நெல்லுக்கு வேலி அமைத்த நெல்லையப்பர் - 27-4-2018 கோவில் கும்பாபிஷேகம்


நெல்லுக்கு வேலி அமைத்த நெல்லையப்பர் - 27-4-2018 கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 April 2018 10:07 AM GMT (Updated: 25 April 2018 10:07 AM GMT)

தென் தமிழகத்தில் தலை சிறந்த சிவ தலங்களில் பெருமை வாய்ந்தது, திருநெல்வேலியில் உள்ள காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில்.

சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை யும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பின. அதற்காக நான்கு வேதங்களும் சிவபெருமானை வேண்டின. எனவே, வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க, இறைவன் லிங்கமாய் அமர்ந்தார் என்பது தலபுராணம் ஆகும்.

ராமக்கோன் என்பவர் தினமும் தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் வளர்ந்திருந்த, மூங்கில் காடு வழியாக மணப்படைவீடு மன்னருக்கு பால் கொண்டு செல்வது வழக்கம். ஒரு முறை பால்குடம் சுமந்து சென்ற ராமக்கோன் காலில் மூங்கில் இடறியது. அதில் அவர் கொண்டு வந்த பால் ஓரிடத்தில் கொட்டியது. பால் முழுவதும் சிந்தும் முன்பாக அதைக் கொண்டுபோய் மன்னரிடம் சேர்த்தார். ஆனால் இந்த நிகழ்வு தொடர்கதையானது. தினமும் குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் இடறி பால் சிந்துவது வாடிக்கையானது.

ஒருநாள் ராமக்கோனிடம் தினமும் பால் குறைவாக கொண்டுவருவது குறித்து மன்னர் கேட்டார். உடனே ராமக்கோன் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து ராமக்கோனுடன் மூங்கில் வனத்திற்குச் சென்ற மன்னர், குறிப்பிட்ட மூங்கிலை வெட்டச் சொன்னார். அப்போது மறைந்திருந்த சிறிய அளவிலான சுயம்பு மூர்த்தி வெளிப்பட்டது. மன்னருக்கு வேணுவனநாதராக காட்சி தந்த இறைவன், சிறிய உருவத்தில் இருந்து பலமுறை வளர்ந்து காட்சி தந்தார். உடனே மன்னர், அதே இடத்தில் ஆலயம் எழுப்புவதாக வேண்டினான். இதையடுத்து சுயம்பு மூர்த்தி மீண்டும் சிறியதாக மாறியது என்கிறது தல வரலாறு. நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்கு பின்புறம் இன்றும் மூங்கில், தல விருட்சமாக நிற்பதைப் பார்க்கலாம்.

சரி.. வேணுவனநாதராக இருந்தவர், எப்படி நெல்லையப்பராக பெயர்மாற்றம் கண்டார் என்பதை அறிய வேண்டாமா? வாருங்கள் அந்தக் கதையைப் பார்க்கலாம்.

இத்தல இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்காக, வேதபட்டர் என்ற அந்தணர், நெல்மணிகளை தர்மம் பெற்று வந்தார். தான் தர்மம் பெற்று வந்த நெல்மணிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது திடீரென பெரும் மழை பெய்யத் தொடங்கியது. நெல்மணி நினைவுக்கு வந்த வேதபட்டர், ‘ஐயகோ! இறைவனுக்காக நான் தர்மம் பெற்று சேகரித்து வைத்திருந்த நெல்மணிகள், மழை வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டால், எப்படி இறைவனுக்கு நிவேதனம் செய்வது?’ என்று நினைத்து வருந்தியபடி, இறைவனிடம் வேண்டினார். பின்னர் அங்கிருந்து அவசரம் அவசரமாக நெல்மணிகள் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு நெல்மணிகள் இருந்த இடத்தில் மட்டும் வெயில் அடித்தது. அதனை சுற்றியப் பகுதிகளில் மழை நீர் வேலி போல தேங்கி நின்றது. இதையடுத்து இத்தல இறைவன் ‘நெல்வேலி நாதர்’ ‘நெல்லையப்பர்’ என்றும், இத்தலம் ‘நெல்வேலி’ என்றும் அழைக்கப்படலானது.

இந்த நெல்லையப்பர் ஆலயம் பல அற்புதங்கள் நிகழ்ந்த தலமாக விளங்குகிறது. சுவேத கேது என்ற அரசன் நெல்லையம்பதியை ஆண்டபடி, அனுதினமும் நெல்லையப்பரை பூஜித்து வந்தான். வாரிசு இல்லாத நிலையில் அவனது இறுதி காலம் நெருங்கியது. இதையடுத்து இறைவனின் ஆலயத்தில் அமர்ந்து சிவபூஜை செய்துகொண்டிருந்தான். அப்போது எமன் வந்து அரசனின் மீது பாசக்கயிற்றை வீச, அது அரசனோடு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், எமனை காலால் எட்டி உதைத்தார். பின்னர் அரசனுக்கு, அவன் விருப்பப்படும்போது முக்தி அடைய அருள்பாலித்தார். நெல்லையம்பதியில் நடந்த இந்த நிகழ்வை, ‘கூற்றுதைத்த நெல்வேலி..’ என்கிற பெரிய புராண பாடல் வரிகளில் சேக்கிழார் பெருமான் பதிவு செய்துள்ளார்.

