புராண கதாபாத்திரங்கள்


புராண கதாபாத்திரங்கள்
x
தினத்தந்தி 8 Nov 2018 11:58 AM GMT (Updated: 8 Nov 2018 11:58 AM GMT)

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம்.

இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

அர்த்தநாரீஸ்வரர்

சிவனும் பார்வதியும் சரி பாதியாக கலந்த உருவமே ‘அர்த்தநாரீஸ்வரர்’. சிவபெருமானை மட்டுமே வழிபடும் பிருகு முனிவர், ஒரு முறை கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுச் சென்று விட்டார். இதனால் வருத்தம் அடைந்த பார்வதி, பூலோகம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததன் பயனாக, சிவபெருமானின் உடலில் சரிபாதியாக இருக்கும் வல்லமையை அடைந்தார். அர்த்தநாரீஸ்வரர் மூலமாக இறைவன், இந்த உலகத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிறுவுகிறார். மேலும் சிவனும், சக்தியும் ஒன்று, ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதும் இதன் மூலம் சொல்லப்படும் பொருள் ஆகும்.

மாபலி சக்கரவர்த்தி

அசுரர்களின் அரசன் மாபலி. இந்த மன்னன், நாராயணரையே எப்போதும் நினைத்து வழிபட்டு வந்த பிரகலாதனின் பேரன் ஆவார். மாவலி சக்கரவர்த்தி தன்னுடைய வலிமையால், மூன்று உலகங்களையும் ஆட்சி செய்து வந்தார். வளர்ந்து கொண்டே சென்ற மாபலியின் வலிமையால், தனது இந்திர பதவிக்கு ஆபத்து வரலாம் என்று தேவேந்திரன் அச்சம் கொண்டான். அவனது அச்சத்தைப் போக்குவதுடன், மாபலிக்கும் அனுக்கிரகம் செய்ய நினைத்த மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்தார். பின்னர் மாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். அதற்கு மாபலி சக்கரவர்த்தி ஒப்புக்கொண்டதும், விஸ்வரூபம் எடுத்து முதல் அடியால் பூமியையும், இரண்டாம் அடியால் வானத்தையும் அளந்தார். ‘மூன்றாம் அடியை எங்கு வைப்பது?’ என்று வாமனர் கேட்க, தன் தலையில் வைக்கும்படி மாபலி கூறினார். மூன்றாவது அடியை மாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்த வாமனர், அவரை பாதாள உலகத்தில் தள்ளினார்.

சந்திரஹாஷம்

ராவணனுக்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்ட பிறை வடிவ வாளின் பெயர் தான் ‘சந்திரஹாஷம்’.

ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் தான் சிவபெருமான் வசிப்பிடமான கயிலாய மலை இருந்தது. தன் பாதையில் குறுக்கிட்ட மலையை, தன் பலத்தால் தூக்க முற்பட்டான், ராவணன். ஆனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலால் அந்த மலையை அழுத்த, மலையின் அடியில் சிக்கிக்கொண்டான் ராவணன். அதில் இருந்து அவனால் விடுபடமுடியவில்லை.

ஆயிரம் ஆண்டுகள் அவன் அந்த மலையின் அடியில் வதைபட்டான். ஒரு கட்டத்தில் ராவணன் தனது பத்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி, தன் நரம்புகளை எடுத்து தலையோடு இணைத்து வீணை செய்தான். அதில் சாம கானம் இசைத்தான். அந்த இசையில் மயங்கிய சிவபெருமான், அவனை விடுவித்ததுடன், ‘சந்திரஹாஷம்’ என்ற வாளை பரிசளித்தார்.

அப்போது, ‘இந்த வாளை அநீதிகளுக்கு பயன்படுத்தக் கூடாது’ என்று எச்சரிக்கவும் செய்தார். ஆனால் சீதையைக் கடத்திச் சென்றபோது, ராவணனைத் தடுத்த ஜடாயுவை, சந்திரஹாஷ வாள் கொண்டு ராவணன் வெட்டினான். அதனால் அந்த வாள், சிவபெருமானிடமே திரும்பிச் சென்று விட்டது.

பகவத் கீதை

பாண்டவர்களுக்கு குண்டூசி அளவு நிலம் கூட தர முடியாது என்று கூறியதன் விளைவாக, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் மூண்டது. 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரை ‘குருசேத்திரப் போர்’ என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பாக, போர்க்களத்தில் தனது உறவினர்களை எதிர்த்து போரிட அர்ச்சுனன் விரும்பவில்லை. அப்பொழுது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பகவான், கர்ம வினைகளை பற்றி எடுத்துரைத்து அர்ச்சுனனை போருக்கு தயாராக்கினார். அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது. இது 18 பகுதிகளையும், 650 செய்யுள்களையும் கொண்டது.

Next Story