சாரங்கபாணி ஆலய மகிமை


சாரங்கபாணி ஆலய மகிமை
x
தினத்தந்தி 15 Aug 2018 11:19 AM GMT (Updated: 15 Aug 2018 11:19 AM GMT)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது சாரங்கபாணி ஆலயம்.

பிருகு முனிவரின் மகளாக பிறந்த லட்சுமிதேவியை மணம் முடிக்க திருமால் சார்ங்கம் என்ற வில் ஏந்தி வந்ததால், இத்தல இறைவனுக்கு சாரங்கபாணி என்று பெயர் வந்தது. இத்தலத்தில் அருள் புரியும் தாயாரின் திருநாமம் கோமளவல்லி என்பதாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு, ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக் கிறார்கள். இந்த ஆலயத்தின் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கேட்டது ஆயிரம்.. கிடைத்தது நாலாயிரம்

பன்னிரு ஆழ்வார்களும், பெருமாளைப் பற்றி பாடி மங்களாசாசனம் செய்த பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ எனப் படுகிறது. இந்த பாடல்கள் அனைத்தும் கிடைப் பதற்கு காரணமாக இருந்தவர், இத்தல இறைவனே ஆவார்.

ஒரு முறை நாதமுனி என்பவர் சாரங்க பாணியை வழிபடுவதற்காக வந்தார். அப்போது சில பக்தர்கள் இறைவனின் பெருமையை ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று சொல்லி பாடினார்கள்.

இதைக் கேட்ட நாதமுனி, ‘இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?’ என்று வியந்து போய் கேட்டார். மீதி பாடல்களையும் பாடச் சொல்லி கேட்டபோது, அந்த பக்தர்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்கும்’ என்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆனால் கிடைத்தது ஆயிரம் பாடல்கள் அல்ல.. நாலாயிரம் பாடல்கள். அதன்பிறகே அவை தொகுக்கப்பட்டது.

ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘ஆராவமுதாழ்வார்’ என்ற பெயரும் உண்டு.

உத்தான சயனம்

திருமால் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தை ‘சயன கோலம்’ என்பார். இறைவனின் சயன கோலத்தில் பல வகை இருக்கின்றன. அதில் சாரங்கபாணி ஆலயத்தில் ‘உத்தான சயனம்’ என்ற கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். ஒரு முறை இத்தலம் வந்த திருமழிசையாழ்வார், இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், ‘நடந்து நடந்து கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?’ என்று இறைவனைப் பார்த்துப் பாடினார்.

உடனே இறைவன் சற்றே எழுந்தார். அவரின் அருளைக் கண்ட ஆழ்வார் மனம் மகிழ்ந்தார். ‘அப்படியே இரு’ என்று வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிருக்காமல், சற்றே எழுந்த கோலத்தில் இருப்பதையே ‘உத்தான சயனம்’ என்கிறார்கள்.

7 ஆழ்வார்களின் பாடல்

திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோவிலே அதிகஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறது. இத்தல இறைவனை பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய 7 பேர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசர்

தன்னுடைய திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே சென்று ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு தாயாரின் முன்பு தோன்றிய பெருமாள், அவரை மணந்து கொண்டார். பெருமாள் ஒளிந்த இடம், இத்தலத்தில் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் உள்ளது. தாயாருடன் பெருமாள் தனிச்சன்னிதியில் இருக்கும் இடம் ‘மேட்டு சீனிவாசர் சன்னிதி’ என்று அழைக்கப்படுகிறது.

வீட்டோடு மாப்பிள்ளை

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், தாயாரைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். அதற்கேற்றாற்போல தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில்தான் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆலயம் திறக்கும் போது, சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லி தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோ பூஜை தாயார் சன்னிதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னிதியில் நடக்கிறது.

சொர்க்கவாசல் இல்லை

திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். அப்படி சொர்க்கவாசல் இல்லாத ஆலயம் சாரங்கபாணி திருக்கோவில் தான். இத்தல பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக இந்த திருத்தலத்திற்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே பரம பதம் (முக்தி) கிடைத்து விடும் என்ற காரணத்தால் தான், சொர்க்கவாசல் இல்லையாம். மேலும் இங்குள்ள உத்ராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே, பரம பதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு ஏதுவாக தை முதல் ஆனி வரை உத்ராயண வாசலும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசலும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 

Next Story