திருச்செந்தூர் முருகன்


திருச்செந்தூர் முருகன்
x
தினத்தந்தி 26 Dec 2018 6:45 AM GMT (Updated: 26 Dec 2018 6:45 AM GMT)

முருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது.

திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள்.

திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில், விசுவரூப தரிசனம் என்னும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

திருச்செந்தூர் முருகப்பெருமான், தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகார தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒலிக்கப்படும் மணிஓசைக்கு பிறகே, வீரபாண்டிய கட்டபொம்மன் உணவருந்துவார் என்று ஒரு செய்தி உண்டு. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி, தற்போது ராஜகோபுரத்தின் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, முருகப்பெருமான் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில், இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி திருவிழாவின்போது, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு. ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர்.

Next Story