வேண்டும் வரம் அருளும் பத்ரகாளியம்மன் - 9.5.2018 கயர்குத்து விழா


வேண்டும் வரம் அருளும் பத்ரகாளியம்மன் - 9.5.2018 கயர்குத்து விழா
x
தினத்தந்தி 9 May 2018 7:00 AM GMT (Updated: 9 May 2018 7:00 AM GMT)

தட்சன், தன் மகளான தாட்சாயனியை ஈசனுக்கே மணம் முடித்து தந்தபோதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான்.

நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். ஒருமுறை தட்சன் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்திற்கு சிவனையோ, தன் மகள் தாட்சாயனியையோ அழைக்காமல் தவிர்த்தான்.

இதனால் வெகுண்ட ஈசன், தட்சனின் அந்த முறைகெட்ட யாகத்தை அழிக்க தம்மில் இருந்து வீரபத்திரரை உண்டாக்கினார். அவரது அருகில் இருந்த அம்பாளின் கோபத்தில் இருந்து பத்ரகாளி உருவானாள். வீரபத்திரரும், அவரது துணையாய் உண்டான பத்ரகாளியுமே ஈசனின் கட்டளைப்படி தட்ச யாகத்தை அழித்தனர். ஈசனின் கோபத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரும், அம்பாளின் கோபத்தில் இருந்து தோன்றிய பத்ரகாளியும் ஈசனின் கட்டளைப்படி ஆங்காங்கே உலகம் செழிக்க திருக்கோவில் கொண்டனர்.

அப்படி பத்ரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது, சிவகாசி பத்ரகாளியம்மன் திருக்கோவில். கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு திருக் கரங்களுடன் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள். கருவறையில் வீற்றிருக்கும் இந்த அன்னை, வலது திருப்பாதத்தை தூக்கி குத்துக்காலிட்டு, தனது இடது திருப்பாதத்தை அரக்கனின் தலைமேல் வைத்த வண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

இந்த அன்னையை பவுர்ணமி, அமாவாசை திதிகளிலும், செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் வழிபடுவது சிறப்பு. அந்த நாட்களில் அம்பாள் கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, 8 உதிரி எலுமிச்சைப் பழங்களை அம்பாள் திருப்பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியாபாரத்தில் மிகுந்த லாபம் உண்டாகும் என்பது ஐதீகம். வியாபாரத்தில் லாபம் கண்டவர்கள், அதில் ஒரு குறிப்பிட்டத் தொகையை அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

தன லாபம் கிடைக்கவும், எதிரிகள் தொல்லை அகலவும், சுபகாரிய தடைகள் விலகவும் செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில், தொடர்ந்து 8 வாரங்கள் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி பத்ரகாளி அம்மனை வழிபட வேண்டும் என்கிறார்கள். குழந்தை களின் பாலாரிஷ்ட நோய்களும், திருஷ்டிகளும் இத்தல பத்ரகாளியை வழிபட நீங்குகிறதாம்.

ஆலய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கம்பீரமாக நிற்கிறது. ஆலய வெளிப் பிரகாரத்தில் நாகராஜா, ஐயப்பன், அனுமன், பஞ்சமுக விநாயகர், லட்சுமி நாராயணர் சமேத அஷ்டலட்சுமி சன்னிதிகள் உள்ளன. தல விநாயகர் பஞ்சமுக விநாயகர். இவர் ஆலய வெளி சுற்று பிரகாரத்தில் உள்ளார். இவரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் வழிபட்டு வர, தொடர்ந்து 8 சங்கடஹர சதுர்த்தியில் அருகம் புல் சாத்தி வழிபட வினைகள் அறுபடும்.

அடுத்து, இத்தல வெளிப்பிரகார அஷ்டலட்சுமி சன்னிதிகளும் சிறப்பானவை. இங்கு வெள்ளிக்கிழமை மற்றும் அட்சய திருதியை நாட்களில் பசு நெய் தீபம் ஏற்றி, தாமரை, மரிக் கொழுந்து சூட்டி வழிபட வறுமை அகலும். உட்பிரகாரத்தில் உள்ள பைரவர் சன்னிதியில் தேய்பிறை அஷ்டமி நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது திரண்ட செல்வத்தைப் பெற்று தரும். இத்தல வீரபத்திரர், அனுமன் சன்னிதியில் பவுர்ணமி நாளில் வெண்ணெய் சாத்தி, வெற்றிலை மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நோய்கள், மன நோய்கள் அகலும்.

