இறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்


இறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்
x
தினத்தந்தி 12 Oct 2018 8:11 AM GMT (Updated: 12 Oct 2018 8:11 AM GMT)

மதிய வேளை. வீட்டில் உணவு எதுவும் இருக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள் இறைவனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள். பள்ளிவாசலில் அபூபக்கர் (ரலி) அவர்களைச் சந்திக்கின்றார்கள்.

“என்ன இந்த நேரம் வெளியே வந்துள்ளீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்க, “இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தீர்களோ, அதற்காகவே நானும் வந்துள்ளேன்” என்று அபூபக்கர் (ரலி) பதிலளித்தார்.

“சரி, வாருங்கள் நடக்கலாம்” என்று இருவரும் நடக்க, சற்று நேரத்தில் அங்கே உமர் (ரலி) அவர்களும் வெளியே வருகின்றார்.

“என்ன இந்த நேரம் வெளியே வந்துள்ளீர்கள்?” என்று நபிகளார் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்க, “அல்லாஹ் மீது ஆணை! நீங்கள் இருவரும் எதற்காக வெளியே வந்தீர்களோ, அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்” என்று அவரும் பதிலளித்தார்.

இவர்கள்தான் இஸ்லாமிய உலகின் முப்பெரும் ஆளுமைகள். அன்றைய தினம் இந்த மூவருக்குமே உண்பதற்கு வீட்டில் உணவு எதுவும் இருக்கவில்லை என்பது எவ்வளவு கவலைக்குரிய விஷயம்.

அபூஹைஸம் அல் அன்சாரி (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் மூவருக்கும் விருந்து. பலவகைப் பேரீச்சம் பழங்கள், ரொட்டி, ஆட்டிறைச்சி, குளிர்ந்த நீர் முதலியன விருந்தில் உணவாகக் கொடுக்கப்பட்டன.

அவற்றை உண்டபின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் விசாரணையின்போது இந்த அருட்கொடைகளைக் குறித்து அல்லாஹ் விசாரிப்பான்”.

(அதாவது சற்றுமுன் நாம் பசியோடு இருந்தோம். இப்போது இந்த உணவு நமக்குக் கிடைத்துள்ளது. எனவே இந்த உணவு நமக்குக் கிடைத்தமைக்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தினோமா? புசிக்கும்போது வீணடித்தோமா? இந்த உணவை உண்டபின் கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தின் மூலம் பயனுள்ள விஷயங்களைச் செய்தோமா? என்பது குறித்தெல்லாம் இறைவன் மறுமையில் விசாரிப்பான் என்று பொருள்)

இதனைச் செவியுற்ற உமர் (ரலி) அவர்களுக்கு, ‘இது குறித்துமா இறைவன் விசாரிப்பான்?’ என்று ஆச்சரியம்.

பெருமானார் (ஸல்) அவர்களிடமே விசாரித்தார்: “அல்லாஹ்வின் தூதரே! நாம் புசித்த இந்த உணவு அசுத்தமாகவும், நாம் அருந்திய இந்தத் தண்ணீர் சிறுநீராகவும் உடலில் இருந்து வெளியேறிவிடுகின்றது. இது குறித்துமா அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான்?”

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆம், எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணை! மறுமையில் இந்த அருட்கொடைகளைக் குறித்து நிச்சயம் அல்லாஹ் விசாரிப்பான். சற்றுமுன் வீட்டைவிட்டு நீங்கள் பசியுடன் வெளியே வந்தீர்கள். இதோ இப்போது இந்த அருட்கொடைகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்பதை மறந்துவிடாதீர்கள். “பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைக் குறித்து கட்டாயம் நீங்கள் வினவப்படத்தான் போகின்றீர்கள்” (திருக்குர்ஆன் 102:08) என்று அல்லாஹ் கூறவில்லையா?” (முஸ்லிம், அஹ்மத், நஸாயி)

உணவும் பானமும் இறைவனின் அருட்பேறுகளில் ஒன்று. ஆனால் அது குறித்த சிந்தனை எதுவும் இல்லாமல் எவ்வளவு உணவுகளைத்தான் அன்றாடம் நாம் வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். மறுமையில் இது குறித்த விசாரணை உண்டு என்பது ஏன் நமக்கு இன்னும் உறைக்கவில்லை?

