புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...


புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
x
தினத்தந்தி 24 Nov 2018 10:12 AM GMT (Updated: 24 Nov 2018 10:12 AM GMT)

ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.

சூரியன், புதன், சுக்ரன் இந்த மூன்றும், ‘முக்கூட்டு கிரகங்கள்.’ எந்த ஜாதகத்தை எடுத்தாலும், சூரியன், புதன், சுக்ரன் ஆகிய 3 கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களிலேயே இருக்கும். ஆகவேதான் இவை ‘முக்கூட்டு கிரகங்கள்’ என்று சொல்லப்படுகிறது. புதன், சூரியனை விட்டு 29 பாகைக்கு மேல் விலகுவதில்லை. இதை வைத்தே ஒருவரின் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா? என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

நாம் பார்க்கும் ஜாதகத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், புத- ஆதித்ய யோக அடிப்படையில் ஜாதகர் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க வேண்டுமல்லவா?. ஆனால் அப்படிப்பட்ட ஜாதகர்களில் பலர் பள்ளி இறுதிப்படிப்பைக் கூட முழுமையாக முடித்திருக்க மாட்டார்கள். சில குழந்தைகளுடைய தந்தை நல்ல கல்வி பயின்று உயர்ந்த பதவியில் இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் தந்தைக்கு எதிர் மறையாக இருப்பார்கள். குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தமே இருக்காது. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

* சூரியனுக்கு முதல் வட்ட பாதையில் புதன் இருப்பதால், கிரகங்களிலேயே முதல் இடத்தை பெறுகிறார். மனித வாழ்விற்கு தேவையாக முதலிடத்தில் இருப்பதும் கல்வி தான்.

* சூரியனிடம் இருந்து வெளிவரும் அவ்வளவு கதிர்களையும் தன்னகத்தே தேக்கிக் கொள்ளும் தன்மையை புதன் பெற்றுள்ளது. எனவே தான் மனிதனின் நினைவாற்றலுக்கும், புத்திக்கூர்மைக்கும், பொது அறிவிற்கும் புதனையே ‘காரக கிரகம்’ என்கிறோம்.

* ஜோதிடத்தில் தலை பகுதியைக் குறிக்கும் கிரகம் சூரியன். அதற்கு மிக அருகிலேயே சுற்றும் கிரகம் புதன், தலையின் முக்கிய அங்கமாகவும், உடல் இயக்கத்திற்கு மிக முக்கிய அங்கமாகவும் உள்ள மூளையை ஆளுமை செய்வதாகக் கொள்ளலாம்.

* மனித உடல் செயல்பாட்டிற்கு பல உறுப்புகள் காரணமாகிறது. அந்த உறுப்பு செயல்பாட்டிற்கு பல சுரப்பிகள் காரணமாகிறது. மனித மூளையின் அடிப்பகுதியில் சுரக்கும் நாளமில்லா சுரப்பியான ‘பிட்யூட்டரி’ சுரப்பி தான், நினைவாற்றலையும் சிந்தனை நுண்ணறிவையும் தூண்டுவதாக மருத்துவம் கூறுகிறது. இந்தச் சுரப்பியை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் கிரகம் புதன் என்று ஜோதிடம் சொல்கிறது.

நவக்கிரகங்களில் ஒருவரான புதன், ஒரு வகைக்கு இரட்டை நிலை கொண்ட கிரகமாவார். புதன் ராசிநாதனாக இருக்கும் மிதுன ராசியில் இருக்கும் இரட்டையர் குறியீடு இதைத்தான் குறிப்பிடுகிறது. கிரகங்களில் ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அலி கிரகம் என்று புதனைச் சொல்வார்கள். அலி கிரகம் என்பதை எப்படி பொருள் கொள்ள வேண்டும் என்றால், ஆண், பெண் இரண்டு குணங்களும், தன்மைகளும் கலந்த குழந்தைப் பருவத்தை புதன் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

புதனுக்கு ஒரு தனிச்சிறப்பும் உண்டு. அவர் தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபராக இருந்தால் தன்னைச் சுபராகவும், அந்தக் கிரகம் பாபராக இருந்தால் தன்னை பாபராகவும் நிலைமாற்றிக் கொள்வார்.

எழுத்தை ஆளும் கிரகம் புதன் என்பதால், ஒருவர் எழுத்தில் ஆளுமை செய்வதற்கு புதனின் தயவு மிகவும் அவசியம். புதன் வலுப் பெற்றவர்கள், தான் மனதில் நினைக்கும் விஷயத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் வல்லவர்களாக இருப்பார்கள். உலகின் மிகச் சிறந்த கவிஞர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகவே இருப்பர். அதிலும் சுக்ரனுடன், புதன் இணைந்திருக்கும் நிலையில் பிறந்தவர்கள், காதல் கவிதைகளை எழுதுவதில் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஒருவரை பத்திரிகைத் துறையில் ஈடுபடுத்துபவரும் புதன் தான். வலுப்பெற்ற புதன், ஒரு பத்திரிகையை திறம்பட நடத்தும் ஆற்றலைத் தருவார். ஒருவர் ஜர்னலிசம் படிப்பதற்கும், பத்திரிகையில் வேலை செய்வதற்கும் புதன் தான் முதல் காரணம். சடசடக்கும் புத்தம் புதிய காகிதத்தின் மணத்தை நுகர்ந்தபடி நீங்கள் வேலை செய்பவரா? நீங்கள் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர் என்று அர்த்தம்.