இந்த ஆலயத்தின் முதலாம் திருச்சுற்றில், சுப்பிரமணியர் சன்னிதிக்கு அருகில் இந்த காலசம்ஹார மூர்த்தியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

திருக்கடையூரில் இறைவன் நிகழ்த்தியது, பிறக்கும் போதே இறப்பின் நாளை தெரிந்து கொண்டு பிறந்த இளைஞனுக்காக எமனை எட்டி உதைத்த திருவிளையாடல். ஆனால் இந்த தலத்தில் இறைவன் நிகழ்த்தியது, முதுமை அடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்க இருந்த பக்தனை, மரண பயத்தில் இருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல். எனவே திருக்கடையூரை காட்டிலும், அன்னை அறம் வளர்த்தவளாகி, அரனை மணந்து, அகத்திய முனிவருக்கு திருக்கல்யாண கோலம் காட்டிய இந்த திருத்தலத்தில், திருமணம், சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் மிருத்யுஞ்சய மகா வேள்வி ஆகியவை செய்வது சாலச்சிறந்தது என்கிறார்கள்.

மேலும் இந்த ஆலயத்தில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும், வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக, தினசரி நிகழ்வு ஒன்று நடக்கிறது. அதாவது இத்தல இறைவனான நெல்லையப்பர், தினமும் அப்பாளுக்கு 6 கால பூஜையின் போதும் பூ மற்றும் புடவைகளை கொடுப்பார். அதே போல காந்திமதி அம்பாள், சுவாமிக்கு நெய்வேத்தியம் (நிவேதனம்) வழங்குகிறார்.

சுவாமி நெல்லையப்பர் சன்னிதியில் இரட்டை கருவறைகள் அமைந்துள்ளன. அதில் பிரதான கருவறையில் நெல்லையப்பரும், அருகில் உள்ள மற்றொரு கருவறையில் நெல்லை கோவிந்தனும் உள்ளனர். இதில் நெல்லை கோவிந்தன் மார்பில் சிவலிங்கம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

தினமும் 6 கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் வசந்த மகோற்சவம் (16 நாட்கள்), வைகாசியில் விசாகத் திருநாள், ஆனியில் பெருந்தேர்த் திருவிழா (10 நாட்கள்), ஆடியில் பூரத்திருவிழா (10 நாட்கள்), ஆவணியில் மூலத் திருவிழா (11 நாட்கள்), புரட்டாசியில் நவராத்திரி விழா (15 நாட்கள்), ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் (15 நாட்கள்), கார்த்திகையில் கார்த்திகை தீபம், சோமவார திருநாள், மார் கழியில் திருவாதிரை விழா (10 நாட்கள்), தை மாதத்தில் பூசத் திருவிழா (10 நாட்கள்), மாசியில் மகா சிவராத்திரி, பங்குனியில் உத்திரத் திருநாள் (10 நாட்கள்) வெகு விமரிசையாக நடைபெறும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 24-ந் தேதி (இன்று) யாகசாலை பூஜை யுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

அமைவிடம்

இந்த கோவில் நெல்லை மாநகரின் மையப்பகுதியில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

- ராமண்ணா


தாமிரசபை

நெல்லையப்பர் கோவில் வரலாற்றில், தாமிர சபை நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தர தாண்டவமும், குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான், நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சி சிறப்பானது. இந்த ஆலயத்தில் தை அமாவாசை அன்று, 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும், பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படும்.

ஆயிரங்கால் மண்டபம்

அம்பாள் சன்னிதி வளாகத்தில் 1,000 தூண்களை கொண்ட ‘ஆயிரங்கால் மண்டபம்’ அமைந்துள்ளது. இந்த மண்டபம் 520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்டது. இந்த மண்டபத்தில், ஐப்பசி திருக்கல் யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் பங்குனி உத்திர திருவிழாவில், பங்குனி உத்திரம் அன்று மன்னருக்கு, சுவாமி செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த மண்டபம் ஆமை ஒன்றால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

ஊஞ்சல் மண்டபம்

அம்பாள் சன்னிதி முன்பு 96 தத்துவங்களை தெரிவிக்கும் வகையில், 96 தூண்களைக் கொண்ட ‘ஊஞ்சல் மண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது. ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பிறகு சுவாமி, அம்பாள் ஊஞ்சலில் ஆடும் ஊஞ்சல் உற்சவமும், ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் இந்த மண்டபத்தில் நடத்தப்படும். இந்த மண்டபத்தை கி.பி. 1635-ம் ஆண்டு சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கட்டினார்.

சோமவார மண்டபம்

சுவாமி சன்னிதியின் வடக்கு பக்கம் ‘சோமவார மண்டபம்’ இருக்கிறது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், நவராத்திரி நாட்களில் நடைபெறும் பூஜைகளும் இந்த மண்டபத்தில் வைத்து செய்யப்படுகின்றன. 78 தூண்களை கொண்ட பெரிய மண்டபம் இது.

சங்கிலி மண்டபம்

சுவாமி கோவிலையும், அம்பாள் கோவிலையும் இணைப்பதாக அமைந்திருப்பதால், இதற்கு ‘சங்கிலி மண்டபம்’ என்று பெயர். 1647-ம் ஆண்டு கட்டப்பட்ட மண்டபம் இது. இந்த மண்டப தூண்களில் காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் ஆகிய சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

மணி மண்டபம்

இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங் குவதால் ‘மணி மண்டபம்’ என்று அழைக்கப்படலாயிற்று. நின்றசீர்நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இது. ஒரே கல்லில் சுற்றிச் சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. எந்த ஒரு சிறு தூணைத் தட்டிப்பார்த்தாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபடும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான ஸ்வரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. இவை அனைத்தும் ‘இசைத்தூண்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில்களில், காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.

வசந்த மண்டபம்

100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடை காலத்தில் வசந்த விழா நடத்தப்படும். இந்த மண்டபத்தை சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலை வனம் 1756-ம் ஆண்டு திருவேங்கட கிருஷ்ண முதலியாரால் அமைக்கப்பட்டது.

Next Story