நீங்கள் ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்கள்


நீங்கள் ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்கள்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:07 AM GMT (Updated: 13 Nov 2018 11:07 AM GMT)

உண்மையாகவே நம் அருமை ஆண்டவர் கரத்திலுள்ள சகல ஆசீர்வாதங்களுக்கும் நீங்கள் பாத்திரவான்கள் என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள். இந்த கிருபையை நினைத்து தேவனை ஸ்தோத்தரியுங்கள்.

ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்களாக மாறுவது எப்படி?. உங்கள் விசுவாசத்தை கிரியையில் கொண்டு வாருங்கள்.

‘கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்’. ஆதி.12:4

ஆம், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை மறந்து விடாதீர்கள். வாக்குத்தத்தத்தில் உள்ள சகல ஆசீர்வாதங்களும் உங்களிடத்திற்கு வந்து சேர மிகவும் முக்கியம் உங்கள் விசுவாசமே.

ஆபிரகாம் விக்கிரக ஆராதனை குடும்பத்தில் பிறந்தவன். ஐசுவரியமும் கனமும் இவனுக்குத் தூரமாய் இருந்த காலத்தில் கர்த்தர் இவனை ஆதி.12-ம் அதிகாரத்தில் சந்திக்கிறார். தன்னில் தேவனுடைய ஆசீர்வாதங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக தன் தேசத்தையும், தன் இனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டுப் போக அவன் தயங்கவில்லை. அவனுடைய விசுவாசமும் நம்பிக்கையும் கர்த்தர் மேல் இருந்தது.

உங்கள் விசுவாசத்தை தளரவிடாமல் குழப்பமான நேரங்களிலும், எதிர்மறையான வார்த்தைகள் உங்கள் நாவில் வராதபடிக்கு விசுவாசம் நிறைந்த வார்த்தைகளைப் பேசி தேவனை ஸ்தோத்தரியுங்கள். நிச்சயம் அற்புதங்கள் உங்கள் வாழ்வில் நிகழும்.

விலக்குங்கள்

‘இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம், நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன், நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்’. ஆதி.13:9

வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க ஆபிரகாமும், லோத்தும் புறப்பட்டுப் போகும் பாதையில் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று என ஆதி.13:7 சொல்கிறது.

இந்த வசனத்தை நீங்கள் உற்று நோக்குங்கள். கர்த்தர் சொல்லி, கர்த்தரால் வழிநடத்திக் கொண்டு செல்லும்போது வாக்குவாதங்கள் வந்திருக்கக் கூடாது. ஆனால் அவைகள் சம்பவித்துவிட்டன என நாம் வாசிக்கிறோம்.

இதற்குக் காரணமென்னவெனில் ‘தன்னோடு லோத்தை அழைத்துக் கொண்டு போ’ என்று ஆண்டவர் சொல்லாதபோது ஆபிரகாம் அவராகவே தன்னோடு லோத்தைக் கூட்டிக் கொண்டு சென்றதே.

‘கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான், லோத்தும் அவனோடே கூடப் போனான்’. ஆதி.12:4

வாக்குத்தத்தம் லோத்துக்கல்ல, ஆபிரகாமுக்கு மட்டும் தான். இச்சம்பவத்திலிருந்து நாம் அறிகிறதென்ன, இவ்வுலக வாழ்வின் பயணத்தில் ஆண்டவருக்குப் பிரியமில்லாதவர்களோடு நாம் தொடர்பு வைக்கும்போது தற்போது இனிமையாக இருந்தாலும் நாளடைவில் அவர்கள் நம் ஆசீர்வாதத்திற்கு இடைஞ்சலைக் கொண்டு வருவார்கள்.

ஆகவே, இன்றே கர்த்தருக்குப் பிரியமில்லாதவர்களை உங்களைவிட்டு விலக்குங்கள். ஆதி.13:9 -ல் அவர்கள் பிரிந்து விட்டார்கள் என வேதம் கூறுகிறது. இதைத்தான் ஆண்டவர் உங்களிடத்திலும் எதிர்பார்க்கிறார்.

ஆபிரகாமோடு இடைபட்ட தேவன்

‘லோத்து ஆபிரகாமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்’. ஆதி.13:14

மேற்கண்ட வசனம் மிக முக்கியமானது. லோத்து ஆபிரகாமோடு இணைந்திருந்த வரைக்கும் கர்த்தர் ஆபிரகாமோடு பேசவில்லை. எப்போது லோத்து பிரிந்து சென்றானோ அதற்குப் பிறகு தான் கர்த்தர் மறுபடியும் தனது தொடர்பை ஆபிரகாமோடு ஏற்படுத்தினார்.

உங்கள் ஆசீர்வாதங்களை நீங்கள் அளவில்லாமல் சுதந்தரிக்க தேவன் உங்களோடு இடைபடுதல் அவசியம் தேவை.

ஆகவே, லோத்தின் ஆவிகளைத் துரத்துங்கள். தேவனுக்குப் பிரியமில்லாதவர்களோடு தொடர்பு, அப்படிப்பட்டவர்களோடு ஐக்கியம் இவை அனைத்தும் லோத்தின் சுபாவங்கள் என ஆதி.13:12,13 கூறுகிறது.

ஆபிரகாமின் ஒரே நோக்கம் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிப்பது தான். உங்களின் நோக்கமும் அப்படியே இருக்கட்டும். தீர்மானியுங்கள், நீங்கள்தான் ஆசீர்வாதத்திற்குப் பாத்திரவான்கள், அல்லேலூயா.

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

Next Story