சரயூ நதி


சரயூ நதி
x
தினத்தந்தி 8 Nov 2018 10:42 AM GMT (Updated: 8 Nov 2018 10:42 AM GMT)

சனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.

தர்மத்தைக் காக்க பகவான் வரவேண்டும் என்று மனதாரக் கூப்பிடுவது மட்டுமே நம் கடமை.

சரயூ நதியின் ஓட்டம் சலனமின்றி இருந்தது.

ஆர்ப்பரிக்கும் அலைகள், அடித்துச் செல்லும் வேகம், துள்ளிக் குதித்து, உற்சாகமாய் ஓடி வரும் மகிழ்ச்சி எதுவும் இல்லை. அதில் ஒரு நிதானம், வேதனை, கலக்கம் ஆகியவை இருந்தது.

சரயூ நதியின் கரை எங்கும் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், அந்தப் பகுதியை வனமாக மாற்றி இருந்தது. அடர்ந்து இருள் படர்ந்த காடு. மரங்கள் நெருக்கமாக, சூரிய வெளிச்சத்தை மறைத்திருந்தது. பழுத்த இலைகள், பூக்கள் உதிர்ந்து அவைகளே ஒரு மெத்தை போல் படர்ந்திருந்தது. பல நூற்றாண்டு களாய் உதிர்ந்து, வளர்ந்து, மறுபடியும் உதிர்ந்து, வீழ்ந்த மரங்கள், பதிவுகளாய் பூமியில் படிந்திருந்தது.

வனத்தில் அலைந்து, திரிந்து வயதாகி இறந்த மிருகங்கள், பிற மிருகங்களால் உணவுக்காக அடித்துக் கொல்லப்பட்ட மிருகங்களின் மிச்சமான உடற்பகுதிகள் எல்லாம் புதைவடிவமாகிக் கிடந்தது.

சரயூ பாறைகளின் வழியே இறங்கினாள்.

குகைக்குள் நுழைந்து, தரையில் மறைந்து, மீண்டும் வெளிப்பட்டு அயோத்தி நகருக்குள் நுழைந்தாள். வரும் வழி எங்கும் அவள் கண்ட காட்சிகள் அவள் மனதைக் கலக்க, அவள் கண்ணீரே நதி நீராகப் பெருகி இருந்தது.

மானசரோவரில் உற்பத்தியாகி, உத்தரகாண்ட்டில் நுழைந்து அயோத்தி வழியாக ஓடி வருபவள் இந்த சரயூ. சிவனின் தலை முடியில் இருந்து உற்பத்தியாகும் கர்வம், பெருமிதம் அவளுக்குள் நிறைந்து இருக்கும். வரும் வழி எங்கும், வனத்தில் பூக்கும் மலர்கள், நதி எங்கும் மிதக்கும். பெண்கள் அவற்றை எட்டி எடுத்து கோர்த்து தலையில் சூடிக் கொள்வார்கள்.

சரயூ நதியின் கரையில் பெண்கள் இனிமையான குரலில் பாடியபடி மஞ்சள் அரைத்துத் தேய்த்துக் குளிப்பார்கள். அவர் களின் குரல் இனிமையும், மஞ்சள் கிழங்கின் நறுமணமும் சரயூவைக் கிறங்கடிக்கும். உற்சாகத்துடன் பொங்கி வரும் நீர்ப் புனலை, பெண்கள் வரவேற்று வழிபடுவார்கள்.

ஆற்றில் பூக்களை விட்டு, தீபங்கள் ஏற்றி, தெய்வமாக வணங்குவார்கள். சில பெண்கள் புடவை, மங்கலப் பொருட்கள் வைத்து ஆற்றில் விடுவார்கள். மக் களுக்கு நதி தெய்வமாக இருந்தது. ‘நதிக்கரையில் பாவங்கள் செய்யக் கூடாது’ என்று நினைத்து ஒழுக்கத்துடன் நடந்தார்கள். அதன் மகிழ்ச்சியே ஆற்றில் நீர் வரத்து குறையாமல் இருந்தது. கரைகளில் விவசாயம் செழித்து வளர்ந்தது. வறுமை என்பதே இல்லை. எங்கும் வளமையே நிறைந்து இருந்ததால் குற்றங்கள் இல்லை.

ஆனால் இன்று?

எங்கும் குற்றங்களே நிறைந்திருக்கிறது. அரக்கர்கள் அதிகரித்து விட்டனர். பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இல்லை. கற்பு சூறையாடப்பட்ட பெண்கள், ஆற்றில் விழுந்து உயிர் துறக்கிறார்கள். மானசரோவர் மிகத் தூய்மையான ஏரி. பல ஆயிரம் அடி ஆழம் என்றாலும், நதியின் அடி வரை துல்லியமாகத் தெரியும் தூய்மை. பளிங்கு போன்ற அந்த ஏரியில் இருந்து கிளம்பி ஓடி வரும் சரயூ, தானும் புனித மாக இருக்க விரும்பினாள்.

ஆனால் இறைவன் சித்தம் வேறாக இருந்தது. அடிக்கடி நதியில் பெண்ணின் சடலம் மிதக்கிறது. அரக்கர்கள் அனுபவித்துக் கொன்று தூக்கி எறியப்பட்ட பெண்களின் உடல், நதியில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்ட பெண்களின் உடல் என்று, தனக்குள் சடலங்களைக் காணும் போதெல்லாம் கலங்கிப் போகிறாள் சரயூ.

இதோ.. இப்போதும் அவளின் ஓட்டம் தடைபட்டது.

