ஜோதிடத்தில் மருத்துவம் : குரு கிரகம் தரும் நன்மை - தீமை


ஜோதிடத்தில் மருத்துவம் : குரு கிரகம் தரும் நன்மை - தீமை
x
தினத்தந்தி 8 Jun 2018 6:32 AM GMT (Updated: 8 Jun 2018 6:32 AM GMT)

நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும்.

 குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான். குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். கட்டுமஸ்தான உடல்வாகு தரக்கூடியவர் குரு. நிரந்தரமான வெற்றி மகுடத்தை சூட்ட வைப்பவர். மறைந்த பின்பும் சிலையாக இருந்து மரியாதை செய்ய வைப்பவர். விசுவாசம் மிக்க உறவுகள் மனைவி, குழந்தைகள் கொடுப்பார். உயிரை கொடுக்கும் நண்பர்களை தருபவர்.

ஒருவர் ஜாதகத்தில் குரு யோகம் பெற்றிருந்தால், அந்த நபரை அரசியலில் உயர் பதவிகள் தேடி வரும். சட்ட நுணுக்கம் தெரிவதும், கோவில் வேத ஆகம விதிப்படி பூஜை புணஸ்காரம் செய்யும் நுணுக்கமான கலைகள் கற்று இருப்பதற்கு குருவே காரணம். வழக்குகள் சாதகமாக அமைய வைப்பது குருவே. அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக்கியம் தருவதும் குரு தான். எல்லா இன்பங்களையும் துறந்து துறவரம் மேற்கொள்ளும் வைராக்கியமான மனதை கொடுப்பவரும் குரு தான். எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லக்கூடிய, மன உறுதியைத் தருபவர். உடலையே மறைக்கும் அளவில் தங்கம் தரக்கூடியவர். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கும் பாக்கியம் தருபவர். விருதுகள் பெற வைப்பது குருவே; செய்த தர்மங்களால் துன்பங்கள் வராமல் காத்து நிற்கும் புண்ணியத்தைத் தருபவரும் குருவே. குழந்தைகள் மேன்மை அடைந்து அவர்கள் மூலம் ஆதாயம் பெற வைப்பதும் குருவே, மனக்கவலை இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவதும் குரு பகவான் தான்.

இனி குரு கிரகத்தால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்ப்போம்.

குருகிரக பதிப்பால் வரக்கூடிய நோய்கள்

உச்சிமூளையில் கட்டிகள் உண்டாவது, பெரிய மூளை செயல் இழப்பது, மூளைக்காய்ச்சல் போன்றவற்றிற்கு காரணமானவர் குரு பகவான். நமது மூளையின் சக்தி தரும் அறிவு, அதன் செயல்பாடுகளை குறித்து கூறுவதும் குரு தான். தசை பிடிப்புகள், தசை வலிகள், உடல் வலி இருந்து கொண்டே இருப்பதற்கும் குரு தான் காரணம். கண்கள் கோணல் மாணலாக இருப்பதற்கும், பெருத்த குண்டான உடலுக்கும், மேல் பற்கள் உதட்டிற்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதும் குருவின் ஆதிக்கத்தால் தான். பெண்கள் கர்ப்பம் தரித்து சிசு வளர்வதற்கு பொறுப்பானவர் குரு தான்.

ஒருசிலருக்கு நோய் தீர்க்க போதிய காலம், நேரம், சூழ்நிலை இல்லாமல் போவது, நோய்கள் போக்க பணம் இன்றி தவிப்பது, புளித்த ஏப்பம், கெட்டவாடையோடு வரக்கூடிய ஏப்பத்திற்கு குருவே காரணம். அடிக்கடி ஞாபக மறதியைத் தருபவரும் குரு தான். மனக்கவலை, நிலையான வாழ்க்கை இல்லாமை, மனதிற்கு பிடிக்காத சம்பவங்களாக நடப்பது அனைத்திற்கும் குரு தான் காரணமாக இருக்கிறார்.

குரு பாதிப்பு விதிமுறைகள்

* குரு பகை ராசிகளில் நின்று இருந்தால், அந்த ஜாதகருக்கு நோய்களால் மன உளைச்சல் உண்டாகும். உடல் வலிகள், தசை பிடிப்புகள் இருக்கும். ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இவர்களது குழந்தைகள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர். தாய் தந்தை மனம் அறிந்து நடக்க மாட்டார்கள்.

* குரு நீச்ச ராசியான மகர ராசியில் நின்று இருந்தால், ‘ஏன் இந்த பிறவி எடுத்தோம்’ என்று வருந்தும் அளவிற்கு நோய்கள் தொல்லை கொடுக்கும். உடல் கெட்டு போக ஜாதகரே ஒரு காரணமாக இருப்பார். அஜீரண கோளாறு இருக்கும். இவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் இருக்காது. அப்படியே குழந்தை இருந்தாலும், அவர்களால் பயன் இருக்காது.