அரசியலை அலசுவதற்கும், அதை விமர்சிப்பதற்கும் தேவையான தீர்க்கமான அறிவும், தொலைநோக்குப் பார்வையும் புதனால்தான் தரப்படுகிறது. ‘அரசியலில் நாளை என்ன நடக்கும்?’ என்று சொல்வதற்கு, தன்னைச் சுற்றி நடப்பவைகளை உள்வாங்கி, விருப்பு, வெறுப்பின்றி கணிக்கும் திறன் தேவைப்படும். இந்தத் திறமையைத் தருபவர் புதன்.

‘நாளை என்ன நடக்கும்?’ என்று கணிக்கும் திறனுக்கு புதன் தான் அதிபதி என்பதால், ஜோதிடர்களும் புதனின் ஆதிக்கத்தினுள் வருகிறார்கள்.

புதன் அதிபதியாக இருக்கும் மிதுனம், கன்னி லக்னங்களில் பிறந்தவர்கள் கணிப்புத் திறனுக்கு பெயர் போனவர்களாகவும், அடுத்தவர்கள் எந்தச் சமயத்தில், எப்படிச் செயல்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள்.

ஒருவர் சிற்பியாவதற்கும் முழு முதல் காரணம் புதன் தான். பிரதி பிம்பங்களை உயிருள்ளவை போலக் காட்டும் ஓவியம், சிற்பம் போன்ற துணுக்கமான கலைகள் புதனுக்குச் சொந்தம். அதேபோல கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுப்பவர்களும், புதன் வலுப்பெற்ற மாணவர்கள்தான்.

புதன் கிரகத்தின் இரட்டை நிலையில் இன்னொன்றையும் குறிப்பிடலாம். ஒரு ஜாதகத்தில் புதன் நீச்ச நிலை பெற்று பங்கமாகி, நீச்ச பங்க நிலையில் மீனத்தில் இருந்தால் சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த நபருக்கு கல்வியில் தடை ஏற்பட்டு பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு அமையும்.

அதே நேரத்தில் பள்ளியில் தொடர்ந்து படிக்காத அவர், அனுபவ அறிவில் கல்லூரியில் படித்தவரை விட மேலான நிலையில் இருப்பார். சகல விஷயத்திலும் பாண்டித்யம் பெற்றிருப்பார். மேலும் கல்லூரியில் படிக்காத அவர் சரளமான ஆங்கில அறிவும், பிறமொழி அறிவும் கூட கொண்டிருப்பார். இவையெல்லாம் புதனின் இரட்டை நிலைகளே.

புதன் நாவன்மையை குறிப்பவர் என்பதால் ஒருவர் தனது வாடிக்கையாளருடன் திறமையாகப் பேசி தன் தொழிலை வளர்த்துக் கொள்வதற்கும் புதனே காரணம்.

சூரியனை, புதன் தன்னுடைய முதன்மை நண்பராக கருதுவதால், மிதுனம், கன்னி லக்னக்காரர்களுக்கு சூரிய தசையில் கெடுதல்கள் நடப்பதில்லை. மிகப்பெரிய கல்வி நிலையங்களை நடத்துபவர்களின் ஜாதகங்களில், வலுப்பெற்ற புதன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருப்பார். அதேபோல கல்வி நிலையங்களை நடத்துபவர்கள், அவற்றில் பணிபுரிபவர்களின் ஜாதகங்களில் சொல்லிக் கொடுக்கும் காரகத்துவத்தையுடைய இன்னொரு கிரகமான குருவின் இணைவோ, பார்வையோ, சம்பந்தமோ இருக்கும்.

உறவுகளில் தாய் மாமனைக் குறிக்கும் கிரகம் புதன். ஒருவருக்கு சுபத்துவம் அடைந்த புதன் ஏழாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் அவர் மாமன் மகளையோ, அத்தை மகளையோ வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருப்பார்.

புதன் பலமின்றி இருந்தால், நுண்ணறிவு குறைவானவர்களாக இருப்பார்கள். மனக்குழப்பம் அடைவார்கள். நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும்.

சூரியன் பலமின்றி அமைந்தால், அந்த நபர் ஆன்ம பலத்தை இழப்பார். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும். நிர்வாகத்திறன் குறையும்.

சூரியனுடன் புதன் இணையும்போது அவர் நன்மை தரும் சுபராக செயல்படுவாரா அல்லது தீமை தரும் பாபராக இருப்பாரா என்று கணிப்பதில் சிக்கல் ஏற்படும். அனுபவமுள்ளவர்களையும் தடுமாற வைக்கும். இதை எளிதாக 4 விதிகளின் அடிப்படையில் பலன் கூறி விடலாம்.

* சூரியனுக்கும் புதனுக்கும் பாகை அடிப்படையில் 7 டிகிரி மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும்..

* சூரியன், புதனை நோக்கி சென்றால் தந்தை அதிக புத்திசாலி, கல்வியில் சிறந்து விளங்கியவர். கணித நுண்ணறிவுடையவர், நிர்வாகப் பதவியில் இருப்பார் அல்லது சிறந்த வியாபாரி. அதே போல் குழந்தையும் தந்தைக்கு இணையாக சகல செயல்களிலும் வல்லமை பெறும்.

* புதன் சூரியனை நோக்கி சென்றால் தந்தைக்கு படிப்பறிவு குறைவு, அடிமைத் தொழில், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை. அதே போல் குழந்தைக்கும் கல்வி ஞானக் குறைவு ஏற்படும்.

* சூரியன் புதனை நோக்கி சென்று ஜீவகாரகன் குருவையோ அல்லது கர்ம காரகன் சனியையோ பார்த்தால் இவர்களின் கல்வி, தொழில் பாராட்டுதலுக்கு உரிய வகையில் இருக்கும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி, சேலம்.


Next Story