“இறைவா” என்று ஒரு பெண்ணின் கதறல். அரக்கன் ஒருவனின் மமதைச் சிரிப்பு. சிறிது நேரத்தில் “தாயே என்னை ஏற்றுக் கொள்” என்று நதியில் ஒரு பெண்ணின் உடல் விழுந்தது. சரயூ கொதித்துக் கொந்தளித்தாள். வானை முட்டும் அளவு அவளின் நீர்த் தாரை எழுந்து பிரவாகம் எடுத்தது. ஆவேசத்துடன், கரை உடைந்து வெள்ளம் பெருகியது. சரயூவைச் சுற்றி இருந்த கிராமங்கள், நகரங்கள் அதில் மூழ்க, அவள் ஆவேசம் அடங்காமல் கடல் போல் பொங்கினாள். அவளின் பிரவாகம் விண் முட்டும் அளவு உயர்ந்தது. பேரிரைச்சலுடன் ஓர் ஆவேசத்துடன் பாய்ந்தாள் சரயூ.

மாடுகள், மனிதர்கள், மரங்கள், குடிசைகள் என்று அடித்து வர, பாகுபாடின்றி கோரத்தாண்டவம் ஆடினாள் சரயூ.

“தாயே இதென்ன கோபம்? ஏன் இந்த ஆவேசம்?”

சர்வலோக சஞ்சாரியான நாரதரின் குரல்.

கோபத்துடன் குமுறினாள் சரயூ “முனிவரே! இதென்ன கொடூரம். நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க யாரும் இல்லையா? அரக்கர்களுக்குப் பயந்து, அவர்களை எதிர்க்கும் துணிவில்லாமல் எல்லோரும் எங்கு போய் மறைந்து கொண்டார்கள்? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? வீரம், கல்வி, செல்வம் என்று வாழ்வின் முக்கியத் தேவைகளுக்கு பெண்ணையே தெய்வமாக வழிபடுபவர்கள், அந்தப் பெண்ணின் மீதே வன்முறை காட்டுகிறார்களே!

அரக்கர்கள் ஈவு இரக்கமற்று மனிதர்களைக் கொன்று குவிக்கிறார்கள். பிறர் வீட்டுப் பெண்களைத் தூக்கி வந்து பலாத்காரமாக அனுபவிக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு இந்த பூமியில் சகல சந்தோஷங்களுடன் வாழ உரிமையில்லையா? அவள் வெறும் போதைப் பொருள்தானா? உயிரை மாய்த்துக் கொள்ளவா அவர்கள் பிறக்கிறார்கள். அவர்கள் என் மடியில் விழுந்து மரணிக்கவா நான் நதியாகப் பாய் கிறேன்? பெண் என்பவள் தாய் அல்லவா?”

சரயூவின் உள்ளக் குமுறலை சிறு புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தார் நாரதர்.

“என்ன சிரிப்பு நாரத முனிவரே? எங்கும் அதர்மம் தலை விரித்து ஆடுகிறதே? இப்படித் தாக்குதல் நடக்கிறதே. இதை கேள்வி கேட்பார் யாரும் இல்லையா?” மீண்டும் சரயூ பொங்கினாள்.

“இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் சரயூ”

நாரதரின் பதிலில் அதிர்ந்தாள் சரயூ.

அவளின் திகைப்பைப் பார்த்து புன்னகையோடு பேசினார் நாரதர், “சரயூ! இது போன்ற வன்முறைகள், அரக்கர்களின் அட்டூழியம் பல யுகங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஒரே விஷயத்தைக் குறிக்கின்றன. எப்போதெல்லாம் தர்மம் குலைகின்றதோ, அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட, தீயவர்களை அழிக்க பரம்பொருள் அவதாரம் எடுக்கிறார். அப்படிப்பட்ட பெருமானை நாம் தரிசிக்கும் நேரம் வந்து விட்டது. அவர் வர வேண்டும் என்று மனதார விரும்பிக் கேட்பது மட்டுமே இப்போது நம் கடமை.

நீ பாக்கியசாலி சரயூ. பரம்பொருள் மகாவிஷ்ணு உன் நதிக் கரையில் தான் ராமனாக அவதாரம் செய்யப் போகிறார். உலகில் சத்தியம், நேர்மை, ஒழுக்கம் தவறாமல் வாழ வேண்டும் என்பதை, தானே வாழ்ந்து காட்டப் போகிறார். அவரின் இறுதி காலம் உன் மடியில்தான் நிகழப் போகிறது. காத்திரு சரயூ! ‘பிறன் மனை விரும்பாதே, தர்மம் என்றும் நம்மைக் காக்கும், மனிதாபிமானம் கொள்ளுங்கள், எல்லோரையும் நேசியுங்கள், பெற்றவர்களின் சொல் பேச்சு கேளுங்கள், பெரியவர்களை மதித்து நடங்கள்’ என்று பல நல்ல விஷயங்களை தன் நடத்தையின் மூலம் சொல்லித் தரப் போகிறார்.

‘ராமா’ என்ற நாமம், நம் பலஜென்மப் பாவனைகளை தீர்க்கப் போகிறது. இம்மையும், மறுமையும் ‘ராமா’ என்ற ஒரு நாமத்தால் தீரும். சரயூ! நம்பிக்கை இழக்காதே. நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். இதை நீ வரும் காலங்களில் உணர்வாய். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, அனுதினமும் நன்றி சொல்.”

நாரதர் மறைந்தார்.

சரயூ பூரித்தாள். அவள் பிரவாகம் வேகமெடுத்தது. நம்பிக்கையும், அன்பும், கருணையும் பெருக அவள் கரைகளை வளப்படுத்தினாள். வரும் வழியெங்கும் வளமையைக் கொண்டு வந்தாள். ராமன் என்ற மகா புருஷனின் வருகைக்காக அவள், தனக்குள் குளுமையும், ஆனந்தமுமாகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

ஜி.ஏ.பிரபா

-தொடரும்.

Next Story