உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 April 2018 11:30 PM GMT (Updated: 5 April 2018 8:17 PM GMT)

உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாத அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 20-ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்துவருகிறது.

அதைத்தொடர்ந்து 27-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 30-ந் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. தினசரி இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் காமதேனு, யானை, ரிஷப, அன்னம், சிங்கம், மயில் ஆகிய திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வண்ண விளக்கு அலங்காரத்துடன் திருவீதி உலா வந்த அம்மனை திரளான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று முன்தினம் மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் திருவிழாவையொட்டி உடுமலை குட்டை திடலில் தினமும் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக காலை 6.45 மணிக்கு அம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3.15 மணிக்கு கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள், மண்டகப்படிதாரர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளின் உபயதாரர்கள் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் எம்.பி., கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், அறநிலையத்துறை இணை ஆணையர் க.ராஜமாணிக்கம், உதவி ஆணையர் செ.வ.ஹர்சினி, கோவில் செயல் அலுவலர் ஆர்.சங்கரசுந்தரேசுவரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். பின்னர் அமைச்சர், எம்.பி. உள்ளிட்டோர் தேருக்கு முன்னால் நடந்து வந்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில் அர்ச்சுனேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் யு.கே.பி.முத்துக்குமார சாமி, உழவாரம் திருப்பணி மன்ற தலைவர் வக்கீல் என்.சோமசுந்தரம், ஸ்ரீடவர்ஸ் உரிமையாளர் தொழில் அதிபர் யு.கே.பி.என்.செவ்வேள், அனுஷம் தியேட்டர் யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், கோவை மருதமலை ஸ்ரீசுப்பிரமணியசாமி கோவில் முன்னாள் அறங்காவலர் உடுமலை ஜெயான் என்கிற ஆர்.ஜெகதீசன், அரசு வக்கீல் கே.ராமகிருஷ்ணன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் வி.மணிகிருஷ்ணசாமி, செயலாளர் என்.கொங்குரவி, ஜே.வி.ஏஜென்சீஸ் உரிமையாளர் ஆர்.சந்திரசேகர், வி.பி.எஸ்.எக்யூப்மெண்ட்ஸ் உரிமையாளர் ஆர்.பிரகாஷ், வக்கீல்கள் சங்க செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், அ.தி.மு.க. நகர மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, ஆர்.வி.எஸ்.நந்தகுமார், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக திருப்பூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் வி.சிவக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் டி.ரெத்தினவேல், நகர தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், தி.மு.க. முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் யு.என்.பி.குமார், செல்வி கியாள் ஏஜென்சீஸ் உரிமையாளர் எம்.பி.அய்யப்பன், துரை கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் ஏ.துரைசாமி, கொங்கு நகர இளைஞர் அணி செயலாளர் ஏ.ஆர்.ராகுல்குமார், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஏ.சீனிவாசன், ஆர்.கிருஷ்ணராஜ் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேரை பக்தர்கள் முன்னால் இழுத்துச்செல்ல கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட செப்பளச்சேரி சேகரன் என்ற யானை பின்னால் இருந்து தள்ளிச்சென்றது. தேர் தளி சாலை, வடக்கு குட்டை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி, பொள்ளாச்சி சாலை வழியாக இரவு 9.45 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்டத்தை காண உடுமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தேரோடும் வீதிகளுக்கு பிற்பகல் முதலே சாரைசாரையாக வந்து இடம் பிடித்து காத்துநின்று பார்வையிட்டனர். சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் தேரோட்டத்தை காண காத்திருந்து தேர் வந்ததும் தேரில் இருந்த மாரியம்மனை வழிபட்டனர்.

தேரோட்டத்தையொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 90 போலீசார், 90 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேருக்கு முன்னால் 12 தண்ணீர் லாரிகள் ஊர்வலம் போன்று அணிவகுத்து சென்றன. அந்த லாரிகளில் இருந்து தேர் சென்ற சாலைகளில் குளிர்ச்சிக்காக தண்ணீர் ஊற்றப்பட்டது.

குழியில் இறங்கிய தேர்ச்சக்கரம்

உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கோவில் அருகில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தேர் சதாசிவம் வீதியில் வந்த போது திடீரென்று சாலையின் வலதுபுறம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்தது. அத்துடன் அங்கு 4 நாட்களுக்கு முன்பு பழுதடைந்து சரி செய்யப்பட்ட குடிநீர் குழாய் பகுதியை சரியாக மூடாததால் அந்த இடத்தில் தேர் சக்கரம் வந்ததால் குழியில் தேரின் 2 சக்கரங்களும் இறங்கின.

பின்னர் யானையின் உதவியால் குழியில் இறங்கிய தேரின் சக்கரங்களை வெளியே எடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் முடியாததால் சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கயிறு கட்டி தேரின் சக்கரங்கள் கிரேன் மூலம் மீட்டகப்பட்டன.

இதற்கிடையில் தேர் குழியில் சிக்கிய தகவல் அறிந்ததும் மற்ற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களை போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் அப்புறப்படுத்தினார்கள். மாலை 6.30 மணிக்கு குழியில் இறங்கிய தேரின் சக்கரம் 1½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கிரேன் உதவியால் இரவு 8 மணிக்கு மீட்கப்பட்டது. மீட்பு பணிகளை கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் தேரை சாலையின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்தனர். இரவு நேரம் ஆனதால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்தது. எனவே ஜெனரேட்டர் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் விளக்குகள் வெளிச்சத்தில் தேரோட்டம் நடந்தது. பின்னர் இரவு 9.45 மணி அளவில் தேர் நிலை வந்து சேர்ந்தது.

மின் வினியோகம் நிறுத்தம்

உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது பாதுகாப்பு கருதி தேரோட்டம் நடந்தபகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் தேரோடும் வீதிகளில் சாலையின் குறுக்கே இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில் ஒவ்வொரு மின் கம்பம் பகுதியிலும் மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர். மின் கம்பம் உள்ள பகுதியை தேர் கடந்த பின்னர் சாலையின் குறுக்கே துண்டிக்கப்பட்டிருந்த வயர்கள் இணைக்கப்பட்டன. இந்த பணிகள் உடனுக்குடன் நடைபெற்றன. தேர் நிலையை வந்தடைந்ததும் அனைத்து மின் கம்பங்களிலும் வயர்களை இணைக்கும் பணிகள் முடிந்தன. அதன் பின்னர் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. உடுமலை தேர்த்திருவிழாவையொட்டி அனைத்து கடைகளுக்கும் பிற்பகல் விடுமுறை விடப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story