தொடக்க நூல்-ஆதியாகமம்


தொடக்க நூல்-ஆதியாகமம்
x
தினத்தந்தி 8 Jan 2019 6:15 AM GMT (Updated: 8 Jan 2019 6:15 AM GMT)

எபிரேய ஏட்டுச்சுருள்களில் ஒரு வழக்கம் உண்டு. திறந்தவுடன் கண்ணில் படும் அதன் முதல் வார்த்தையையோ, முதல் சில வார்த்தை களையோ நூலின் பெயராக்கி விடுவார்கள்.

அப்படித் தான் பைபிளின் முதல் நூலுக்கும் பெயர் வந்தது. எபிரேயத்தில் இந்தநூலின் முதல் வார்த்தை, ‘பெரிஷித்’ என்பது. அதன் பொருள் ‘தொடக்கத்தில் அல்லது ஆதியில்’ என்பதாகும். அதுவே நூலின் பெயராகி விட்டது.

அது, ‘தொடக்க நூல் அல்லது ஆதியாகமம்’ எனப்பட்டது. இந்த நூலை எழுதியவர் மோசே. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மீட்டுக் கொண்டு வந்த விடுதலை வீரர் மோசே தான் இதன் ஆசிரியர்.

‘டென் கமான்ட்மென்ட்’ எனும் திரைப்படம் பார்த்தவர்களுக்கு மோசே கதாபாத்திரம் பற்றி தெரிந்திருக்கும்.

பைபிளின் முதல் ஐந்து நூல்களையும் எழுதியவர் அவர் தான். இவற்றை ‘பென்டாடூச்’ என்பார்கள். அதற்கு ‘ஐந்து நூல்களின் தொகுப்பு’ என்பது பொருள்.

யூதர்களும் இந்த ஐந்து நூல்களையும் ‘மோசேயின் சட்டங்கள்’ எனும் அடிப்படையில் பயன்படுத்துகிறார்கள். ‘தோரா’ என்று இந்த தொகுப்பு அழைக்கப்படுகிறது. இது யூதர்களுக்கும் புனித நூல்.

கி.மு. 1406-க்கும் 1446-க்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுகள் தான் மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டு பாலை நிலத்தில் வழிநடத்தினார் என்கிறது இறையியல் வரலாறு. அந்த காலகட்டத்தில் தான் இந்த ஐந்து நூல்களும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

மனித வரலாற்றின் முதல் 2000 ஆண்டு கால வாழ்க்கையை இந்த நூல் பதிவு செய்கிறது.

தொடக்க நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இது மோசேயின் காலத்துக்கு முன்னால் ஆரம்பிக்கிறது. சொல்லப்போனால் உலகத்தின் தொடக்கத்திலிருந்து இந்த நூல் தொடங்குகிறது.

உலகம் எப்படித் தொடங்கியது என்பதும், ஒளி, இருள், சூரியன், சந்திரன், நீர், நிலம், பறவைகள், விலங்குகள் என படைப்புகள் எப்படி உருவாகின எனும் அனைத்து செய்திகளும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

கடைசியில் ஆதி மனிதன் ஆதாம் படைக்கப்படுகிறார், பின்னர் ஏவாள் படைக்கப்படு கிறார்.

ஆதாமும், ஏவாளும் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றனர். இதனால் கடவுளின் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

பின்னர் அவர்களுடைய சந்ததி வளர்கிறது. ‘மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களை எல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர் (ஆதி 6:2). மனுக்குலம் வளர்ந்தது, பூமியில் பாவமும் பெருகத் தொடங்கியது.

நோவாவின் காலம் வந்தது. கடவுள் பூமியை வெள்ளப்பெருக்கினால் அழிக்கத் திட்டமிட்டார். நோவா கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒரு பேழையைச் செய்தார். அதில் அவரும் அவரது குடும்பமும், விலங்கின வகைகளும் தப்பின. மற்றவர்கள் எல்லாம் தண்ணீரால் அழிந்து போயினர். புதிதாய் உருவான அந்த சந்ததியும் பாவத்தில் விழுந்தது.

வானுயர கோபுரம் கட்டி தங்களை கடவுளாகக் காட்டிக் கொள்ள மனிதர்கள் நினைத்தனர். அவர்களுடைய கர்வத்தை கடவுள் அழித்தார். ஒரே மொழி பேசிவந்த அந்த மக்கள் வேறுவேறு மொழி பேசும்படி செய்தார். கூட்டம் பிரிந்தது.

அதன் பின் கடவுள் ஆபிரகாம் எனும் தனி மனிதனை அழைத்து, அவர் மூலம் தனக்கு ஏற்புடைய ஒரு சந்ததியை உருவாக்க விரும்பினார். அந்த சந்ததி மூலம் உலகைத் தனக்குரியதாக மாற்ற விரும்பினார்.

அப்படி ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு என சந்ததிகள் இறைவனுக்குப் பிரியமான முற்பிதாக்களால் தலைமுறை தோறும் வளர்ந்தது. அந்த யோசேப்பின் மரணத்துடன் இந்த நூல் நிறைவடைகிறது.

இந்த நூல் மோசே பிறப்பதற்கும் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவடைகிறது. இந்த நூலை மோசே இறைவனின் ஏவுதலால் எழுதினார், அல்லது முற்பிதாக்களின் வரலாறுகளைக் குறித்த பதிவுகளை யாரோ மோசேயிடம் கொடுத்துவிட அதை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதினார்.

ஆதியாகமம் விவிலியத்தின் மிக முக்கியமான நூல். இறைவனுக்கு மனிதனோடு உள்ள அன்பு, மனுக்குலத்தின் மீதுள்ள அன்பு, தனக்குரிய மக்களாக மனிதர்களை மாற்றவேண்டும் எனும் ஏக்கம், தன் மக்களுக்காக இறங்கி வரும் இரக்கம் என இறைவனின் இயல்பை இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரே கடவுள் தான் உண்டு என்பதை இந்த நூல் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது. அந்த இறைவனின் பிரமாண்டத்தையும், எளிமையையும் ஒரு சேர படம்பிடிக்கிறது. ‘ஏழு’ எனும் எண் சிறப்பானது என்பதை இந்த நூல் பல நிகழ்வுகளின் மூலம் விளக்குகிறது.

ஆதியாகமத்தில் மனிதர்களுடைய வாழ்க்கை இறைமகன் இயேசுவின் வாழ்க்கைக்கு நிழலாக, பூடகமான இருப்பது கவனிக்கத்தக்கது. இறைமகன் இயேசுவிற்கு முன் அடையாளமான ‘மெல்கிசெதேக்’ ஆதியாகமத்தில் தான் வருகிறார்.

இலக்கிய ரீதியாக இனிமையான, செழுமையான நூல் ஆதியாகமம். விவிலியம் எனும் நூலைபுரிந்து கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் ஆதியாகமத்திலிருந்து தான் துவங்கவேண்டும். ஆதியாகமத்தை நம்புவதில் அடங்கியிருக்கிறது கிறிஸ்தவ ஆன்மிகத்தின் உயர் நிலை.

(தொடரும்)

Next Story