அபயமாகும் சிலுவை


அபயமாகும் சிலுவை
x
தினத்தந்தி 13 Jun 2018 5:03 AM GMT (Updated: 13 Jun 2018 5:03 AM GMT)

எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்களை மோசே எனும் தலைவர் மூலமாக இறைவன் மீட்டுக் கொண்டு வந்த கதை அனைவரும் அறிந்ததே. அங்கே மோசேயுடன் துணையாகச் சென்றவர் ஆரோன் என்பவர்.

மோசேயிடம் கடவுள், ‘ஆரோன் உனக்கு வாய் போல இருப்பான், நீ அவனுக்குக் கடவுளாய் இருப்பாய்’ என்கிறார்.

அவர்கள் பார்வோன் மன்னனிடம் செல்ல வேண்டும். இப்போது கடவுள் மோசேயிடம், “உன்னை பார்வோனுக்குக் கடவுளாக ஏற்படுத்துகிறேன்” என்கிறார். பார்வோனின் மனதில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொல்கிறார்.

எகிப்தில் மாந்திரீக செயல்கள் அதிகம். அதுதான் மதம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு மாற்றுச் சிந்தனையாகத் தான் கடவுள் அங்கே ஆச்சரியங்களைச் செய்ய முடிவெடுக்கிறார்.

மோசேயின் கையிலிருந்த கோல் ஒரு அடையாளமாய் இருந்தது. இஸ்ரயேல் மூப்பர்களையும், எகிப்தின் மந்திரவாதிகளையும் நம்ப வைப்பதற்காக அந்தக் கோலை தரையில் போட்டார் மோசே. அது பாம்பாக மாறியது. ஆனால் எகிப்தின் மந்திரவாதிகளும் அதே போல செய்தார்கள்.

ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கி விட்டது என விவிலியம் குறிப்பிடுகிறது. இதன் மூலம், மாந்திரீகமும் அதன் சக்திகளும் கடவுளல்ல. உண்மைக் கடவுளுக்குள் அதெல்லாம் அடக்கம் எனும் சிந்தனை உறுதியாகிறது.

மேய்ப்பனின் கோல், மந்திரவாதியின் கோல்களை அழிக்கிறது. அங்கே பத்து வாதைகள் நிகழ்கின்றன. கடைசியாக தலைச்சன் பிள்ளைகளும் மாண்டு போகின்றனர். ஆனால் இஸ்ரயேல் மக்கள் இழப்புகளின்றி தப்புகின்றனர்.

அதற்காக அவர்கள் பலி செலுத்தி அந்த ரத்தத்தை நிலைக்கால்களில் பூசுகின்றனர். அந்த ரத்தம் இருந்த இஸ்ரயேலரின் வீடுகள் தப்புகின்றன. ரத்தம் மீட்பைக் கொடுத்தது.

இந்த ரத்தம் இருளிலிருந்து விடுதலை அளிக்கிறது. “தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி ரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால் தான்” என்கிறது எபிரேயர் 11:28

ஒட்டு மொத்த மனித சமூகத்திலிருந்து பிரிந்து இறைவனின் அன்போடு இணைந்திருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு உரிமை இது. நாம் புனிதமானவர்கள் என்பதல்ல அதன் பொருள், அவருக்குப் பிரியமானவர்கள் என்பதே அதன் பொருள்.

இறைவனுடைய வார்த்தை வலிமையானது. அது படுபாவிகளையும் மீட்கும் வலிமையும், ஆசையும் கொண்டது. சிலுவையில் இறைமகன் இயேசு சிந்திய ரத்தம் மறைத்துக் காக்கும் ஆற்றல் கொண்டது.

இறைவனின் அன்பையும், இயல்பையும் பல வகைகளில் கூறலாம்.

1. கன்மலை இடுக்கில் மறைத்துக் காக் கிறவர்

“என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்” (விடுதலைப்பயணம் 33:22) எனும் விடுதலைப்பயணம் நம்மை அவர் முழுமையாய் பாதுகாப்பவர் என்பதைச் சொல்கிறது.

சிலுவையை நாம் ஏறெடுத்துப் பார்க்கும் போது இது நம்மைக் காப்பாற்றும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு அவருடைய பரிவும், இரக்கமும் காரணமாய் இருக்கிறது.

2. சிறகு அடியில் புகலிடம் தரும் சிலுவை

“கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.” (திருப்பாடல்கள் 57:1)

இறைவனின் அன்பு, சிறகின் அடியில் பறவை தனது குஞ்சுக்கு தருகின்ற இதமான பாதுகாப்பைப் போன்றது. அழிவுக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் புகலிடமாகும் இடம் இறைவனின் சிறகுகளே. இடர்கள் முழுமையாய் நீங்கும் வரை அது நம்மைக் காக்கிறது.

3. நிழலிலே அடைக்கலம் தரும் சிலுவை

“உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர் என்கிறது சங்கீதம். புயல் காற்றும், கடும் வெப்பமும் அழித்து விடாதபடி நம்மைக் காக்கின்ற நிழல் இறைவனின் அன்பு எனும் நிழல். இந்த நிழலில் அடைக்கலம் கொள்ளும் போது காப்பாற்றப் படுகிறோம். சிலுவையின் நிழல் நம்மை பாவ வெயிலில் இருந்து மனமாற்றத்தின் நிழலில் இளைப்பாற வைக்கிறது.

4. கை நிழலிலே மறைவு சிலுவை

“நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.” (ஏசாயா 51:16)

கைகளின் நிழலில் நம்மைக் காக்கும் கடவுளாக இறைவன் இருக்கிறார். நாம் பாவத்தில் மாண்டு போகாமல் நம்மை அது காக்கிறது. அழிப்பவன் அசுர வேகத்தில் பாய்வான், சிலுவையோ நம்மை நிதானமாய்க் காக்கும். சரணடைதல் ஒன்றே அதை சாத்தியமாக்கும்.

அன்று நிலைக்கால்களில் ரத்தம் பூசப்பட்டதது. இன்று நிரந்தரமாக சிலுவையில் நமக்காய் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்த ரத்தம் தற்காலிக மீட்பைத் தந்தது. இந்த ரத்தம் நிரந்தர மீட்பை நல்குகிறது. 

Next Story