ஆலய கருவறை வெளி மற்றும் உள் பிரகாரத்தில் கன்னி விநாயகர், பைரவர், வீரபத்திரர், மாடசுவாமி, வெயிலுகந்த அம்மன், இருளப்ப சுவாமி, கருப்ப சுவாமி, பேச்சியம்மன் சன்னிதிகள் உள்ளன. பத்ரகாளியம்மனின் சகோதரி பேச்சியம்மனுக்கு பஞ்சமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 11 பஞ்சமி நாட்களில் சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சித்து வர குழந்தைகள், பெரியவர்களுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பத்ரகாளியம்மனிடம் தொட்டில் பிரார்த்தனை வேண்டிக்கொண்டு, அவளது கருவறை தீபத்தில் நல் லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர, உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இத்தல ஆலயத்தின் உள்ளே பத்ரகாளி அம்மனின் எதிரே உள்ள நந்தவனத்துக்குள், ஆதி பத்ரகாளி பீடம் உள்ளது. முதன் முதலில் இத்தல பத்ரகாளி அம்மன் அமர்ந்த ஆதி பீடம் இதுவாகும். இந்த நந்தவனத்திற்குள் ஆண் களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கு அனுமதி இல்லையாம். உடல் உறுப்புகள் நலம் அடையும் பொருட்டு பத்ரகாளியம்மனிடம் வேண்டிக்கொண்ட பக்தர்கள், அவள் அருளால் நலம் பெற்றதும் மண், வெள்ளியால் ஆன கை, கால் போன்ற உடல் உறுப்புகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். வீடு வாங்குவதற்கு, மண்ணில் செய்த வீடு போன்ற உருவத்தை இங்கு அம்பாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். கார் வாங்க நினைப்பவர்கள், கார் போன்ற பொம்மையை வாங்கி அன்னைக்கு சமர்ப்பிக் கிறார்கள்.

இங்கு சித்திரையில் நடைபெறும் பெருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின் போது, கயர்குத்து திருவிழா, பொங்கல் விழா, தேரோட்டம் போன்றவை நடைபெறும். கயர்குத்து என்பது உடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அன்னையை வழிபடுவது ஆகும். உடல் நோய், கண் திருஷ்டி அகல இந்த நேர்ச்சையை செய்கிறார்கள். கூடவே தங்கள் இடுப்பு பகுதியின் அருகில் ஊசியால் குத்தி நூலை நுழைத்து கட்டி (இப்படி இடுப்பின் இருபுறமும்), பின்பு அந்த நூலை பத்ரகாளி முன்னிலையில் அவிழ்த்து கயர்குத்தினை நிறைவு செய்வார்களாம். இதன் மூலம் தங்கள் உடம்பில் அண்டிய நோய்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நலம் பெறுவதாக நம்பிக்கை.

ஜாதக ரீதியாக லக்னத்தை, செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகத்திற்குரிய குழந்தைகள் துறுதுறுவென இருப்பார்கள். அதுவே ராகு போன்ற கிரகங்கள் பார்த்தால், குழந்தைகளின் பிடிவாதம் பெருகும். பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்புகள் நீங்கவும், இத்தல பத்ரகாளியை அமாவாசை, பஞ்சமி, பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்பது ஐதீகம். இத்தல வெயிலுகந்த அம்மனுக்கு இளநீர், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட வெயிலின் தாக்குதலால் நோய்கள் அண்டாது. மேலும் இத்தல வெயிலுகந்த அம்மனுக்கும், பத்ரகாளி அம்மனுக்கும் தொடர்ந்து 18 நாட்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்டிப்பாக மழைபொழியும் என்கிறார்கள்.

- சிவ அ.விஜய்பெரியசாமி, கல்பாக்கம். 

Next Story