ஆண்டவர் இயேசுவின் சிலுவை மொழிகள்


ஆண்டவர் இயேசுவின் சிலுவை மொழிகள்
x
தினத்தந்தி 5 April 2018 11:00 PM GMT (Updated: 5 April 2018 7:17 AM GMT)

இறப்பதற்காக பிறந்த இறைமகன் இயேசுவின் மீது இறைவன் வைத்திருந்த இறுதி திட்டம் அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதாகும்.

புனையப்பட்ட பொய்சாட்சிகளோடும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோடும் ரோம ஆளுநர் பிலாத்து, கலிலேயா சிற்றரசன் ஏரோது முன், மாபெரும் குற்றவாளியாக இயேசுவை அழைத்துச் சென்றனர். சமய தலைமைச் சங்கத்தில் வைத்து தீட்டப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திடவே மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இயேசு தன் கடும்வேதனை மிகுந்த வேளையில் கூறிய சிலுவை மொழிகள் ஏழு. துன்பத்தின் மத்தியிலும் இயேசுவின் தூய இயல்பு மாறவில்லை என்பதை இவ்வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

1. “தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”. (லூக்கா 23, 34)

“உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று போதித்த இயேசு இப்போது வாழ்ந்து காட்டுகிறார். வக்கிரமும், வன்மமும் நயவஞ்சகமும் நிறைந்த செயலைச் செய்தவர்களுக்காக இறைவனிடம் பரிந்து மன்றாடுகிறார். தெரிந்து செய்த பிழைக்கு தெரியாமல் வழங்கப்படுகிறது மன்னிப்பு.

2. “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக்கா 23,43)

தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட ஒரு குற்றவாளியின் தாழ்மையான வேண்டுதலுக்கு இணங்கி பேரின்ப வாழ்வை அருள்வதாக வாக்குரைக்கிறார். இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்பதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்று வரிதண்டுவர் சகேயுவுக்கு வழங்கியதைப் போல் இவருக்கும் தாமதமற்ற உடனடி மீட்பின் வாழ்வை உறுதி செய்கிறார்.

3. “அம்மா, இவரே உம் மகன்”.... “இவரே உம் தாய்” (யோவான் 19:26,27)

‘உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளுக்கிணங்க நிர்கதியற்ற நிலையில் நிற்கும் தன் தாயின் மீது அக்கறை கொள்கிறார், தன் தாயை தன்னைப்போன்று மிகவும் அன்பாக நேசித்திட, தன் தோள் மீது சாய்ந்த தன் அன்புக்கு பாத்திரமான சீடன் யோவானிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கிறார். சீடர் யோவான் மூலம் தான் மிகுந்த கவனம் செலுத்தும் தாய்க்கு ஒரு ஆதரவை ஏற் படுத்தி, நல்ல மகனுக்கான தன் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுகின்றார்.

4. “எலோயி, எலோயி, லெமா சபக்தானி” (மாற்கு 15:34)

“என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது இதற்கு பொருள். கதிரவன் கண்களை அடைக்க காரிருள் சூழ பிற்பகல் மூன்று மணி வேளையில் இயேசுவால் உரக்க கத்தி உரைக்கப்பட்ட வார்த்தை, தாங்கொணா வேதனையில் இறைவன் தன்னை கைவிட்டு விட்டாரோ என்ற அங்கலாய்ப்போடு கூறுகிறார். இவ்வாக்கு இறைமகன் இயேசு ஒரு மெய்யான மனிதனாகவே வலிகளோடும், பாடுகளோடும் வாழ்ந்தார் என்பதை தெளிவுப்படுத்துகிறது. மானிட மகன் இயேசுவின் மனிதத் தன்மையின் மீதான ஐயத்தை அது அகற்றுகிறது.

5. “தாகமாய் இருக்கிறது” (யோவான் 19:28)

மறைநூலில் எழுதப்பட்டபடியே (திருப் பாடல்கள் 69:21) இயேசு தாகம் அடைந்தார். வியாழன் நள்ளிரவில் கைது செய்யப்படுகிற இயேசு அடுத்தடுத்த விசாரணைகளை சந்திக்கிறார். இங்கே உண்பதற்கோ, நன்னீர் பருகுவதற்கோ துளியளவும் சந்தர்ப்பம் இல்லை. ஏளனம், இகழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் மனதின் வலிகள் ஒருபக்கம். முள்முடியின் வலியோடு, வீதியெங்கும் பட்ட சாட்டையடிகளின் வலிகள் மறுபக்கம். கை கால்களில் துளைத்திருந்த ஆணிகள், உடலெங்கும் உதிரம் வழிய உழுதநிலம் போல காணப்பட்டது இயேசுவின் உடல். இந்நிலையில் இயேசு இவ்வார்த்தையை மொழிகிறார்.

6. “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30)

“திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம், அவற்றை அழிப்பதற்கல்ல நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்று தான் உரைத்த வாக்குப்படி பல இறைவாக்குகளை தன் வாழ்வில் நிறைவேற்றியவர் இறைமகன் இயேசு. இறைவன் தன் மகன் இயேசுவின் மீது வைத்திருந்த மீட்பின் திட்டத்தை தான் நிறைவேற்றிய வெற்றிக் களிப்பில், வெற்றிக் கனியை ருசித்த போர் வீரனைப்போல், இலக்கை வெற்றியுடன் எட்டிய ஓட்டப்பந்தய வீரனைப் போல் இயேசு சிலுவையில் முழக்கமிட்டார்.

7. “தந்தையே உம் கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக்கா 23:46)

மனித உயிர் இறைவனுக்கே உரியது. உயிரை கொடுக்கவும் எடுக்கவும் அவர் ஒருவரே உரிமையுள்ளவர். மாபெரும் மீட்பின் திட்டத்தோடு தாவீதின் குமாரனாக பெத்தலையில் பிறக்கச் செய்து, தியாகப் பாதையில் வழிநடத்தி, கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு மரண மடையச் செய்யும் வரையில் உயிரளித்த தன் தந்தையிடம், தான் அளித்த உயிரை அவரிடமே மீண்டும் ஒப்படைக்கிறார்.

தியாகமும், அன்பும், அமைதியும் தான் உலகுக்கு நிலையான மெய் மகிழ்வை தர முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திச் சென்றவர் இறைமகன் இயேசு.

அருட்பணி.ம.பென்னியமின், பரளியாறு. 

Next Story