வியாபார நோக்கில் செயல்படும் உணவு விடுதிகளை விட்டுத்தள்ளுங்கள். இந்த உபதேசம் எல்லாம் அவர்களின் செவிகளில் எடுபடாது. நமது வீடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு உணவுகள் அனுதினமும் வீணடிக்கப்படுகின்றது. சாக்கடைகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் கொட்டப்படும் உணவுகளைக் காணும்போது மனம் ஏனோ வேதனையால் அவதிப்படுகிறது.

‘வீணான உணவைக்கூட கொட்டக்கூடாதா?’ என்று புத்திசாலித்தனமகாக் கேள்வி கேட்க வேண்டாம். ‘உணவை ஏன் வீணாக்குகின்றோம்?’ என்பதுதான் இங்கே கேள்வியே. என்றாவது ஒருநாள் வீணானால்கூட பரவாயில்லை. அன்றாடம் கொட்டப்படுவது உணவு குறித்த அலட்சியத்தின் வெளிப்பாடுதானே.

அதிலும் குறிப்பாக, திருமண வீடுகளிலும் விசேஷங்களின்போதும் வீணடிக்கப்படும் உணவுகள்தான் எவ்வளவு? அவற்றைச் சேகரித்து ஏழை எளியோருக்கு வழங்கினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்.

‘பணம் இருக்கிறது, எனவே நாங்கள் செலவு செய்கிறோம். இது எங்கள் பணத்தில் வாங்கிய உணவுப்பொருள். எனவே இதனை நாங்கள் எப்படி வேண்டுமென்றாலும் செலவு செய்வோம்’ என்று கருதினால்... இதைவிட அறிவீனம் வேறொன்றும் இருக்க முடியாது.

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும் நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)

இந்த வசனம் குறித்து முற்கால அறிஞர்களில் ஒருவரான அலி பின் அல்ஹுஸைன் பின் வாகித் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்: “அல்லாஹ் மருத்துவ சிகிச்சை முறை அனைத்தையும் பாதி வசனத்திற்குள் அடக்கிவிட்டான்; அது இந்த வசனம்தான்”.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: “நீ விரும்பியதை உண்ணலாம்; விரும்பியதை அணியலாம். ஆனால், ஒரு நிபந்தனை: விரயமும், கர்வமும் உன்னிடம் இருக்கக் கூடாது”. (புகாரி)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களாவது, ‘விரும்பியதை உண்ணலாம் விரயம் செய்யாதே’ என்று கூறினார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, விரயத்திற்கு கொடுத்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா?

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீ விரும்பிய அனைத்தையும் உண்பதுகூட விரயம்தான்”. (இப்னுமாஜா, தாரகுத்னி)

கவனிக்கத்தக்க மற்றுமோர் விஷயம் என்னவென்றால், ‘விரயம் செய்வோரை இறைவன் விரும்ப மாட்டான்’ என்பதுதான். அனுமதிக்கப்பட்டவற்றிலும், தடை செய்யப்பட்டவற்றிலும் அல்லாஹ் விதித்துள்ள எல்லையை மீறுவோரை அவன் நேசிப்பதில்லை. அப்படி என்றால், இன்றைய திருமண வீடுகள், விசேஷ வீடுகள், விருந்து உபச்சார சபைகள் எல்லாம் அல்லாஹ்வின் நேசம் பெற்றவையா இல்லையா என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

உலக உணவு தினமாக அக்டோபர் 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பசியாலும் பட்டினியாலும் வாடும் ஏழைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்க, உணவை வீணடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்வதுதான் நகை முரண்.

உலகில் 100 கோடி பேர் பசியால் அவதிப்படும் பரிதாபம் ஒருபுறம் இருக்க, வருடம்தோறும் 280 மில்லியன் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன என்று ஐ.நா. உணவு அமைப்பு கூறுகிறது.

எவ்வளவு பெரிய வேதனை..! உணவை வீணடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. நாம் வீணடிக்கும் உணவின் ஒவ்வொரு பருக்கையும் ஏதோ ஓர் ஏழைக்குரிய உணவு என்பதை மட்டும்தான். மட்டுமல்ல, இதுகுறித்தும் மறுமை விசாரணை உண்டு என்பதையும் மறந்துவிடலாகாது.

- மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.

Next Story