பாவமற்ற வாழ்க்கைக்கான ஒரே வழி


பாவமற்ற வாழ்க்கைக்கான ஒரே வழி
x
தினத்தந்தி 10 Aug 2018 5:37 AM GMT (Updated: 10 Aug 2018 5:37 AM GMT)

வாழ்நாள் முழுவதுமே இன்பத்தை மட்டுமே அனுபவித்தவர் என்று எவருமே சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், மனிதனுக்கு அப்படி ஒரு வாழ்வை இறைவன் நிர்ணயிக்கவில்லை.

வாழ்நாள் முழுவதுமே இன்பத்தை மட்டுமே அனுபவித்தவர் என்று எவருமே சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், மனிதனுக்கு அப்படி ஒரு வாழ்வை இறைவன் நிர்ணயிக்கவில்லை. ‘எவ்வளவு உச்ச அந்தஸ்தைப் பெற்றவர் என்றாலும், அதற்கு ஏற்றபடியான உபத்திரவத்தின் நாட்களையும் சந்திக்க வேண்டியதுள்ளது’ (யோபு-30: 16,27) என்கிறது விவிலியம்.

உலக வாழ்க்கையை இன்ப-துன்பங்கள், சுக-துக்கங்கள் நிறைந்த மாயையான நாட்களாகவே இறைவன் அமைத்துத் தந்துள்ளார். மகிழ்ச்சியான காலங்களில் மனிதன் தன்னைப் புகழவும், தாழ்ச்சி அடையும் காலகட்டங்களில் தன்னைத் தேடவும் அவர் செய்துள்ளார். இதில் துன்மார்க்கன், நீதிமான் என்ற விதிவிலக்கு கிடையாது.

எந்த காலகட்டத்திலும் ஒருவன், தன்னால் படைக்கப்பட்டுள்ள மனசாட்சியின் பாதையில் நடக்க வேண்டும் அல்லது தான் வகுத்துள்ள கிறிஸ்தவ பாதையில் நடக்க வேண்டும். இதுதான் மனித குலத்தைப் பற்றிய இறைவனின் சித்தமாக உள்ளது. ஏனென்றால், இந்த பாதைகள்தான் ஒருவனை பாவமற்ற நிலையில் வாழச் செய்கின்றன.

இவற்றில் ஏதாவது ஒன்றின்படி நடந்து குற்றமற்றவன் என்ற நிலையை எட்ட முயற்சிக்கிறோமா? என்பது ஒவ்வொருவரும் அவரவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

மனசாட்சியின் பாதையைப் பொறுத்தவரை, அது சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதனால் மழுங்கடிக்கப்படும் ஒன்றாகவே காணப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் அரிதாக ஏற்படும் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரும் பாவங்களில் மனிதன் விழுந்துவிடுகிறான்.

ஆனால், மனசாட்சியின்படி நடப்பதால் தனக்கும் பிறருக்கும் ஒருவன் நன்மை அளிக்கிறான். உதாரணமாக, ஒரு பொய்யைச் சொல்லும் இக்கட்டான சூழல் நேரிடும்போது, ‘வேண்டாம்’ என்று மனசாட்சி உபதேசிக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளும் மனது, பொய் சொல்லாமல் அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு அறிவை ஏவுகிறது.

எனவே அந்த அறிவின்படி, தன் மீதுள்ள தவறை ஒப்புக்கொண்டோ அல்லது உண்மையை எடுத்துரைத்தோ அந்த மனசாட்சியுள்ள நபர் செயல்படு கிறார். ஆக, மனசாட்சியின் உபதேசத்தால் ஒரு பொய் கூறப்படாமல் நிறுத்தப் படுவதோடு, பொய்யால் மற்றவர்களுக்கு ஏற்பட இருந்த பாதிப்பு மற்றும் அதனால் வரும் தாக்கம், சாபம் போன்றவற்றுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

உலகின் அனைத்து தரப்பு மனிதனுக்கும் பாகுபாடில்லாமல் இறைவனால் உட்புகுத்தப்பட்டுள்ள கருவிதான் மனசாட்சி. ஆனாலும், பாவங்களை செய்யாதபடி இறைவனால் தரப்படும் உபதேசங்களை மனிதனுக்கு மனசாட்சி சுட்டிக்காட்டத்தான் செய்யுமே தவிர, பாவங்கள் செய்யப்படுவதை தடுக்கும் சக்தி அதற்குக் கிடையாது.

எனவேதான், பாவங்களை விரும்புகிறவர்களும், குற்றங்கள்-பொய்கள்-முறைகேடுகள் மூலம் சுயலாபம் ஈட்டும் நோக்கத்தில் உள்ளவர்களும் தங்களின் மனசாட்சியை எளிதாக புறந்தள்ளிவிட்டு அதுபோன்ற செயல்பாட்டில் இறங்கிவிடுகின்றனர்.

மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சியை இறைவன் பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இதற்காக மனித குலத்தின் அனைத்துத் தரப்புக்கும் ஏற்ற வகையில் கதைகள், நெடுங்கதைகள், சொற்பொழிவுகள், நீதி போதனைகள், வசனங்கள், பாடல்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகள், சித்திரங்கள் போன்றவற்றை சிலர் மூலம் உருவாக்கி அவற்றை அனைவரது காதிலும், மனதிலும், பார்வையிலும், உணர்விலும் விழச்செய் கிறார்.

