ஆன்மிகம்

சிவபெருமானின் சில அவதாரங்கள் + "||" + Some incarnations of Lord Shiva

சிவபெருமானின் சில அவதாரங்கள்

சிவபெருமானின் சில அவதாரங்கள்
சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் கிருஷ்ண பகவான் எடுத்ததைப் போல, சிவபெருமானும் கூட சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை.
உலக உயிர்களைக் காப்பதற்காக, இறைவன் பூமியில் தோன்றுவதே அவதாரம் எனப்பaடுகிறது. அப்படி சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நந்தி அவதாரம்

நந்தி என்று அழைக்கப்படும் பெரிய காளை, சிவபெருமானின் ஒரு அவதாரமாகவே சொல்லப்படுகிறது. நந்தி வழிபாடு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் உள்ளது. சிவபெருமானே நந்தியாக உருவெடுத்ததாக சில புராணக் கதைகள் சொல்கின்றன. மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.

ரிஷப அவதாரம்

பாற்கடல் கடையும் நிகழ்வுக்குப் பிறகு, கீழ்லோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர். இதனால் சிவபெருமான் தருமம் என்னும் ரிஷப உருவம் கொண்டு, விஷ்ணு பகவானின் மகன்களை அழித்தார். தன் மகன்களை அழித்த, காளையுடன் சண்டையிட வந்தார் விஷ்ணு. ஆனால் அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.

வீரபத்திர அவதாரம்

தட்சன் நடத்திய யாக சாலையில், தன்னையே மாய்த்துக் கொண்டார் சதி தேவி. இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. தன் தலையில் இருந்து சிறிய முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதில் இருந்து வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி தோன்றினர். சிவபெருமானின் கடுமையான அவதாரமாக வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது. மூன்று கடுஞ் சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருப்பவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

அஸ்வத்தாமன்

பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட கொடிய விஷத்தை, சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரியத் தொடங்கியது. அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிவந்தது. அந்த உருவத்திற்கு ஒரு வரமும் கொடுத்தார் ஈசன். ‘பூமியில் துரோணனின் மகனாகப் பிறந்து அனைத்து சத்ரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’ ஆகும்.

கீரத் அவதாரம்

ஒரு முறை அர்ச்சுனன் தவத்தில் இருந்த போது, கீரத் (வேட்டைக்காரன்) உருவம் எடுத்தார் சிவபெருமான். அந்த நேரத்தில் அர்ச்சுனனைக் கொல்ல, ‘மூக்கா’ என்ற அசுரனை அனுப்பி இருந்தான், துரியோதனன். அந்த அசுரன் தன்னை ஒரு காட்டுப் பன்றியாக உருமாற்றிக்கொண்டு அர்ச்சுனனைக் கொல்ல வந்தான்.

ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனின் கவனம், காட்டுப் பன்றியின் சத்தத்தால் சிதறியது. அர்ச்சுனன் கண்ணைத் திறந்து மூக்காவை பார்த்தான். அதன் மீது அம்பு எய்தான். அப்போது மற்றொரு அம்பும் அதன் மீது தைத்தது. அது வேட்டைக்காரன் உருவத்தில் இருந்து சிவபெருமான் எய்த அம்பு ஆகும். யார் முதலில் காட்டுப் பன்றியை வீழ்த்தியது என்ற சர்ச்சை இருவருக்கும் உருவானது. அர்ச்சுனனின் வீரத்தைக் கண்ட சிவபெருமான் அவனுக்கு, பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.

யாதிநாத் அவதாரம்

ஒரு முறை ஆஹூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவன் இருந்தான். அவனும் அவனது மனைவியும் தீவிர சிவ பக்தர்கள். அந்த தம்பதியை, யாதிநாத் அவதாரம் எடுத்து சந்தித்தார் சிவபெருமான். ஆஹூக் தங்கியிருந்த குடிசை இரண்டு பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறிய அளவிலானது. எனவே கணவனும் மனைவியும் வெளியே படுத்துக் கொண்டு, தன் வீட்டிற்கு விருந்தினராக வந்த யாதிநாத்தை வீட்டிற்குள் தங்க வைத்தனர். அன்று இரவு துரதிர்ஷ்டவசமாக வன விலங்கால், ஆஹூக் கொல்லப்பட்டான். அதனால் அவனது மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன் வந்தாள். அப்போது தனது ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன் படி அவர்கள் இருவரும் நளன், தமயந்தியாக பிறந்தனர்.

பைரவ அவதாரம்

ஆதி காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘பைரவர் அவதாரம்’ ஆகும். பைரவராக தோன்றிய சிவபெருமான், பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தார். துண்டித்த பிரம்மனின் தலையை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அதனால் 12 வருடத்திற்கு பிட்சாடனராக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து சுற்றி திரிய வேண்டிய நிலை அவருக்கு உருவானது. பைரவர் வடிவத்தில்தான், அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.

பிப்லாட் அவதாரம்

இந்த அவதார வழிபாடு வடநாட்டில் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு பிப்லாட் என்று பெயரிட்டனர். பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே தாதிச்சி வீட்டை விட்டு சென்று விட்டார். சனி திசையின் காரணமாகவே தனது தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை வளரும்போது பிப்லாட் தெரிந்து கொண்டார். இதனால் சனி பகவானை சபித்தார். அந்த சாபத்தால், விண்ணில் இருந்து மண்ணில் விழுந்தார் சனி பகவான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு, சனியின் சாபத்தை போக்கினார் பிப்லாட். எனவே இவரை வழிபட்டால் சனியின் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.