நன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம்


நன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:55 AM IST (Updated: 10 Oct 2018 11:55 AM IST)
t-max-icont-min-icon

சிவனுக்கு நிகரான சக்தியை வழிபடும் ஒன்பது நாட்களை உள்ளடக்கிய விழாவே நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.

புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில் களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத் திரி விழா, வீடுகளில் கொண்டாடப் படும் பிரம்மோற் சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங் களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத் திரியும் கொண்டாடப் படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண் டாடும் தனிச் சிறப்பு பெற்றது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப் பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும்.

லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரண மாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதா கவும் கூற்று உள்ளது. நவரா த்திரி விழாவை வைணவர் கள் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.

இந்தியா மட்டுமின்றி இல ங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உல கில் உள்ள இந்து மக்கள் ஆகியோ ரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங் கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப் படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.

இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

இவ்விரதத்தை மேற்கொள் ளும் கன்னிப் பெண்கள் திரு மணப் பயனையும், திருமணமா னப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ் ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

ஆண்களும் வழிபடும் விரதம்

நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரத த்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சொல்லப்போனால், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங் களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

மகேஸ்வரி - சிவன்

கவுமாரி - குமரன் (முருகன்)

வைஷ்ணவி - விஷ்ணு

வராஹி - ஹரி (வராக அவதாரம்)

நரசிம்மி - நரசிம்மர்

இந்திராணி - இந்திரன்

இதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.

புரட்டாசியில் நவராத்திரி ஏன்?

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு). கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

அம்மை நோய் தீர்க்கும் அஷ்டமி

நவராத்திரி விரதம் வளர்பிறை பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்), நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் பிடிக்காது என்பதும் ஐதீகம். இது தவிர பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். திருடர்கள் பயம் விலகும். நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் விலகிப் போய்விடும். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிக்கலாம்.

Next Story