* குரு தன்னுடைய பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால், சுப கிரகமான புதன், சுக்ரன் சேர்ந்து இருப்பது நோய்களின் வீரியத் தன்மையை குறைக்கும் என்றாலும், சர்க்கரை நோய், நரம்பு தளர்வு, ரத்த அழுத்தம் போன்ற பெரிய நோய்கள் தாக்க கூடும். இவர்களது குழந்தைகள் கலைகளில், அறிவில் பெரிய புகழ் அடைவார்கள்.

* குரு தன்னுடைய பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகரின் முகத்தில் மருகு, வடுக்கள் வரலாம். பற்கள் சீராக இல்லாமல் இருக்கும். வயிற்றில் கட்டிகள் தோன்றி மறையும். புதிய நோய்கள் வரக்கூடும். குழந்தைகளின் போக்கும் செயலும் கவலை தரக்கூடும்.

* குரு லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்றிருந்தால், சிறுவயதில் ஞாபக மறதி வரக்கூடும். உடல் வலிமை இருக்காது. விந்து அணுக்கள் குறைவாக இருக்கும். அஜீரண கோளாறு, கல்லீரல் கோளாறு இருக்கும். இவர்களது குழந்தைகள் அன்பு, பாசம், பரிவு இல்லாமல் இருப்பார்கள்.

* குரு 6, 8, 12 ஆகிய இடங்களின் அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, உடலில் கட்டிகள் தோன்றி மறையும். பற்கள், ஈறுகளில் ரத்த கசிவு, பற்கள் சிதைவு உண்டாகும். மூளை கெட்டு போன நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார்கள். தன்னுடைய உடலையே வெறுப்பார்கள்.

* குரு லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ நோய்களின் வீரியம் அதிகமாகும். உடலை பற்றியும் நோய்களை பற்றியும் போதிய அக்கறை இருக்காது. உயிர்கொல்லி நோய், குடல் இறக்கம் என்னும் நோய்கள் வரக்கூடும். குழந்தைகளுக்கு ஆயுள் கண்டம் வரக்கூடும். அடிக்கடி தொற்றுநோய்கள் தாக்கும்.

* குருவே லக்னத்திற்கு பாதகாதிபதியாக இருந்தாலோ, பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ உடல் வலி, எலும்பு முறிவு, முதுகு தண்டுவடம், எலும்புகள் விலகுதல், கணையம், மண்ணீரல் பாதிப்பு அடையும்.

* குருவை பகை கிரகங்கள் மற்றும் பாதகாதிபதி கிரக பார்வை இருந்தால் தொற்று நோய்கள் வரக்கூடும். உடலில் கட்டிகள், வலிகள் இருக்கும். ஜாதகர் செய்யும் தவறுகள் மூலம் சில நோய்கள் வரக்கூடும்.

ஆர். சூரிய நாராயணமூர்த்தி.

குருவிற்குரியவை

காரகன் - புத்திரர்கள்

தேவதை - பிரம்மன்

தானியம் - வெள்ளை கொண்டைக் கடலை

உலோகம் - பொன்

நிறம் - மஞ்சள்

குணம் - சாத்வீகம்

சுபாவம் - சவுமியர்

சுவை - தித்திப்பு

திக்கு - வடக்கு

உடல் அங்கம் - வயிறு

தாது - மூளை

நோய் - வாதம்

பஞ்சபூதம் - ஆகாயம்

பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை முழு பார்வை யும், 3, 10 ஆகிய இடங் களை கால் பங்கும், 4, 8 ஆகிய இடங் களை முக் கால் பங்கும் பார்க்கிறார்.

பாலினம் - ஆண்

உபகிரகம் - எமகண்டன்

ஆட்சி ராசி - தனுசு, மீனம்

உச்ச ராசி - கடகம்

மூலத்திரிகோண ராசி - தனுசு

நட்பு ராசி - மேஷம், சிம்மம், விருச்சிகம்

சமமான ராசி - கும்பம்

பகை ராசி - ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்

நீச்ச ராசி - மகரம்

திசை ஆண்டுகள் - பதினாறு ஆண்டுகள்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு வருடம்

நட்பு கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமமான கிரகங்கள் - சனி, ராகு, கேது

பகையான கிரகங்கள் - புதன், சுக்ரன்

அதிக பகையான கிரகம் - சுக்ரன்

இதர பெயர்கள் - ஆசான், பிரகஸ்பதி, அரகுரு மறையோன், அந்தணன், அரசம், தட்சணன்

நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி


Next Story