ஜாதி, மத பாகுபாடில்லாமல் சமுதாயத்தின் அனைத்து தரப்பினருமே இவற்றைக் கேட்கும்போது, மனசாட்சியால் குத்தப்படுகிறார்கள். என்றாலும், பலர் அதை உணர்ந்தும் தங்களின் விருப்பம், உணர்ச்சி மற்றும் சுபாவங்களுக்கு ஏற்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டே செல்கின்றனர்.

மனசாட்சிக்கு எதிராக நடந்துகொள்ளும் ஒவ்வொரு விஷயத்தினாலும் வரும் பாதிப்புகளை அவரும், குடும்ப உறுப்பினர்களும் பிற்காலத்தில் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பாதிப்புகள் நேர்ந்த பிறகும் அதை பல வழிகளில் சரிக்கட்டத்தான் முயற்சிக்கிறார்களே தவிர, அதன் மூலம் புத்தி அடைந்து மனசாட்சியின் வழிக்கு பலர் வருவதில்லை.

அதுபோலவே, இறைநீதியின்படி (கிறிஸ்துவின் போதனைகள்படி) நடக்கும் உண்மையான கிறிஸ்தவனுக்கும் ஏற்ற இறக்கங்கள் நேர்கின்றன. உண்மை கிறிஸ்தவனை நீதிமான் என்று வேதம் குறிப்பிடுகிறது. இயேசு சொன்னபடி ரட்சிப்பின் நிலையை அடைந்த நீதிமான், ஏற்கனவே உள்ள மனசாட்சியோடு இறைவனால் அனுப்பப்படும் பரிசுத்த ஆவியின் போதனைக்கு உட்படுத்தபடுகிறான்.

பரிசுத்த ஆவியின் ஆட்கொள்ளுதலுக்கும், மனசாட்சிக்கும் வித்தியாசங்கள் உண்டு. பாவங்கள் செய்யப்படாத வண்ணம் போதிப்பதோடு, அதை தவிர்க்கக்கூடிய பலத்தையும் அளிக்கும் வல்லமை பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் உண்டு. ஆனால் போதனை அளிப்பதோடு மனசாட்சி நின்றுவிடும்.

எனவேதான், உலகில் ஒருவன் பாவமற்ற பரிசுத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், இயேசு காட்டியுள்ள வழியில் நடந்தால் மட்டுமே முடியும் என்று வேதம் போதிக்கிறது. இது உலகமக்கள் அனைவருக்கும் விடப்பட்டுள்ள அழைப்பு.

மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், நீதிமான் சில நேர்வுகளில் தன்னையும் அறியாமல் சிறிய குற்றங்களை (திட்டமிட்ட கொலை, விபசாரம் போன்றவை தவிர்த்து) உணர்ச்சி வேகத்திலோ, உந்து தலுக்கு உட்பட்டோ செய்யும்போது, பரிசுத்த ஆவி அவனது மீறுதலை அவனது இதயத்துக்கு தெரியப்படுத்துகிறது.

பின்னர் அவனை கண்டிக்கிறது. அதை அவன் உணர்ந்து, யாருக்கு எதிராக மீறுதலில் ஈடுபட்டானோ அவனிடம் சென்று, இயேசு வகுத்துள்ள வழியின்படி ஒப்புரவாகவும் பரிசுத்த ஆவி வழிநடத்துகிறது. அதற்கான காலசூழல்களும் இறைவனால் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அந்த வகையில், நீதிமானின் வாழ்க்கையில், பிதா (இறைவன்), குமாரன் (இயேசு), பரிசுத்த ஆவி என்ற முப்பரிமாணம் (திரித்துவம்) செயல்படுகிறது.

ஆனால் இந்த வாய்ப்பை புறந்தள்ளிவிட்டு மீறுதலில் நீதிமான் தொடர்ந்து ஈடுபட்டால், அவனது ஆத்மா பட்டயத்துக்கு இரையாகும் என்று வேதம் எச்சரிக்கிறது (யோபு36:7-12).

பொருளாதார ஆசையை நோக்கி வழிகளைத் திருப்பிக்கொண்ட பல இறைப்பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் வாழ்க்கையில், தண்டனைகளையும், குறைச்சல்களையும் இறைவன் அனுமதித்ததையும், அதன் முடிவையும் நம்மில் பலர் கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் இருக்கிறோம்.

இதை புரிந்துகொண்டு உடனடியாக நீதிமார்க்கத்துக்கு பக்தர்கள் திரும்ப வேண்டும். பொய்சொல்லி வாங்கியதை எல்லாம் திருப்பிச் செலுத்திவிட்டு, இறைப் பாதைக்கு மீண்டும் வந்தால் அவனது நாட்கள் முழுவதும் நன்மையால் சூழப்படும் என்றும் வேதம் வாழ்த்துகிறது. இதை நாம் அனைவரும் உணர்வோம், திருந்துவோம்.

Next Story