கிருஷ்ணனைப் பற்றி..


கிருஷ்ணனைப் பற்றி..
x
தினத்தந்தி 30 Aug 2018 10:18 AM GMT (Updated: 30 Aug 2018 10:18 AM GMT)

மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா பிரசித்தமாக நடைபெறும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும், ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை ‘கோகுலாஷ்டமி’ என்றும் சொல்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

கோகுலாஷ்டமியில் குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை, ‘ராசலீலா’ என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-வது வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

பெண்கள், கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால், திருமண தடைகள் விலகும்.

ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் ‘ஸ்ரீநாத்ஜீ’க்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.

துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு ‘துவாரகீசன்’ என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், பிரதான வாசலின் பெயர் சொர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைத்தாண்டி சென்றால் ‘மோட்ச துவாரம்’ வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.

கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா’ என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ்நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் என்று கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.

கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து, பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.

குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம், ‘பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.

வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.

மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது அந்த இடத்திற்கு மேல், `கத்ர கேஷப்தேவ்’ என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. 

Next Story