தூண்களால் சிறப்புற்ற ஆலயங்கள்


தூண்களால் சிறப்புற்ற ஆலயங்கள்
x
தினத்தந்தி 17 April 2018 8:01 AM GMT (Updated: 17 April 2018 8:01 AM GMT)

.

பெங்களூருவில் இருந்து 315 கிலோமீட்டர் தொலைவிலும், பெல்லாரியில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது புராதான நகரமான ஹம்பி. இங்கு எங்கு பார்த்தாலும், மன்னர்களின் கோட்டை, அரண்மனை, கோவில்களாக காட்சி அழைக்கிறது. இது விஜயநகர பேரரசர்களின் ஆட்சி காலத்தின் செல்வம், போர்ப்படை, கலாசாரம், அழகியல் ஆகியவற்றை பறைசாற்றுகிறது. ஹம்பியில் சிறந்த கலை அம்சத்துடன் கூடிய விருபாக்ட்ஷா கோவில், தாமரை மகால், விஜய விட்டலா கோவில் ஆகியவை புகழ்பெற்ற பகுதிகள் ஆகும்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இருந்த ஹம்பி பருத்தி, நறுமணபொருட்கள் மற்றும் ரத்தின கற்கள் விற்பனை செய்யும் சந்தையாக திகழ்ந்தது. விஜய விட்டலா கோவிலில் 56 இசை தூண்களுடன் கூடிய கலை அரங்குகள் உள்ளது. இந்த தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டும் போது, ஒவ்வொருவிதமான சத்தம் கேட்பது சிறப்பு.

இதில் முக்கியமானது ஹம்பி விட்டலா கோவில் வளாகத்தில் உள்ள கல் தேர். இதனை 16-ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கிருஷ்ண தேவராயர் உருவாக்கினார். திராவிட கட்டிடக் கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த கல் தேர், கைவினைஞர்களின் கட்டிடக் கலை திறமையை எடுத்துக்காட்டுகிறது. கிரானைட் கற்களின் அடுக்குகளால் கட்டப்பட்ட இந்தத் தேரில் நான்கு சக்கரங்கள் உள்ளது. முன்புறம் அழகான 2 யானைகள் தேரை இழுத்துச் செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பகுதியிலும் சிற்ப கலைகள் செதுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சிறப்புகளை பெற்ற இந்த கல் தேர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இது இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதியதாக வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில், இந்த கல் தேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கர்நாடக அரசின் சுற்றுலா துறையின் சின்னமாகவும் இது விளங்குகிறது.



1,000 தூண்களில் நிற்கும் ஆலயம்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு மத்தியில் எழிலுற அமைந்துள்ளது மூடபித்ரி. இதற்கு ‘கிழக்கு மூங்கில் பகுதி’ என்று பொருள். இந்தப்பகுதி 14 முதல் 16-ம் நூற்றாண்டு வரை ஜெயின் மதம், கலாசாரம், கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை பறைசாற்று வதாக இருந்தது. இங்கு 18 பிரசித்தி பெற்ற ஜெயின் கோவில்கள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஜைன மதத்தினர் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் ஏராளமான ஜெயின் கோவில்கள் இருந்த போதிலும் மூடபித்ரியில் உள்ள ஜெயின் கோவில் மிகவும் முக்கியமானது. இந்தக் கோவிலை பார்க்கும்போது, அது இமாலயர்களின் கட்டிடக் கலையை ஒத்திருப்பதைக் காணலாம். நேபாளத்தில் இதுபோன்று கலையம்சத்துடன் கூடிய கட்டிடங்கள் நிறையக் காணப்படுகிறது.

மூடபித்ரியில் உள்ள சந்திரநாதா கோவில் தான் கர்நாடகத்தில் இருக்கும் மிகப்பெரிய ஜெயின் கோவில் ஆகும். இது 1429 முதல் 1430-ம் ஆண்டுக்குள் நாமங்களா தளபதி தேவராய உடையரால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் 1,000 தூண்களைக் கொண்டது. அதில் இரு தூண்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த கோவில் கருவறையில் சந்திரநாத சாமியின் பஞ்சலோக சிலை உள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாசல் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள சுவர்கள், தூண்களில் சாமிகள், இலைகள், பூக்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒட்டகசிவிங்கி, சீன டிராகன் ஆகிய சிற்பங்கள் ஜெயின் வியாபாரிகள் ஆப்பிரிக்கா, சீன நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததை சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இதுதவிர இந்த கோவிலில் விலை மதிப்பற்ற ஆபரணங்களும், ஜெயின் சாமியார்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மங்களூருவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவிலை கண்டுரசிக்கலாம். 

Next Story