இல்லத்தில் குடியேறும் லட்சுமி தேவி


இல்லத்தில் குடியேறும் லட்சுமி தேவி
x
தினத்தந்தி 25 Sep 2018 10:52 AM GMT (Updated: 25 Sep 2018 10:52 AM GMT)

லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும்.

லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

‘ஓம் மகாதேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்நீ ச தீமஹி
தன்னோ லட்சுமி பிரச்சோதயாத்’


இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால், லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

பூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வைத்து, அதற்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இப்படி தன்னை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவி உடனடியாக வருவாள்.

உப்பை நீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யுங்கள். சுத்தம் உள்ள இடத்திற்குத் தான் திருமகள் வருவாள். எனவே இவ்வாறு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும். மேலும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டும்.

திருமகளுக்கு பிடித்த மலர் தாமரைதான். வீட்டில் உள்ள லட்சுமியின் சிலைக்கு, தாமரை விதைகளில் மாலை கோர்த்து வழிபடுவது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பது போன்றதாகும். சோழிகளை நாம் நிறைய முறை பாத்திருப்போம். ஆனால் அதனை பூஜையறையில் வைப்பது லட்சுமி அருளை பெற்றுத்தரும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான். எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

திருமகளுடன் விநாயகரையும் வழிபடுவது, வீட்டில் செல்வம் கொழிக்கச் செய்யும். எனவே லட்சுமியுடன் விநாயகரின் சிலையையும் சேர்த்து வைத்து வழி படுங்கள். அந்த சிலைகள் வெள்ளியில் இருந்தால் கூடுதல் சிறப்பு.

துளசி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. லட்சுமி வசிக்கும் இடமாகவும் துளசி செடி கருதப்படுகிறது. எனவே துளசி செடி முன்பு, நெய் விளக்கேற்றி லட்சுமி மந்திரத்தை சொல்வது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும்.

சங்கு, திருமகளின் கணவரான திருமாலுக்கு பிடித்த ஒன்றாகும். எனவே வீட்டில் தெற்குப்புறம் நோக்கி சங்கில் நீர் நிறைந்திருக்கும்படி வைப்பது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்.

தாமரை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும். எனவே தினமும் லட்சுமி சிலைக்கு முன் இரண்டு நெய் விளக்கேற்றி தாமரை பூக்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இது அனைத்து வளங்களையும் உங்களுக்கு பெற்று தரும்.

புல்லாங் குழலில் ஒரு பட்டுநூலை கட்டி, அதனை உங்கள் பூஜையறையில் லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபடுங்கள். புல்லாங்குழல் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வாறு வழிபடுவது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யும். அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும். 

Next Story