நியாயத்திற்கு துணை நிற்போம்


நியாயத்திற்கு துணை நிற்போம்
x
தினத்தந்தி 13 April 2018 6:09 AM GMT (Updated: 13 April 2018 6:09 AM GMT)

நியாயமான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து, துணை நிற்க வேண்டும்.

அநியாயமான காரியங்களில் யாரும் யாருக்கும் உதவி செய்வதின் வழியாக பாவத்திற்கு துணை போகக்கூடாது.

இதுதான் இஸ்லாத்தின் உயர்வான கூற்றாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்:

‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. (5:2)

நன்மையான காரியங்கள் என்றால், எவற்றை செய்யும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்துவிதமான நற்செயல்களுக்கும் உதவி செய்வது ஆகும். பாவமான காரியங்கள் என்றால், எவற்றை முற்றிலும் விட்டுவிடும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்து விதமான கெட்ட செயல்களையும் விட்டுவிடுவது ஆகும்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உனது சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும் சரி, அல்லது அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே, அவனுக்கு நீ உதவி செய்’.

உடனே நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது சரி. அது எப்படி அநியாயக்காரனுக்கு நான் உதவி செய்வது?’ என ஒரு நபித்தோழர் கேட்டார்.

அதற்கு நபியவர்கள், ‘அநீதி செய்வதில் இருந்து அவனை தடுத்து நிறுத்துவதே நீ அவனுக்கு செய்யும் உதவியாகும்’ எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).

‘அநியாயக்காரனுக்கும் உதவி செய்’ என்று இஸ்லாம் கூறுகிறது. இது அவன் செய்யும் அநியாயத்திற்காக அல்ல. அநியாயத்தை அவன் விடுவதற்காக. அநியாயத்திலிருந்து அவன் விடுதலை பெற்று, நியாயவாதியாக மாறுவதற்காக.

‘ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய மாட்டார். அவர் மற்றவருக்கு உதவி செய்வதையும் கைவிடமாட்டார். யார் தமது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவாரோ, அவரின் தேவையை இறைவன் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்குவாரோ, அவரின் மறுமைநாளின் கஷ்டங்களை இறைவன் நீக்கிவிடுகின்றான். யார் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக் கிறாரோ, அவரின் குறைகளை இறைவன் மறுமைநாளில் மறைத்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்)

‘ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுக்கோ அல்லது பிற மனிதருக்கோ அவர் செய்யும் உதவி என்பது மற்றவருக்கு அவர் அநியாயம் செய்யக்கூடாது. மூன்றாம் நபர் கெடுதியிலிருந்து இவரை பாதுகாக்க வேண்டும். பிறரின் தேவைகள் எதுவாயினும் அது நன்மையான காரியமாக இருந்தால், அவரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அவருக்கு ஏற்படும் கஷ்டங்களிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும். அவரிடம் குறைகள் ஏதேனும் தென்பட்டால் அதை பெரிதுபடுத்தாமல் அவற்றை மறைத்துவிட வேண்டும். இவ்வாறு பிறருக்கு பயன்தரும் மனிதரே இறைவனுக்கு மிகவும் பிரியமானவராக இருக்கிறார் என இஸ்லாம் கூறுகிறது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘மக்களுக்கு மிகவும் பயன்தரும் நபரே இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்’ எனக்கூறினார்கள்.

பிறருக்கு உதவி செய்வதற்கு எந்த வகையில் வாய்ப்பு கிடைத்தாலும் அதை வீணடித்து விடக்கூடாது. நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பிறருக்கு உதவிட வாய்ப்பு அமைந்த சமயங்களில், உதவிகள் பல புரிந்த நிகழ்வு வரலாற்று நெடுகிலும் காணமுடிகிறது.

‘உஹத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் எஞ்சி இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)

உஹத் மலை அளவு தங்கம் என்னிடம் இருப்பினும் அதை மூன்று தினங்களுக்கு மேல் வைத்திருக்கமாட்டேன் என்ற நபியின் கூற்று அவர்களிடம் எந்தளவுக்கு உதவும் மனப்பான்மை இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

‘அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு இருப்பு குறைந்து போய்விட்டால், தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களைச் சேர்ந்தவன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)

இது ஒரு அபூர்வ நிகழ்வு. இது ஒரு உணவுப் புரட்சி. கையிருப்பில் உள்ள உணவை பரவலாக்கும் ஒரு உயர்தரமான திட்டம். இது வறுமையையும், பசிக்கொடுமையையும் இல்லாமல் ஆக்கும் கனவு திட்டம். இது உணவு மற்றும் தானிய இருப்பு குறைந்தவர்களுக்கு உதவிட ஏற்படுத்தப்பட்ட ஒரு உயர்வான திட்டம். அந்த குலத்தினர் இந்தத் திட்டத்தை முன்மாதிரியாக செயல்படுத்தியதால்தான் ‘அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன்’ என நபி (ஸல்) அவர்கள் அந்தக்குலத்தினரை புகழ்ந்தார்கள்.

உதவி என்பது பலவகை. நிதி உதவி, உணவு மற்றும் தானிய உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி, பயண உதவி, கடன் உதவி, உடலுதவி, சேவை மனப்பான்மை, விபத்து உதவி, சிறுஉதவி, பேருதவி, இறைஇல்ல கட்டிட நிதி உதவி போன்ற உதவிகள் உண்டு. அனைத்துவிதமான உதவி களையும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டும் என இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. நன்மைதரும் விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும். பயபக்தியான காரியங்களிலும் உதவ முன்வரவேண்டும். பாவம் மற்றும் பகைமை, வரம்பு மீறுதல், உரிமை மீறல் போன்றவற்றில் யாரும் யாருக்கும் உதவ முன்வரக்கூடாது.

நியாயத்திற்கு துணை நிற்போம், அநியாயத்திற்கு துணை போகாதீர்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

Next Story