செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன்
கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர்.
25-8-2018 ஓணம் பண்டிகை
மலையாள தேசத்து அரசன் மகாபலி அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும், நல்லாட்சி செய்து தன் நாட்டு மக்களிடம் நற்பெயரைப் பெற்றிருந்தான். அவனுக்கு மூவுலகையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் திடீரென்று ஏற்பட்டது. அதற்காக அவன், அசுரர் குலக்குருவான சுக்ராச்சாரியாரைக் கொண்டு மிகப்பெரும் வேள்வியை நடத்தத் தொடங்கினான்.
மகாபலி நடத்தும் வேள்வியால், தன்னுடைய இந்திர பதவி பறிபோய் விடுமோ என்று பயந்த இந்திரலோகத்து அரசன் இந்திரன், அந்த வேள்வியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடிவு செய்தான். முதலில், பிரம்மாவுடன் ஆலோசனை செய்த அவன், பிரம்மாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டான். அவர்கள் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் வேள்வியை நிறுத்தி, மூவுலகையும் காப்பதாகச் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.
மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெற்றுச் செல்வதற்காக நின்றிருந்தவர்களின் வரிசையில் போய் நின்று கொண்டார். அவரது முறை வருவதற்கு முன்பாகவே தானம் முடிவடைந்து விட்டது.
அங்கிருந்த மகாபலி, வாமனரைப் பார்த்து, ‘நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றான்.
வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். அப்போது அங்கிருந்த சுக்ராச்சாரியார், ‘நம் வேள்வியை நிறுத்தும் எண்ணத்துடன் மகாவிஷ்ணுவே வாமனர் உருவத்தில் வந்திருக்கிறார். எனவே தானம் செய்து ஏமாற்றமடைய வேண்டாம்’ என்று மகாபலியை எச்சரித்தார்.
ஆனால் மகாபலி, அந்த எச்சரிக்கையை மீறி, வாமனரின் கையிலிருந்த கமண்டல நீரைப் பெற்றுத் தானமளிப்பதாகச் சொன்னான். அதனைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறிச் சென்று, கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்தார். உடனே வாமனர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தினார். அதனால் காயமுற்ற வண்டு உருவிலிருந்த சுக்ராச்சாரியார் கமண்டலத்தில் இருந்து வெளியேறினார்.
மகாபலி வாமனரிடம் இருந்த கமண்டல நீரைப் பெற்று, நிலத்தில் விட்டுத் தானமளிக்கத் தயாரானான். உடனே, வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக மாறி, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்னர், ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார்.
அதனைக் கண்டு வியப்படைந்த மகாபலி, வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.
அப்போது மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.
மகாவிஷ்ணு வாமனத் தோற்றமெடுத்து மகாபலி மன்னனை நிலத்தினுள் அழுத்தி அழித்த இடத்தில் அமைந்ததே திருக்கட்காரை ஆலயம் என்று சிலர் இத்தலத்தின் வரலாறைத் தெரிவிக்கின்றனர்.
இன்னொரு தரப்பினர், மகாபலி அழிவுக்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவை வாமனத் தோற்றத்தில் காண விரும்பியதாகவும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்று வதற்காக மகாவிஷ்ணு இங்கு வாமனர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்றும், கபிலருக்குக் காட்சியளித்த இடத்தில் அமைந்ததே இக்கோவில் என்றும் சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு
மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘வாத்சல்யவல்லி’ (பெருஞ்செல்வ நாயகி) என்று அழைக்கப் படுகிறார். இக்கோவில் வளாகத்தில் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்மராட்சசன், யட்சி ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் இருக்கின்றன.
இக்கோவிலின் எதிர்புறம் மகாபலி அரசன் நிறுவி வழிபட்ட சிவபெருமான் கோவில் அமைந்திருக்கிறது. ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயம், திருக்காட்கரையப்பன் கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்குச் சன்னிதிகள் உள்ளன.
வழிபாடுகள்
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வாமனருக்குப் பால் பாயசம் படைத்தும், சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவோணம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா நாட்களில் சாக்கியார் கூத்து, ஓட்டம் துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.
வழிபாட்டுப் பலன்கள்
இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்னால், பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டிக் கொள்கின்றனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி போற்றியிருக்கிறார். இத்தல இறைவனுக்கு நேத்திரம் பழங்களையே படைத்து வழிபடுகிறார்கள். இங்கு கபில முனிவரால் உருவாக்கப்பட்ட கபில தீர்த்தம் உள்ளது. இதுவே ஆலய தீர்த்தமாக பயன்படுகிறது.
ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை எனுமிடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூர் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது.
அறுவடை திருநாள்
பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பிக்கின்றனர். முன் காலத்தில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.
குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் எந்த கிரகத்தைப் பார்த்தாலும், அந்த கிரகம் சுப பலன்களைத் தந்து விடும். நவக்கிரகங்களில் பூரண சுபகிரகமாக குரு திகழ்கிறார். அந்த குருவின் அம்சமாகத் திகழ்பவர் வாமனர். வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக் கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம். வாமனமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. வாமனருக்குரிய கோவில் கேரள மாநிலம் திருக்காட்கரையில் உள்ளது. வாமனரை மனதில் எண்ணி மற்ற பெருமாள் கோவில்களிலும், திருவிளக்கின் முன்னும் கூட தீபம் ஏற்றி வழிபடலாம். அதன் மூலம் அனைத்து சிறப்புகளும் வந்து சேரும்.
அழகூட்டும் அத்தப்பூக் கோலம்
ஓணம் திருவிழாவினை 10 நாட்களும் வண்ணமயமாக மாற்றுவது அத்தப்பூக் கோலம் என்றால் அது மிகையாகாது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூக் கோலம் முக்கிய இடம் வகிக்கும். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும்.
