கீதையின் பொருள்


கீதையின் பொருள்
x
தினத்தந்தி 24 Oct 2018 10:56 AM GMT (Updated: 24 Oct 2018 10:56 AM GMT)

பகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் ‘இறைவன்’. ‘கீதா’ என்றால் ‘நல்ல உபதேசம்’. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.

 ‘கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள். வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது இதன் தத்துவமாகும். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் ‘கீதா’விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, ‘தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் என்னையே சேரும்’ என்று பகவான் கிருஷ்ணர் கூறினார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.

சன்னிதியை மறைக்கக்கூடாது

ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கில் இருந்து விடும் மூச்சுக் காற்றினால் தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னிதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் அதன் காரணமாகத் தான்.

நெற்றியில் மூன்று பட்டை

கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

அவற்றுள் சில,

1. பிரம்மா, விஷ்ணு, சிவன்

2. சிவன், சக்தி, ஸ்கந்தர்

3. அறம், பொருள், இன்பம்

4. குரு, லிங்கம், சங்கமம்

5. படைத்தல், காத்தல், அழித்தல்.

மங்கள நாயகி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, ‘மந்திரபீட நலத்தாள்’ என்ற திருநாமம் உண்டு. சம்பந்தர் இந்த அன்னையை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது. மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Next Story
  • chat