தொடர்பு?

பல தெய்வங்களின் திருமணங்கள் இந்த பங்குனி உத்திர நட்சத்திரம் வரும் பவுர்ணமி நன்னாளில்தான் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. முப்பெரும் தெய்வங்களுக்கும் இந்த பங்குனி உத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்களில் முதன்மையானவரான சிவபெருமான் தவம் கலைந்து, மீனாட்சியாக அவதரித்திருந்த பார்வதிதேவியை மணம் முடிந்தது இந்த பங்குனி உத்திரத்தில் தான்.

மீனாட்சி திருக்கல்யாணத்தின் சிறப்பு நாம் அனைவரும் அறிந்ததே. அன்றைய தினம் சிவன், பார்வதிக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து வாத்தியங்கள் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து பால் பழம் அளித்து தம்பதி சமேதராக பள்ளியறைக்கு அனுப்பும் வைபவம் அதி விசேஷமானது.

அதே போல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் திருமணம் நடந்ததும் இந்த நாளில் தான். மகாலட்சுமியை மனைவியாக அடைந்த பெருமாள், கடனுடன் இருந்தாலும் செல்வத்துக்கு அதிபதியான மனைவியுடன் இல்லற வாழ்வில் இணைந்து நிறைந்த செல்வங்களை பக்தர்களுக்கு அருள் கிறார். படைக்கும் தெய்வமான பிரம்மா, கல்விச் செல்வத்தை அருளும் சரஸ்வதியை திருமணம் செய்து, தனது நாவில் குடியமர்த்திக்கொண்டதும் இந்த பங்குனி உத்திர தினத்தில் தான் என்கிறது புராணங்கள். எனவே தான் இந்த விரதத்தை ‘கல்யாண சுந்தர விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.

ஜனகரின் மகள் சீதையை ஸ்ரீராமர் கரம்பிடித்ததும், கணவன் உயிரை எமனிடமிருந்து மீட்ட கற்புக்கரசி சாவித்திரி சத்யவானை திருமணம் செய்ததும், ஈசனின் கோபத்திற்கு ஆளாகி சாம்பலான மன்மதனை, உயிர்த்தெழச் செய்து ரதியானவள் மீண்டும் கணவனாக்கிக்கொண்டதும், தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியை மணம் புரிந்ததும், முனிவரான அகத்தியர் முக்தியடைந்து சொர்க்கலோகம் செல்ல வாரிசு வேண்டும் என்பதற்காக, விரதம் இருந்து பக்தியிலும், புத்தியிலும் சிறந்த லோபாமுத்திரையை திருமணம் செய்ததும் இந்த பங்குனி உத்திர நாளில் தான்.

இந்த பங்குனி உத்திரமானது, தமிழ்க்கடவுளான முருகனுக்கு உகந்ததாக அனைத்து முருகன் ஆலயங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தேவர்களையும் உலகத்தினரையும் ஆட்டிப்படைத்த அசுரனான சூரபதுமனை வென்று, இந்திரன் மகள் தெய்வானையை தேவர்கள் ஆசியுடன் முருகப் பெருமான் கரம் பிடித்தது இந்த பங்குனி உத்திர தினத்தில் என்பதால் அந்த நாளில் முருகப்பெருமானின் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில் பக்தர்கள் பலரும் காவடிகளை சுமந்து, முருகன் ஆலயங்கள் நோக்கி சென்று தங்கள் வேண்டுதல்களை செலுத்துகின்றனர். அறுபடை வீடுகளில் அனைத்திலும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி என்றழைக்கப்படும் பழனியில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச்சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் விரதம் இருந்து, காவடி, பால் குடங்களுடன் அருகிலுள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி நீரையும் சுமந்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பழனி தல புராணத்தில் குறிப்பிட்டு உள்ளதைப் போன்று அபிஷேகத்தின் போது முருகன் ஜடாமுடியுடன் உள்ள தோற்றத்தைக் காண இயலும்.

அடுத்து முருகப்பெருமான், தெய்வானையுடன் திருமணம் புரிந்த அறுபடை வீடுகளில் முதன்மையானதான திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தைக் காண, மதுரையில் இருந்து மீனாட்சி- சொக்கநாதர் இருவரும் எழுந்தருள்வார்கள். இத்தகைய தெய்வத்திருமணங் களைக் கண்டு மகிழ்வது, நம் இல்லற வாழ்வை மேம்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .

சிவபெருமானுக்கும், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் இந்த பங்குனி உத்திரத்தில் தான் ஐயப்பன் தோன்றினார் என்கிறது வரலாறு. வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் மகாபாரதத்தின் நாயகன் அர்ச்சுனன் பிறந்ததும் இந்த நட்சத்திர நன்னாளில்தான். இப்படி எத்தனையோ தெய்வநிகழ்வுகளைக் கூறலாம்.

இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர விரத நாளன்று திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணமானவர்கள் வாழ்வில் ஒற்றுமையாக வாழவும் ஆலயங்களுக்குச் சென்று, தெய்வங்களின் திருமணக் கோலத்தைக் கண்டு தரிசிப்பது நன்மை பயக்கும்.

- சேலம் சுபா

மூன்று முறை திருக்கல்யாணம்

பொதுவாக கோவில்களில் திருவிழாவின் போது ஒருமுறைதான் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் திருச்சி- பெரம்பலூர் சாலையில் ஆலந்தூருக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் தண்டாயுதபாணி திருக்கோவிலில் ஒரே திருவிழாவில் மூன்று நாட்கள், மூன்று முறை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் போது, 5-ம் நாள், 7-ம் நாள் மற்றும் 9-ம் நாள் என சுவாமி தேரில் எழுந்தருளும் முன் ஒவ்வொரு முறையும் இறைவனுக்கு திருக்கல்யாணம் நிகழ்வது சிறப்புக்குரியதாகும். இங்குள்ள மூலவர் தலையில் குடுமியுடன் காணப்படுவது இன்னொரு சிறப்பு.

Next Story