ஓணம் சத்யா
‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஓண சத்யா’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெற்றிருக்கும். வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடுவக்களி
மலையாளத்தில் ‘களி’ என்பது நடனத்தை குறிக்கும். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனம் ஓணம் பண்டிகையின் 4-ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
இது தவிர கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனம் என 10 நாட்களும் பல போட்டிகள் நடத்தப்படும். இதில் படகுப்போட்டியின் போது அனைவரும் மலையாள பாடலை பாடியபடி துடுப்பை செலுத்துவார்கள்.
யானைக்கு சிறப்பு
கேரள விழாக்களில் யானைகளுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் ஓணம் திருவிழாவிலும் யானைத் திருவிழா நடத்தப்படுகிறது. 10-ம் நாளான திருவோணம் அன்று, விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன கவசங்களாலும், பூ தோரணங்களாலும் யானைகளை அலங்கரித்து வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வருவார்கள். இந்த விழாவில் யானைகளுக்கு சிறப்பு உணவும் உண்டு.
சக்கரவர்த்தியாக பிறந்த எலி
ஜாதி, மதம், மொழி தாண்டி கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா ‘ஓணம்’ பண்டிகையாகும். தமிழ்நாட்டில் சித்திரை போன்று, கேரளத்தில் சிங்கம் (ஆவணி) மாதம் தான் முதல் மாதமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையை புத்தாண்டு கொண்டாட்டமாகவும் சிறப்பிக்கின்றனர்.
சிவன் கோவில் ஒன்றில் இருந்த விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது கோவிலுக்குள் நுழைந்த எலியானது, அந்த விளக்கின் மீது ஏறி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது எலியின் வால் திரியின் மீது பட்டு திரி தூண்டப்பட்டது. இதனால் அந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் செய்த இந்த நற்காரியத்திற்காக அந்த எலியை அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்க சிவபெருமான் அருள்புரிந்தார். தெரியாமல் செய்யும் நல்வினைக்கும் கடவுளின் அருள் மிகப்பெரியதாக அமையும் என்பதையே இந்த புராணக் கதை விளக்குகிறது.
சக்கரவர்த்தியாக பிறந்து நாடு போற்றும் அளவுக்கு இருந்த அந்த சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு ஆட்கொண்டு அருள்புரிந்து வையகம் போற்றும் விதமாக செய்த தினத்தையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். சிங்கம் மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த விழா கேரள மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
இறைவனால் தோன்றிய வாழை
விவசாயி ஒருவர் தன் நிலத்தில் வாழை சரியாக விளையாததால், திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வந்து, மகாவிஷ்ணுவின் கடைக்கண் தன் நிலத்தில் பட வேண்டுமென்று வேண்டினார். மகாவிஷ்ணுவும் தன் பக்தன் நிலத்தைத் தன் நேத்திரத்தினால் (விழியினால்) பார்க்க, புதியதொரு வாழை அங்கு தோன்றியதுடன் விளைச்சலும் அதிகமானது. அன்று முதல் அந்த வாழைக்கு ‘நேந்திரம் வாழை மரம்’ என்ற பெயரும் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
பிரம்மராட்சசன் சன்னிதி
ஒரு விவசாயி நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழைப் பழங்களில் சில தங்கமாக இருந்தன. அந்தத் தங்க வாழைப்பழங்களைக் காட்கரையப்பன் கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார். ஒரு நாள், கோவில் அர்ச்சகர், தங்க வாழைப்பழங்களைச் சன்னிதியில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, தங்க வாழைப் பழங்களைக் காணவில்லை.
இந்தச் செய்தி அந்நாட்டு அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன், சில அரண்மனைக் காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள், கோவிலில் தங்கியிருந்த அப்பாவி யோகி ஒருவரைச் சந்தேகப்பட்டுக் கைது செய்தனர். அரசன் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறையில் யோகியை துன் புறுத்தினர்.
இதற்கிடையில் தங்க வாழைப்பழங்கள் மூலவரின் கருவறையில் பத்திரமாக இருப்பதை அறிந்து, யோகியை மன்னன் விடுதலை செய்தான். ஆனால் செய்யாத தவறுக்காக தண்டனை வழங்கியதை எண்ணி துடித்த யோகி, தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர், பிரம்மராட்சசனாக மாறி, அரசனுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுத்தார்.
மன்னன் தன் தவறை நினைத்து வருந்தியதுடன் திருக்காட்கரையப்பனை வணங்கி, யோகிக்கு கோவில் வளாகத்தில் ஒரு சன்னிதியை எழுப்பினான். அங்கு அவருக்கு தினசரி பூஜை செய்து பிரம்மராட்சசனாக இருந்த யோகியின் கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதி ‘யோகி சன்னிதி’ என்றும், ‘பிரம்மராட்சசன் சன்னிதி’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்கு தினசரி பூஜைகள் நடக்கின்றன.
முப்பெருங்கடவுள் மரம்
திருக்காட்கரையப்பன் கோவில் பிரகாரச் சுற்றில், பெரிய அளவிலான அரச மரம் ஒன்று உள்ளது. இதனை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கின்றனர். இம்மரத்தின் வேர்ப்பகுதி பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சிப்பகுதி சிவபெருமான் என்று நினைத்து, முப்பெருங்கடவுளாக வணங்கி வருகின்றனர். இம்மரத்தடியில் மேடை கட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளிலும், இந்த மரத்தடியில் பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாகர் இனத்துப் பழங்குடியினர் இங்கு ‘புல்லுவன்’ பாட்டைப் பாடிச் சிறப்பிக்கின்றனர்.
Related Tags :
Next Story